டாக்டர் எனக்கு ஐந்து ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. தற்போது என்னுடைய சர்க்கரை அளவு மிக அதிகமாக இருக்கிறது. இதற்காக என் மருத்துவர் இன்சுலினைப் பரிந்துரைத்திருக்கிறார். இன்சுலின் எடுக்க ஆரம்பித்தால் வாழ்நாள் முழுக்க எடுத்துக் கொள்ள வேண்டயிருக்கும் என்று எனக்கு தெரிந்தவர்கள் பயமுறுத்துகிறார்கள். இது உண்மையா உங்கள் ஆலோசனை என்ன என்று என்னிடம் ஒருவர் கேட்டார்.

ரத்தத்தில் சர்க்கரை அளவு ஒருசிலருக்கு கட்டுப்பாட்டை மீறி அதிகரித்து விடுகிறது. இதை குளுக்கோடாக்ஸிசிட்டி என்கிறோம். இது ரத்த நாளங்கள் முதல் இதயம், சிறுநீரகம், நரம்பு என உடலின் பல முக்கிய உறுப்புகளையும் பாதித்து விடுகிறது. இந்த நிலையைத் தடுக்க, நோயாளிக்கு குளூக்கோடாக்ஸிசிட்டி உள்ள காலத்தில் இன்சுலின் பரிந்துரைக்கப்படும்.

ஹெச்.ப.ஏ.1சி பரிசோதனை என்பது கடந்த மூன்று மாதங்களில் சர்க்கரை அளவு எவ்வளவு இருந்தது என்பதை கண்டறிய பயன்படுகிறது. இதன் மதிப்பு 9க்கு மேல் இருந்தால் அவர்களுக்கு இன்சுலின் கொடுப்பதன் மூலம் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடியும். சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி அடுத்த முறை பரிசோதனை செய்யும்போது இதன் மதிப்பு 7 என்று வந்தால், டயட், உடற்பயிற்சி என்று ஆரோக்கியமான வாழ்க்கை முறை வாழ்பவர்களுக்கு இன்சுலின் எடுப்பதை நிறுத்த டாக்டர் பரிந்துரைப்பார். எனவே, இந்த விஷயத்தில் நண்பர்கள், உறவினர்கள் சொல்வதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். டாக்டர் என்ன சொல்கிறாரோ அதைப் பின்பற்றுங்கள்.

– டாக்டர் க.பரணீதரன், சர்க்கரை நோய் சிறப்பு நிபுணர்.