கலைமாமணி டாக்டர் எஸ்.அமுதகுமார், MBBS,MCIP,PG. Dip.Diabetology, F.C.G.P.

டம்பை பொறுத்தவரை சிறுநீரகம்(Kidney) நிஜமாவே ஒரு முக்கியமான உறுப்பு!

நம்மில் பலர் இதயம், மூளைக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை சிறுநீரகத்திற்குத் தருவதில்லை. ஆனால், அது செய்யும் வேலைகளைப் பார்த்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

ரெண்டு நாளா ஒண்ணுக்கு போகலை, அடிவயிறு கல் மாதிரி இருக்கு…

சொட்டு, சொட்டாத்தான் ஒண்ணுக்கு போகுது! ரொம்ப கஷ்டமா இருக்கு…

சிறுநீர் கழிக்கும்போது ரொம்ப எரியுது…

மஞ்சள் கலர்ல சிறுநீர் போகுது…

இப்படி சிறுநீர் கழிப்பதில் சில பிரச்னைகள் இருப்பதை ஆணும், பெண்ணும் ஆங்காங்கே சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

மனிதனுக்கு இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன. இரண்டிலிருந்தும் 24 மணி நேரமும் சொட்டுச் சொட்டாக வடிந்து கொண்டிருக்கும் சிறுநீர், தொப்புளுக்குக் கீழே அடிவயிற்றின் உள்பகுதியிலுள்ள சிறுநீர்ப்பையில் வந்து சேருகிறது.

சிறுநீர் ஒழுங்காக சேர்ந்து,சீராக உடலைவிட்டு வெளியே போய்க்கொண்டிருக்கும் வரை, சிறுநீரைப் பற்றியோ, சிறுநீரகம்,
சிறுநீர்ப்பை முதலியவைகளைப் பற்றியோ யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. ஆனால்,ஒரே ஒரு நாள் ஒரே ஒரு வேளை சிறுநீர் வெளியேறவில்லை என்றால்,அந்த நபர் படும்பாடு சொல்ல முடியாதது.அந்த அளவுக்கு சிரமத்தை அனுபவிப்பார்கள்.

சிறுநீர் ஒழுங்காக போகவில்லை என்பது மட்டுமல்ல பிரச்னை.சிறுநீர் அதிகமாகப் போகிறது,அடிக்கடி போகிறது,சிறுநீரை அடக்க முடியலை,முக்கி முக்கித்தான் சிறுநீரை வெளியேற்ற வேண்டியதிருக்கிறது…இப்படி அதிலே ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கின்றன.

பிறந்த குழந்தை முதல் வயதான முதியவர் வரை அனைவருக்கும் சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீர் வெளியேறுவது இயற்கையானது; இயல்பானது. அதற்கு எந்த மருந்தும், மாத்திரைகளும் தேவையில்லை. அதுபோன்று மனிதருக்கும் சில விலங்குகளுக்கும், சிறுநீர் கழித்தல் என்பது அவரவர்/ அதனதன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஒரு விஷயம்தான்.

சிறுநீர் கழிப்பது என்பது நமது கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய ஒரு விஷயம் என்று ஏன் சொல்கிறேன் என்றால்,நாம் விரும்பினால் உடனே சிறுநீர் கழிக்கலாம். விரும்பாவிட்டால் சிறிது நேரம் தள்ளியும் வைக்கலாம். இதெல்லாம் நமது கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதே!நமது கட்டுப்பாட்டில் இல்லாமல், நினைத்த நேரமெல்லாம் சிறுநீர் போய்க்கொண்டிருந்தால்,உடலில் பிரச்னை அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம்.

ஒரு நாளைக்கு 6 அல்லது 7 முறை சிறுநீர் கழிப்பது என்பது சரியானது. சிறுநீர் கழிக்கும் நேரம் என்பது 2 நிமிடத்துக்குள் இருக்கவேண்டும். சிறுநீர் போவதற்கு நிறைய நேரம் எடுத்துக்கொண்டால்,உடலில் பிரச்னைகள் இருக்கலாம் என்று கருதலாம்.

சிறுநீர்ப்பையின் கொள்ளளவு சுமார் 400 மி.லி!ஆனால், 600 மி.லி.முதல் 800 மி.லி வரைகூட தாங்கும். சிறுநீர்ப்பை விரிந்து கொடுத்து இந்த அளவுக்கு சிறுநீரை தேக்கிவைக்கும் சக்தி கொண்டது.

ஆனாலும், வயதாகும்போது சுமார் 300 மி.லி வரை சேர்ந்துவிட்டாலே சிறுநீர் கழிக்கவேண்டும் என்கிற உணர்வு வந்துவிடும்.

அதிக நாட்கள் தொடர் பிரயாணம் செய்பவர்களுக்கும், ஆபரேஷன் முடிந்து வீட்டுக்கு வந்தவர்களுக்கும், நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும்,சிறுநீர் கழிப்பது மிகப்பெரிய பிரச்னையாக இருக்கும்.இப்படிப் பிரச்னையில் கஷ்டப்படுபவர்களை பாத்ரூமில் கொண்டுபோய் நிற்கவைக்கவேண்டும்.தண்ணீர் குழாயைத் திறந்துவிட்டு, தண்ணீரை கொட்டிக்கொண்டே இருக்கச் செய்யவேண்டும். சிறுநீர் கழிக்க சிரமப்படுகிறவர், அதைப் பார்த்துக்கொண்டே இருந்தால்,சிறிது நேரத்தில் அவர் தானாகவே சிறுநீர் கழிக்கும் சூழ்நிலை உருவாகிவிடும்.

இதேபோல் வெந்நீர் நிரப்பப்பட்ட ஒரு வாளிக்குள் கையை முக்கி வைத்திருந்தால் கூட,கொஞ்ச நேரத்தில் தானாகவே சிறுநீர் போக ஆரம்பித்து விடுவார்.நரம்பு மண்டலத்தின் தூண்டுதலினால் ஏற்படும் இயற்கையான செயல்கள் இவையாகும்.

சிறுநீர் கழிப்பது என்பது அன்றாடம் நடக்கவேண்டிய ஆரோக்கியமான, இயற்கையான விஷயம் என்றாலும்,நாம் உண்ணுகின்ற உணவிலுள்ள சில பொருட்களும் இந்த விஷயத்தை ஊக்கப்படுத்துகின்றன.தாகம் அதிகம் எடுக்கக்கூடிய உணவுகளை சாப்பிட்டால், தண்ணீர் அதிகம் பருகவேண்டியதாகிவிடும்.தண்ணீர் அதிகம் குடிக்கும்போது, சிறுநீர் வெளியேறுவதும் அதிகமாகும்.

கிரன்பெர்ரி பழம் என்று வெளிநாட்டினர்களால் அழைக்கப்படும் ப்ளம்ஸ் பழத்தில் நார்ச்சத்தும், பொட்டாசியமும் அதிகமாக இருக்கிறது. வாழைப்பழத்திலும் பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது. சிறுநீர்ப்பை உறுதியாகவும், பலமாகவும் இருக்க பொட்டாசியம் மிக அவசியம்.ஆகவே கிரன்பெர்ரி பழச்சாறு, வாழைப்பழம், யோகர்ட் போன்றவை சிறுநீர் சீராக வெளியேற உதவி செய்யும்.

பாதாம் பருப்பு, பச்சைத் தேங்காய், முள்ளங்கிக் கீரை, எள்,ப்ளாக்ஸ் விதை,பூண்டு, சுத்தமான தேன், கரும்பு ஜூஸ்,கேரட் ஜூஸ் போன்றவையும் சிறுநீர் சீராக வெளியேற உதவும்.

அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுபவர்களுக்கு சிறுநீர் வெளியேறுவதிலும் பிரச்னை ஏற்படும். மலச்சிக்கலினால், பெருங்குடல் வழக்கத்தைவிட சற்று பெரியதாக இருக்கும்.இதனால் பெருங்குடலை ஒட்டியிருக்கும் சிறுநீர்ப்பைக்கு அழுத்தம் ஏற்படும். சிறுநீர்ப்பையில் அழுத்தம் ஏற்பட்டால்,சிறுநீர் சரியாக,ஒழுங்காக வெளியேறாது. எனவே மலச்சிக்கலை சரிசெய்தால், பெருங்குடல் சீராகி வீக்கம் போய்விடும், சிறுநீர்ப்பையிலும் அழுத்தம் ஏற்படாது.

அதனால், மலச்சிக்கல் இருப்பவர்கள் பார்லி,பழுப்பரிசி, ஓட்ஸ்,ஆப்பிள், கேரட், முட்டைகோஸ், உலர்ந்த பழங்கள், பச்சைக் காய்கறிகள் போன்ற நார்ச்சத்து அதிகமுள்ள உணவுப்பொருட்களை அன்றாட உணவில் உட்கொள்ளவேண்டும்.இதனால் சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் சிக்கலும் நீங்கும்.

தண்ணீரை போதுமான அளவு குடித்து,சிறுநீர் நன்றாக வெளியேறினாலே சிறுநீரகப்பாதையில் எந்த நோயும் ஏற்படாது. போதுமான அளவு தண்ணீர் தினமும் குடிக்கிறீர்கள் என்றால், தேவையான அளவு தண்ணீர் உங்கள் உடலில் இருக்கிறதென்றால்,உங்கள் சிறுநீர், நிறமற்ற தண்ணீர் மாதிரியோ அல்லது மிகமிக லேசான மஞ்சள் நிறத்திலோ (வைக்கோல் நிறத்தில்) இருக்கும்.அதிக அடர்த்தியான அளவில்,அதிக மஞ்சள் நிறத்தில் உங்கள் சிறுநீர் இருந்தால்,உங்கள் உடலில் போதுமான அளவு தண்ணீர் இல்லையென்று அர்த்தம்.

சிறுநீர் கலங்கலாகவும், ரொம்ப அடர்த்தியாகவும், நாற்றத்துடனும் இருந்தால் உடனே உங்கள் குடும்ப டாக்டரைப் பார்க்க வேண்டும்.அதிக காரமுள்ள உணவுகளை சாப்பிட்டால் வாயில் மட்டும் எரிச்சல் ஏற்படாது. சிறுநீர்ப்பையிலும் எரிச்சல் ஏற்படும்.

சில உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் சிறுநீர் வெளியேறுவதில் பிரச்னை தோன்றும்.காபி, மது,தக்காளி, சர்க்கரை போன்றவைகளை அதிகம் உணவில் சேர்க்காதீர்கள்.

இரவில் அடிக்கடி எழுந்துபோய் சிறுநீர் கழிக்கிறீர்கள் என்றால், படுக்கப்போவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே தண்ணீர் குடிப்பதை நிறுத்திவிடுங்கள்.

வெளியிடங்களுக்கு செல்லும்போது சிறுநீர் கழிக்க விரும்பவில்லை என்றால், வெளியில் போகிற நேரத்தில் தண்ணீர், காபி, குளிர்பானங்கள் ஆகியவற்றைக் குடிக்காதீர்கள்.ஒரே நேரத்தில் தண்ணீர் அதிக அளவில் குடிப்பதைத் தவிர்த்து,சிறிய அளவில் கொஞ்சம் கொஞ்சமாக பருகுங்கள்.

காபியில் உள்ள காபின் என்கிற பொருளுக்கு சிறுநீரை அதிகமாக வடிகட்டும் சக்தி உண்டு.ஒரு கப் காபியில் சுமார் 180 மில்லி கிராம் வரை காபின் இருக்கிறது. 100 மி.கிராமுக்கு குறைவாக ஒரு நாளைக்கு காபின் உடலில் இருக்கிற மாதிரி பார்த்துக்கொண்டால்,சிறுநீர் பிரச்னைகள் ஏற்படாது. வாழைத்தண்டு சாறில் நார்ச்சத்தும், பொட்டாசியமும் அதிகமாக இருக்கிறது.எனவே இது மலச்சிக்கல், சிறுநீரகப் பிரச்னை ஆகிய இரண்டையும் சரிசெய்யும் தன்மைகொண்டது.

ஒரு கைப்பிடி அளவு பனை வெல்லமும் அதே அளவு சமையலுக்குப் பயன்படுத்தும் புளியையும் எடுத்து தண்ணீரில் அரைமணி நேரம் ஊறப்போட்டு, பின்பு அதை கையால் நன்றாகப் பிசைந்து,கரைத்து, வடிகட்டி,அதனுடன் ஒரு செம்பு அளவு குடிதண்ணீரை சேர்த்து கலக்கி, மாதம் ஒரு முறை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், சிறுநீரகப் பாதையில் வரும் சிறிய சிறிய பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

சிகரெட் அதிகமாக புகைக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு சிறுநீர்ப்பை புற்று நோய் வர அதிக வாய்ப்புண்டு. எனவே சிகரெட் சம்பந்தப்பட்ட விஷயங்களை அறவே நிறுத்த வேண்டும்.

சிறுநீரகங்களும், அது தொடர்புடைய உறுப்புகளும் நமது கண்களுக்குத் தெரியாத இடத்தில் இருந்தாலும் நாம் அதன் மீது முழுக் கவனம் வைக்கவேண்டும். நுட்பமான அந்த உறுப்புகளின் செயல்பாட்டிற்கு துணைபுரியும் உணவுகளை உண்ணவேண்டும்.

சிறுநீரகம் மிகவும் முக்கியமான உறுப்பு. அமைதியாக செயல்படுகிறது… நமது உடல் ஆரோக்கியம் காக்கும் அற்புதமான உறுப்பு.