– டாக்டர் என்.என்.கண்ணப்பன், எம்டி,டிவி, பாலியல் நிபுணர்

உணர்வுரீதியான ஆதரவு, நிதிப் பாதுகாப்பு என, பல்வேறு காரணங்களுக்காகத் திருமணம் செய்து கொள்கின்றனர். சிலர், தங்களது மகிழ்ச்சியற்ற குடும்ப வாழ்வில் இருந்த தப்பிக்க, அன்புக்காக, சமூகத்துக்கு கட்டுப்பட்டவர்களாகத் திருமணம் செய்து கொள்கின்றனர். இந்தக் காரணம் ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும். சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்கள்கூட பொருத்தமாக இருக்கும். திருமணம் செய்யாமல் நண்பர்களாக இணைந்து வாழ நினைத்தால், நட்பில் இருவரும் ஒருவிதத் தொடர்பில் இருப்பீர்கள். இருப்பினும், திருமணம் அதையும் தாண்டி ஒரு மேன்மையான நெருக்கத்தை ஏற்படுத்தும். திருமணத்தின் மூலமாகத்தான் தாம்பத்யத்தில் அன்யோன்யம் கிடைக்கும்.

காதல் திருமணம், பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் திருமணம் இரண்டிலும் சாதக பாதகங்கள் உள்ளன. ஏதேனும் ஒன்று சிறந்தது. இன்னொன்று மோசமானது என்று சொல்வதற்கு இல்லை. பிரச்னையை எப்படி இருவரும் கையாள்கின்றனர் என்பதைப் பொறுத்துதான் மகிழ்ச்சியான வாழ்க்கையா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும்.

திருமணம் செய்ய ஏற்ற காலம் மற்றும் ஆணுக்கும் பெண்ணுக்கும் எவ்வளவு வயது வித்தியாசம் இருக்க வேண்டும் என்று பார்த்தால், இது அவரவர் உடல் தகுதியைப் பொறுத்தது. ஆண், பெண் இருவரும் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் தயாராகி விட்டால், திருமணம் செய்து கொள்ளலாம். இருப்பினும், நம் நாட்டில் திருமண வயது தொடர்பான சட்டம் உள்ளது. இதன்படி, பெண்ணுக்கு 18 வயதும், ஆணுக்கு 21 வயதும் பூர்த்தியடைந்தால், திருமணத்துக்கு தகுதி வாய்ந்தவர்கள் ஆகின்றனர்.

ஆண், பெண்ணுக்கு இடையே இவ்வளவு வயது இடைவெளி இருக்க வேண்டும் என்று எந்த விதிமுறையும் இல்லை. நடைமுறை வாழ்க்கைச் சூழல் அடிப்படையில், மணமகனைக் காட்டிலும், மணமகளுக்கு இரண்டு முதல் ஐந்து வயது குறைவாக இருக்கலாம். இது, அவர்களது மனமுதிர்ச்சிக்காகவும், பெண்ணின் இனப்பெருக்க காலம் ஆணைவிட மிகக் குறைவானது என்பதாலும் இருக்கலாம்.

மருத்துவ ரீதியாக நெருங்கிய ரத்தவழிச் சொந்தத்துக்குள் திருமணம் செய்வதை பரிந்துரைப்பது இல்லை. இதற்கு காரணம், இந்த தம்பதியருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு சில பிறவிக்குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதுதான். இதுதவிர, மரபியல் ரீதியான சில நோய்கள் இந்தக் குழந்தைகளுக்கு வருவதற்கான வாய்ப்பு மிக அதிகம்.

திருமண வாழ்வை மகிழ்ச்சியுடையதாக மாற்றுவதில் செக்ஸ் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. அதேநேரத்தில், வெறும் பாலியல் உறவு மட்டுமே திருமண வாழ்வு இல்லை. செக்ஸ் தொடர்பான பிரச்னைகள், திருப்திபடுத்த முடியாத தன்மை போன்ற காரணங்கள் மிகவும் அன்புமிக்க பல தம்பதிகளின் உறவையே கெடுத்து விடுகிறது.