
தமிழ் நாட்டில் மட்டுமல்ல உலக அளவில் பிரபலமான நிறுவனமாக வளர்ந்து வருகிறது மில்கி மிஸ்ட் (Milky Mist). ஈரோட்டில் ஒரு சிறிய கிராமத்தில் தொடங்கி இன்று 10,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள ஒரு மாபெரும் பால் பொருள் சாம்ராஜ்யமாக வளர்ந்துள்ளது. டி.சதீஷ்குமார் என்பவரால் இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது.
ஆரம்பத்தில் பால் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர். சாதாரண திரவப் பாலை(Liquid Milk) விற்றால் லாபம் குறைவாகவே கிடைத்தது.மேலும், மீதமாகும் பால் வீணானது. இதனால் பாலில் இருந்து ‘பன்னீர்’ (Paneer) செய்ய சதீஷ்குமார் முடிவெடுத்தார். அவரே சொந்தமாகப் பன்னீர் செய்யக் கற்றுக்கொண்டு, தினமும் பன்னீர் தயாரித்து ஓட்டல்களுக்கு விற்கத் தொடங்கினார்.
தனது அயராத முயற்சியினால்,உற்சாகமான உழைப்பால் 1997 ல் “மில்கி மிஸ்ட்” என்ற பெயர் சூட்டப்பட்டது. மதிப்புக்கூட்டப்பட்ட பால் பொருட்கள் (Value-added dairy products) மீது மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தினார்.
பன்னீரில் தொடங்கிய நிறுவனம் தயிர், சீஸ்,வெண்ணெய், நெய்,யோகர்ட் மற்றும் ஐஸ்கிரீம் எனப் பல பொருட்களைத் தயாரிக்கத் தொடங்கியது.
ஈரோடு மாவட்டம் சித்தோடில் இருந்த ஆலை,பின்னர் பெருந்துறையில் 55 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய அதிநவீன ஆலையாக மாற்றப்பட்டது. இங்கு தினமும் 10 லட்சம் லிட்டருக்கும் அதிகமான பால் கையாளப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா,ஆந்திரா எனப் பல மாநிலங்களில் மில்கி மிஸ்ட் பொருட்கள் விற்கப்படுகின்றன. உலக அளவில் பிரபலமான நிறுவனமாக மாறிவருகிறது.
இன்று 74,000க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் இருந்து நேரடியாகப் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது மில்கி மிஸ்ட் நிறுவனம் ₹1,553 கோடி திரட்டுவதற்காகப் பங்குச்சந்தையில் (IPO) களம் இறங்கியுள்ளது.
தரத்தில் சமரசம் இல்லாமல், மக்களுக்கு ஆரோக்கியமான உணவுப் பொருட்களை வழங்கி வருவதால் பங்குச் சந்தையில் உற்சாகமாக பங்கெடுக்கிறார்கள். இந்த நிறுவனம் இன்னும் சிறப்பாக செயல்பட்டு சாதனைகள் புரிய நமது இதழ் சார்பில் வாழ்த்துகள்!
-பவித்ரன். ஹெல்த் அண்ட் பியூட்டி.

