
டாக்டர் நவீன் ஞானசேகரன் எழுதி உள்ள “த 100 இயர் ப்ளுபிரின்ட் … ஆயுள் நீடிக்க ஒரு இந்திய மருத்துவரின் கையேடு ” புத்தகத்தை சென்னையில் (16.07.2026), தமிழ்நாடு சுகாதாரம் மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி.அருண்ராஜ் வெளியிட்டார்.
“மருத்துவ அறிவியலை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க இது போன்ற புத்தகங்கள் உதவும்.
நமது அன்றாட உணவில் அரிசி சார்ந்த இட்லி, தோசை,சாப்பாடு மாதிரியான உணவுக்கே அதிக முக்கியத்துவம் தருகிறோம்.புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் நிறைந்த உணவாக இருப்பதும் முக்கியம்.
அதிக கொழுப்பை விட அதிகமான கலோரிகள் ஆபத்தானது. தினசரி உடற்பயிற்சி முக்கியம்.
நமது வாழ்வியலில் மன அழுத்தம் அதிகமாக உள்ளது. மகிழ்ச்சியான வாழ்க்கை முக்கியம். குழந்தைகளுக்கும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு பயிற்சி தர வேண்டும்.பள்ளி, கல்லூரிகளில் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தரும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய இருக்கிறோம்.மன நலத்திற்கும் அதிக முக்கியத்துவம் தரப்படும்”என்றார் டாக்டர் அருண்ராஜ்.
இந்த புத்தகத்தின் ஆசிரியர் டாக்டர் நவீன் ஞானசேகரன், சென்னை அப்போலோ மருத்துவமனையின் கதிரியக்கவியல் துறைத் தலைவரும் நீண்ட ஆயுள் மருத்துவ நிபுணரும் ஆவார். இந்தியாவில் வருமுன் காக்கும் மருத்துவம் மற்றும் ஆரோக்கியமான முதுமையின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் விதமாக இந்த புத்தக வெளியீடு நிகழ்ச்சி அமைந்திருந்தது.
டாக்டர் நவீன் ஞானசேகரன் பேசுகையில், “கடந்த பல வருடங்களாக, நோய்களுக்கு எவ்வளவு சிறப்பாகச் சிகிச்சை அளிக்கிறோம் என்பதைப் பொறுத்தே மருத்துவத் துறையின் வெற்றியை நாம் அளவிட்டு வருகிறோம். ஆனால்,நோய்களே வராமல் எவ்வளவு சிறப்பாகத் தடுக்கிறோம் என்பதுதான் மருத்துவத்தின் அடுத்த அத்தியாயமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
இந்தியர்கள் முன்பை விட அதிக காலம் வாழ்கிறார்கள். ஆனால், ஆரோக்கியம், தற்சார்பு மற்றும் தரமான வாழ்க்கை இல்லாமல், தள்ளாமையில் நீண்ட காலம் வாழ்வதை ஒரு சிறந்த மனித வளர்ச்சியாக நாம் எடுத்துக்கொள்ள இயலாது.
நமது 30 மற்றும் 40 வயதில் நாம் எடுக்கும் முடிவுகள்தான்,70, 80… அதற்கு மேற்பட்ட வயதில் நாம் எவ்வாறு வாழப்போகிறோம் என்பதைத் தீர்மானிக்கின்றன. எனவே, ஆரோக்கியமான, தீர்க்கமான, திண்ணமான முதுமை குறித்து முன்கூட்டியே சிந்திக்க இந்தப் புத்தகம் மக்களை ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன்” இவ்வாறு அவர் பேசினார்.
இந்தப் புத்தகம் தற்போது ஆங்கிலத்தில் வந்துள்ளது.விரைவில் தமிழில் வெளிவரும் என்று நம்புகிறோம்.
மருத்துவர்கள் மக்கள் மத்தியில் உரையாட வேண்டும்.மகிழ்ச்சியான,
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கற்றுத் தர வேண்டும்.
அப்போதுதான் இந்த சமுதாயம் வளர்ந்த சமுதாயமாக முன்னேற்றம் அடையும்.
-பவித்ரன். ஹெல்த் அண்ட் பியூட்டி.

