
முதுகுத் தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்தால் வாழ்நாள் முழுவதும் படுத்த படுக்கையாகவே இருக்க வேண்டும். ..என்ற தவறான நம்பிக்கை மக்கள் மத்தியில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. முதுகுத் தண்டுவடத்தில் தாராளமாக அறுவை சிகிச்சை செய்யலாம். அதனால் ஆபத்து எதுவும் இல்லை.
பல்வேறு நிலைகளில் முதுகெலும்பு நரம்பு சுருக்கம் மற்றும் சிதைகின்ற முதுகெலும்பு பக்கவிளைவால் நடக்க முடியாமல் கடும் சிரமத்தை எதிர்கொண்ட முதியவருக்கு, வழக்கமான திறந்தநிலை முதுகுத்தண்டு அறுவை சிகிச்சையைத் தவிர்த்து,சிறிய துளை வழியே செய்யப்படும் நவீன எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சையைச் செய்து சென்னை சிம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள் குணமளித்திருக்கின்றனர்.வெறும் 8 மி.மீ அளவிலான சிறிய துளை மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த அதிநவீன ‘யூனிபோர்ட்டல் எண்டோஸ்கோபிக்’ சிகிச்சை, முதியவரின் தண்டுவட நரம்பு அழுத்தத்தை முழுமையாக நீக்கி, அவரை மீண்டும் தன் சொந்தக் கால்களில் நடக்க வைத்துள்ளது.
இந்த அறுவை சிகிச்சை பல காரணங்களால் மிகவும் சவாலான ஒன்றாக அமைந்தது. நோயாளிக்கு இருந்த தீவிர முதுகெலும்பு வளைவுப் பாதிப்பு, அவரது முதுகெலும்பின் இயல்பான அமைப்பைப் பெருமளவில் மாற்றியமைத்ததோடு,தண்டுவட நரம்புகளைச் சுற்றியுள்ள இடைவெளியையும் மிகவும் சுருக்கியிருந்தது. உடற்கூறியலில் ஏற்பட்ட இந்த மாறுபாடு காரணமாக, ஒற்றைத் துளை எண்டோஸ்கோபிக் முதுகெலும்பு அறுவை சிகிச்சையை மேற்கொள்வது தொழில்நுட்ப ரீதியாகப் பெரும் சவாலாக மாறியது.
வெறும் 8 மி.மீ அளவுள்ள ஒரே ஒரு துளையின் வழியே, அழுத்தப்பட்ட நரம்பு அமைப்புகளைப் பாதுகாப்பாகக் கையாண்டு இந்த அறுவை சிகிச்சையைச் செய்ய அசாத்திய துல்லியமும் திறனும் தேவைப்பட்டது.
மேலும், நோயாளிக்கு ஏற்கனவே இருந்த இதய நோய் பாதிப்பு இந்தச் சவாலை மேலும் அதிக சிக்கலானதாக ஆக்கியிருந்தது. அவர் ஏற்கனவே பைபாஸ் அறுவை சிகிச்சை (CABG) செய்துகொண்டவர் என்பதோடு,அவரது இதயத்தில் நிரந்தர பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டிருந்தது.
இந்த அம்சங்கள் அறுவை சிகிச்சை மற்றும் மயக்க மருந்து அளிப்பதில் பெரும் ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடியவை என்பதால், நோயாளியின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், நரம்பு அழுத்தத்தை வெற்றிகரமாகச் சரிசெய்யவும் பல்துறை மருத்துவ நிபுணர்களின் நுணுக்கமான திட்டமிடலும், அறுவை சிகிச்சையின் போது அவர்களுக்கு இடையேயான ஒருங்கிணைந்த செயல்பாடும் அவசியமாக இருந்தது.
இந்தச் சாதனை சிகிச்சையை சிம்ஸ் மருத்துவமனையின் எலும்பியல் மற்றும் தண்டுவட சிகிச்சை நிபுணர்களான டாக்டர் ஜி. வெங்கடேஷ் குமார், டாக்டர் விக்னேஷ் ஜெயபாலன் மற்றும் இதய நோய் நிபுணர் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் வெற்றிகரமாக நிகழ்த்தியிருக்கின்றனர்.
மருத்துவ குழுவுக்கு நமது இதழ் சார்பில் வாழ்த்துகள்.
-பவித்ரன். ஹெல்த் அண்ட் பியூட்டி.

