
ஒரு துயர சம்பவம் என்னை மோசமாக பாதித்தது.புதுக்கோட்டை அருகில் ஒரு ஊரில்,தங்கை செல்போன் பயன்படுத்துவதை அண்ணன் கண்டிக்கிறார்.ஆத்திரத்தில் செல்போனை உடைத்து விட்டார். கோபமடைந்த தங்கை,கிணற்றில் குதிக்கிறார். தங்கையை காப்பாற்ற அண்ணனும் கிணற்றில் குதிக்கிறார்.இருவரும் மரணம்.இந்த மரணங்களை,சாதாரணமாக கடந்து போக முடியவில்லை.
எங்கே தவறு நடந்தது? ஏன் இப்படிப்பட்ட அவல நிலை? குழந்தைகளுக்கு சொத்து சேர்ப்பது, நகை வாங்கி வைப்பது… எல்லாத்தையும் விட நல்ல வாழ்க்கைச் சூழலை அமைத்து தருவது தான் முக்கியம்.
செல்போன் போன்ற டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தும்
நேரம் எப்போதும் நமது கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும். பயன்படுத்த தொடங்கும்போது அது நம் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.ஆனால் போகப் போக நம்மையும் அறியாமல் நாம் அதன் கட்டுப்பாட்டிற்குப் போய்விடுவோம்.
அப்படிப் போய்விட்டால் நம்மால் டிஜிட்டல் சாதனம் இல்லாமல் இருக்க முடியாத நிலை வரலாம். டிஜிட்டல் சாதனங்களுக்கு நம்மை அடிமைபடுத்திவிடும் தன்மை இருக்கிறது. அப்படி அடிமையானால் நாம் நிஜவுலகில் இருந்தே நம்மைத் துண்டித்துக்கொண்டு, எதன் மீதும் ஆர்வமில்லாமலும், எப்போதும் டிஜிட்டல் சாதனங்களையே பார்த்துக்கொண்டிருக்கும் நிலை வரலாம், அப்படி ஒரு நிலையிலிருந்து மீண்டு வருவது இயலாத ஒன்று. அதனால் டிஜிட்டல் சாதனங்கள் எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறோம் என்பதில் கவனம் வேண்டும்.
நாம் நினைத்த நேரத்தை விட நாம் அதிக நேரம் பயன்படுத்துகிறோம் என்றால் நிச்சயம் நமது பயன்படுத்தும் நேரத்தைக் கட்டுபடுத்தியே ஆகவேண்டும்.
பெற்றோர்களும் டிஜிட்டல் நேரத்தை வீட்டிற்குள் வரையறை செய்யலாம்.
ஒரு நாளில் எவ்வளவு நேரம் பயன்படுத்தலாம், விடுமுறை நாளன்று எவ்வளவு நேரம், பள்ளி நாளன்று எவ்வளவு நேரம்?
எப்போதெல்லாம் பயன்படுத்தலாம்?
எப்போதெல்லாம் பயன்படுத்தக் கூடாது?
தூங்கும் நேரம், சாப்பிடும் நேரம், உரையாடும் நேரம் போன்ற நேரங்களிலெல்லாம் முழுவதுமான டிஜிட்டல் கட்டுப்பாடு (No Screen Time)….
போன்றவற்றையெல்லாம் தெளிவாக வரையறை செய்துகொள்ள வேண்டும். இவற்றையெல்லாம் குழந்தைகள் மட்டுமல்ல, பெற்றோர்களும் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் குழந்தைகளுக்கு அவர்கள் முன்மாதிரியாக இருக்க முடியும். எல்லோரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே… எனது தாழ்மையான வேண்டுகோள்!

