டாக்டர் கண்மணி கணேஷ்.எம்.டி,டிஜிஓ.
 
பெண்களுக்கு தங்களின் உடற்கூறு குறித்தும் உடல் நலனை பேணுவதற்கான வழிமுறைகள் குறித்தும் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு தேவைப்படுகிறது.சில பெண்களுக்கு மாத விலக்கு பெரும்போக்காக இருப்ப துண்டு. பெரும்போக்கு நாட்களளவில் அதிகமாகலாம். இல்லையெனில் குறைந்த நாட்களிலேயே அதிகமாக உதிரப் போக்கு இருக்கலாம். இல்லையெனில் 28 நாட்களுக்கு ஒரு முறையாக வருகிற மாத விலக்கு குறைந்த நாட்களுக்கு ஒரு முறையென அதாவது 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறையென வரலாம். இது பன்முறை சூதகப் போக்கு என்று கூறப்படும்.மாதவிலக்கு அடிக்கடி ஏற்பட்டும் அதிகமான போக்கும் கொண்டிருந்தால் பன்முறை அதீத உதிரப் போக்கு (polymenorrhoea) என்று கூறப்படுகிறது.
 
மாதவிலக்கு மாதத்துக்கு ஒருமுறை வருவதுடன் இடை இடையேயும் தோன்றுவதுண்டு. அப்போது  அது இடைச்சூதகப் போக்கு என்று கூறப்படும். சூதகப் போக்கு பல முறை தோன்றினாலும் இடையே தோன்றினாலும் உதிரப்போக்கு அதிகமாகி ஒரு பெண்ணுக்குச் சோகையை 
ஏற்படுத்துமாதலால் அதன் காரணங்களைக் கண்டறிந்து அகற்றுவது மிக அவசியம்.
 
உளவியல் ரீதியான பிரச்னைகள், மன அதிர்ச்சி, சூழ்நிலை மாறுபாடுகள், மணவாழ்வில் கசப்பு, அதிக வேலை, மனக்கலக்கம் ஆகியவை பெரும் உதிரப் போக்கை ஏற்படுத்தலாம். ஹார்மோன் குறைபாடுகள், கர்ப்பப்பையின் உள்வரிச்சவ்வழற்சி, கர்ப்பப்பைக் கட்டிகள், கர்ப்பப்பையில் பொருத்தப்பட்ட கருத்தடைச் சாதனங்கள் ஆகியவையும் உதிரப்போக்கைக் கூட்டலாம். ஹார்மோன்களால், ரத்தப் போக்கில் அசாதாரணமான மாற்றங்கள் ஏற்படின், அது Dy functional uterine bleeding என்று கூறப்படும்.
 
ஓய்வு, உதிரப் போக்கை நிறுத்தும் மருந்துகள் முதலியவற்றினாலேயே பலருக்கும் உதிரப் போக்கு நின்றுவிடும். ஆனால் உதிரப்போக்கு அதிகம் இருந்தால் டி அண்ட் சி மூலம் சரிசெய்யலாம். மேலும் கர்ப்பப்பைக் கட்டிகள் போன்றவற்றால் உதிரப்போக்கு ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டால் அக்கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிடலாம்.
 
இந்நிலையில் கர்ப்பப்பையில் உள்வரிச் சவ்வு புற்று,கர்ப்பப்பைக் கழுத்துப் புற்று, கருவகப் புற்று ஆகியவை ஏற்பட்டுள்ளதா என்பதையும் ஆராய்ந்தறிய வேண்டும்.
 
பெண்கள்,ஏதாவது வழக்கத்தைவிட மாற்றமோ சந்தேகமோ ஏற்பட்டால் தாமதிக்காமல் மருத்துவரை நாடி ஆலோசனை பெற வேண்டும்.எக்காரணம் கொண்டும் தள்ளிப்போடக் கூடாது. குடும்பத்தில் கணவருக்கோ பிள்ளைகளுக்கோ ஏதாவது உடல் நல பாதிப்பென்றால் ஓடோடி உதவும் தாய்மார்கள் தங்களுக்கு ஒரு தொந்தரவு என்றால் உடனே சிகிச்சை பெறுவது இல்லை.இந்த நிலை மாற வேண்டும். குடும்பத்தினரும் பெண்களின் உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும்.