
முனைவர் மா.ஆ.தீபா,M.Sc,M.Phil,Ph.D.
உதவிப் பேராசிரியர்,
தாவரவியல் துறை,
அரசு கலைக் கல்லூரி, கோயம்புத்தூர்.
தாவரங்கள் மனித வாழ்வின் ஒரு அடிப்படை என்பது நாம் அறிந்ததே. உணவு,உடை, வாழ்விடம் மட்டுமின்றி நம் ஆரோக்கியத்திற்கும் தாவரங்கள் பல வகையிலும் பயன்படுகின்றன. நோய் வராமல் பாதுகாக்க,நோய் வந்தபின் குணப்படுத்த என நாம் பயன்படுத்தும் தாவரங்கள், மூலிகைகள் என அழைக்கப்படுகிறது. உணவே மருந்து என்னும் கோட்பாட்டோடு ஒன்றிய நம் கலாச்சாரத்தில் மூலிகைகளின் பயன்பாடு உலகறிந்தது.நாம் உணவில் பயன்படுத்தும் சீரகம், வெந்தயம்,மல்லி விதைகள்,சோம்பு, புதினா,கிராம்பு, பட்டை போன்ற அனைத்தும் எண்ணற்ற மருத்துவ குணங்களை உள்ளடக்கியுள்ளது.
ஒவ்வொரு மூலிகைக்கும் ஒவ்வொரு குணம் உண்டு. ஒவ்வொன்றையும் எவ்வாறு உட்கொண்டால் முழுமையான பயனைப் பெறலாம் என்பதற்கான அத்துணை அறிவையும் நம் முன்னோர்கள் அறிந்திருந்தனர். அறுசுவைகளையும் உள்ளடக்கிய உணவு முறைகளையும் வகுத்து தந்துள்ளனர். அறுசுவை என்பது நம் உடலின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் என்பதை அறிந்த நம் முன்னோர் இனிப்பு, உப்பு, காரம்,உவர்ப்பு, துவர்ப்பு மற்றும் கசப்பு ஆகிய அனைத்தையும் சரியான விகிதத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய அறிவியலின் அடிப்படையையும் சேர்த்து அறிந்திருந்தனர். இந்த அறுசுவையின் அடிப்படை தாவரத்தைச் சார்ந்ததாகவே இருந்தது.கடல் உப்பு நாம் அறிந்ததாக இருந்தும்,தாவர உப்பையும் கூட நம் முன்னோர்கள் நன்கு அறிந்திருந்தனர்.
உதாரணமாக பிரண்டை உப்பு பலவகை மருத்துவ குணங்களை கொண்டது.இதை தாவரத்திலிருந்து பிரித்தெடுத்து பயன்படுத்தும் முறைகளையும் வெகுவாகவே கற்று இருந்தனர். இவ்வாறாக நம் நல் வாழ்வின் ஆணிவேராக உள்ள மூலிகைகள் குறித்து நமது ஹெல்த் அண்ட் பியூட்டி மருத்துவ மாத இதழில் தொடர்ந்து நாம் விரிவாக பதிவு செய்ய இருக்கிறோம். எனவே மூலிகை என்பதை ஒரு வரம் எனவும்,மனித வாழ்விற்கான வழிகாட்டியாக அமைந்த தவம் எனவும் கூறலாம்.
நோய் தீர்க்கும் எத்தனையோ மருத்துவ முறைகள் உலகில் இருந்தாலும், மூலிகைகளே நோயின் மூலத்தை சரியாக்கும் சிறந்த மருத்துவ மூலக்கூறுகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. திருவள்ளுவரின் கூற்றுப்படி…
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்
என்பதற்கான அடிப்படையாக அமைவதும் மூலிகைகளே.நாம் முதன் முதலில் அறிந்து கொள்ளப் போகும் தாவரம் முடவாட்டுக்கால் கிழங்கு.
ஆட்டின் கால்களைப் போன்ற உருவ அமைப்பில்,மலை பாங்கான பகுதிகளில் பாறைகளின் இடுக்குகளிலும், மரங்களின் கிளைகளின் மீது ஒட்டி வளரும்.இது ஒரு கூடை பெரணி வகை தாவரம் ஆகும். முடவாட்டுக்கால் கிழங்கு என்னும் பெயரில் அழைக்கப்படுகிறது. டிரைனேரியா குர்சிஃபோலியா என்ற தாவரவியல் பெயர் கொண்டது. மூலிகையின் பெயருக்கு ஏற்ப முடக்குவாதம் உள்ளவர்களுக்கு மிக எளிய முறையில் பயன்படுத்தக்கூடிய ஒரு மூலிகையாக இது விளங்குகிறது.
இதன் மேல் தோல் பகுதி அடர் பழுப்பு நிறத்தில் மெல்லிய வேர்களை கொண்டிருக்கும். ஆட்டின் தோலைப் போன்றும் கால்களின் அமைப்பைப் போன்றும் காணப்படுவதால் இது முடவாட்டுக்கால் என்னும் பெயரை பெற்றது.தோல் பகுதியை நீக்கிவிட்டு கிழங்கு பகுதியை சிறு துண்டங்களாக நறுக்கி அல்லது பொடியாக்கி சூப்பாக சமைத்து,வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் பயன்படுத்துவதால் முடக்குவாத நோயிலிருந்து நிவாரணம் பெறலாம். இக்கிழங்கினை பிற மூலிகைகளுடன் சேர்த்து உட்கொள்ளும் போது விபத்தினால் ஏற்படும் காயங்களுக்கும்,கீழ் முதுகு மற்றும் தசைநார் பகுதிகளில் ஏற்படும் வலிக்கும் நல்ல மருந்தாக அமைகிறது.
வெந்நீரைக் கொண்டு அரைத்து இக்கிழங்கை உட்கொள்ளும்போது இருமலை குணமாக்குகிறது.20 கிராம் அளவில் இருவேளை ஒரு மாதம் எடுத்துக் கொள்ளும்போது மலட்டுத்தன்மையை நீக்குவதாக அமைகிறது.10 முதல் 15 கிராம் அளவிலான அரைத்த கிழங்கை பசும்பாலுடன் ஒரு வேளை உட்கொள்ளும் போது வயிற்றுப் பகுதியில் ஏற்படக்கூடிய வலிகளுக்கு நிவாரணியாக அமைகிறது.நன்கு அரைத்து கூழாக்கிய கிழங்கை தலையில் தடவி வர வழுக்கையிலும் முடி வளரும். மேலும் முடி உதிர்வதையும் தடுக்கும். இவை அனைத்தும் நாட்டுப்புற மருத்துவ முறைகளில் கொடுக்கப்பட்டுள்ள பயன்கள் ஆகும். நவீன அறிவியல் ஆராய்ச்சிகளும் இதனை உண்மை என கண்டறிந்துள்ளது. நாட்டுப்புற மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல பயன்களுக்கான நவீன ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.மிக எளிதாக நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் இவ்வெளிய கிழங்கை பயன்படுத்தி நாமும் நலம் பெறுவோம்.
தகவல் தொடர்புக்கு:
மெயில்:drdeepapat2007@gmail.com

