
தமிழகத்தில் பரவலாக எல்லோருமே அரிசி, அரிசி என மூன்று வேளையும் அரிசி சார்ந்த உணவுகளை உட்கொண்டு, உடற்பருமன், மாரடைப்பு மற்றும் நீரிழிவு நோய்களுக்கு ஆளாகிறார்கள். அரிசியைக் குறைத்து கோதுமை மற்றும் சிறுதானியங்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
நம் நாட்டில் சுமார் எட்டு வகையான மில்லட்ஸ் என்னும் சிறுதானியங்கள் உள்ளன. கொள்ளு, ராகி, சோளம், கம்பு, தினை, குதிரைவாலி போன்றவை மிக முக்கியமானவை.
சிறுதானியங்களின் பயன்கள்
1.நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலைத் தடுக்கிறது.
2.சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளதால் பல்லையும் எலும்பையும் உறுதிப்படுத்துகிறது.
3.அதிகமாக உள்ள கலோரிச் சக்தியினால், இவ்வுணவை உண்டபின் சத்து உடனே கிடைக்கிறது.
4.குடலில் இருந்து சர்க்கரை மெதுவாக உறிஞ்சப்படு வதால் இரத்தததில் சர்க்கரையின் அளவு குறைகிறது.
5.இரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்து குறைகிறது.
6.ஒரு சில புற்று நோய்களை வராமல் தடுக்கிறது (உதாரணம்: குடல் புற்று நோய்).
7.சில தானிய வகைகள் ஆரோக்கியமான மனநலத்திற்கு உகந்தது.
8.அதிக எடையைக் குறைக்கிறது.
9.அஜீரணத்தை ஏற்படுத்தாது . எந்த விதமான ஒவ்வாமையையும் உண்டாக்காது.
10.கம்பு, ராகி போன்றவைகளின் கஞ்சி கோடையில் வெப்பத்தைக் குறைக்க உதவுகிறது.
11.உணவு உண்ட பின்பு வயிறு நிரம்பியது போல மனம் திருப்தி அடையும்.
12.விவசாயப் பணியின்போது பூச்சிக்கொல்லி மருந்துகளோ செயற்கை உரங்களோ அதிகளவில் சேர்க்கப்படாதது. விலையோ மலிவு.

