
-டாக்டர்.வி.விக்ரம் குமார்,எம்.டி.சித்த மருத்துவர்.
கறுத்த சருமத்துக்குள் வெள்ளை முத்து…’ – இது உளுந்துக்கான விடுகதைக் குறிப்பு.நெடுங்காலமாக நமது உணவுமுறையில் தவிர்க்க முடியாத பிணைப்புகொண்டிருக்கிறது உளுந்து.
உளுந்துடன் இஞ்சி, பெருங்காயம், கீரை வகைகள் அல்லது கிழங்கு வகைகளைச் சேர்த்து சமைக்கப்படும் சத்து நிறைந்த உணவு.புரதம், வைட்டமின், தாதுச்சத்து, அமினோ அமிலம் போன்றவற்றை நமது தேவைக்கேற்ப உளுந்து வாரி வழங்கும். பூப்பெய்திய பெண்களுக்கு உளுந்து சார்ந்த உணவுகளைப் பயன்படுத்துவது கிராமத்துப் பாட்டிகளின் நுண்ணறிவின் விளைவு!
காமம்பெருக்கி, பால்பெருக்கி, உரமாக்கி, உள்ளழலாற்றி ஆகிய செய்கைகள் உளுந்துக்கு உரித்தானவை.இனிப்புச் சுவையுடன், குளிர்ச்சித் தன்மைகொண்ட உளுந்து, சித்த மருத்துவ தத்துவப்படி, செரிமானத்தின் இறுதியில் இனிப்புச் சுவையாக மாறும். வாதத்தைக் கட்டுப்படுத்தி,பல்வேறு காரணங்களால் ஏற்படும் வலி உணர்வைக் குறைக்கும் தன்மை உளுந்துக்கு உண்டு.நரம்பு மண்டலத்தை வலுவாக்கும் குணம் படைத்த உளுந்து, சிறந்த நரம்புரமாக்கி!
பெண்கள் நலன் சார்ந்த உணவுப் பட்டியலில் கட்டாயம் இடம்பிடிக்க வேண்டிய பொருள் உளுந்து. மாதவிடாயை முறைப்படுத்தி ஆரோக்கியம் காக்கும்.பால் சுரப்பை அதிகரிக்கவும் உளுந்து துணை நிற்கும்.
எவ்வகையான காய்களின் பொரியல், கூட்டாக இருந்தாலும் உளுந்தை வறுத்துத் தயாரிக்கும்போது, உணவுக்கு புதுச் சுவை கைகூடும். துவையலுக்கு மணத்தைக் கொடுக்க உளுந்தின் சேர்மானம் அவசியமல்லவா?
வயதானோருக்கு ஏற்படும் எலும்பு வலிமை சார்ந்த பிரச்னைகளுக்கு உளுந்து சிறந்த தேர்வு.இதிலுள்ள சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்றவை உடலுக்கு உறுதுணையாக இருக்கும். இரும்புச்சத்து ஊட்டத்தைக் கொடுக்கும். குடல் அசைவுகளை முறைப்படுத்தி, மலக்கட்டு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்!.இதிலுள்ள பொட்டாசியம், ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவும்.இட்லிக்குத் தொட்டுக்கொள்ள மிகச்சிறந்த துணை, இட்லிப் பொடி.இதில் பெருமளவு அங்கம் வகிப்பது உளுந்தே.
தோல் நீக்கிய வெள்ளை உளுந்தின் மல்லிகைப்பூ இட்லியில் மனதைப் பறிகொடுக்கிறோம்.அதைவிடவும் தோல் நீக்காத கறுப்பு உளுந்துதான் அதிக சத்துகளைக் கொண்டது. வேகவைத்த சாதத்தில் வறுத்த உளுந்து மாவு பூசணி சீவல்கள், எலுமிச்சைச்சாறு.தேங்காய்த் துருவல் சேர்த்துப் பிசைந்து சாப்பிடும் வழக்கம் நம்மிடையே இருந்திருக்கிறது.அரிசி, கோதுமை, உளுந்து, பல காய் ரகங்கள், பனை வெல்லம், நறுமணமூட்டிகள் மற்றும் நெய் சேர்த்துச் செய்யப்படும் பல்வேறு உணவுப் பொருள்கள், பூரி ஜகந்நாதர் கோயிலில் மிகவும் பிரபலம்.
உழைப்பாளர்களின் உடலை விரைவாக வளர்க்கும் ஆரோக்கிய உணவு உளுந்தங்கஞ்சி.நன்றாக வேகவைத்த உளுந்து மற்றும் அரிசியை மசித்து, பால் சேர்த்து சுவைக்காகக் கொஞ்சம் பனைவெல்லம் மற்றும் உப்பு சேர்த்துத் தயாரிக்கப்படும் இந்தக் கஞ்சியின் ஊட்டச்சத்துக்கு ஈடு
கொடுக்க மற்ற உணவுப் பொருள்கள் சிரமப்படும். உடல் நலிவுற்று இருக்கும்போது புது தெம்பைக் கொடுக்க, உளுந்தங்கஞ்சியைத் தயார் செய்து கொடுக்கலாம்.இது நோயிலிருந்து மீண்டவர்களுக்கான முக்கிய உணவும்கூட!
சுவைமிக்க ஊட்டச்சத்து மாவு சாப்பிட ஆசையா? உளுந்து மாவை தேனுடன் சேர்த்துக் குழைத்து அவ்வப்போது சாப்பிடுங்கள்.சிறுநீர் எரிச்சல், சிறுநீர் அடைப்பு போன்ற பிரச்னைகளுக்கு உளுந்து ஊறிய நீரைப் பருகினால் நிவாரணம் கிடைக்கும்.
புது மணமகனுக்கு முருங்கைக் காய் சாம்பார், முருங்கைப்பூப் பொரியல், முருங்கையிலை அடை என தடபுடலாக நடக்கும் விருந்து வைபவத்தில் உளுந்தையும் சேர்த்துக்கொள்ளலாம். அது புதிய உத்வேகத்தைத் தூண்டி களைப்பைப் போக்கும். சுக்கு, பனைவெல்லம் துணையுடன் உளுந்து சேர்த்து களியாகக் கிளறி சாப்பிட்டால் உடலுக்கு பலமுண்டாகும்.
உளுந்தின் உதவியுடன் செய்யப்படும் சித்த மருந்தான ‘உளுந்துத் தைலம்’ வெளிப் பிரயோகமாக வாத நோய்களுக்கு அற்புத பலன்களை அளிக்கும். தசைகளின் வலிமையை அதிகரித்து, நோயிலிருந்து விரைவாக மீள உதவும்.சித்த மருத்துவத்தின் பொக்கிஷமான தொக்கண முறைகளுக்கும் உளுந்துத் தைலம் அதிகமாகப் பயன்படுகிறது. அவ்வப்போது ஏற்படும் தசை வலிக்கு உளுந்துத் தைலத்தை மெல்லிய சூட்டில் தேய்க்கலாம்.குறிப்பாக முதியோருக்கான ஊன்றுகோலாக இந்தத் தைலம் அமையும்.
நரம்புகளின் வலிமையை அதிகரிக்க, உளுந்துத் தைலத்தை ஊறவைத்துப் பிடித்து நீவிவிடலாம். கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் இடுப்பு, கை, கால் வலிகளுக்கு உளுந்துத் தைலம் சிறந்தது.
உளுந்து… ஆரோக்கியத்துக்கான திடமான விழுது!

