
தெரிந்தவரோ, தெரியாதவரோ… யாருக்கு எதைச் செய்தாலும் இதனால் எனக்கு என்ன கிடைக்கும் என்று யோசித்தால்,வாழ்வியல் கணிதவியலாக மாறிப் போகும்.ஆபத்து காலங்களில், இயற்கை பேரிடர் சூழலில் எதிர்பார்ப்பு இல்லாமல் நீங்கள் ஒருவருக்கு உதவி செய்தால்…அதன் பலன் உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் யாரிடமிருந்தாவது எந்த வடிவிலாவது பேருதவியாக வந்து சேரும்.இதுதான் மனிதநேயத்தின் மகத்தான பலன். உளவியலின் அடிப்படை.

சமீபத்தில் சென்னையில் அதிபயங்கர மழை.நகரமே தண்ணீரில் தத்தளித்தது.தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை செய்தது.ஒரு கோடி மக்களுக்கு மேல் வாழும் நகரம் சென்னை.பேரிடர் காலத்தில் அரசாங்கம், எல்லோருக்கும் ஓடோடி வந்து உதவ முடியுமா? சாத்தியமா?என்ற கேள்வி எழலாம்.
நிச்சயமாக சாத்தியம் தான்.அரசாங்கம் மட்டுமே மீட்பு பணியில் இறங்கினால் போதாது.
அரசு அமைப்புகளோடு தன்னார்வலர்களையும் ஒருங்கிணைக்க வேண்டும்.ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள்,அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள், சமூக அக்கறை உள்ள அன்பர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்தால் அந்தந்த பகுதி மக்களுக்கு மின்னல் வேகத்தில் உதவ முடியும்.
மழை வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட ஆயிரமாயிரம் மக்கள் கண்ணீரோடு, செய்வதறியாமல் திகைத்து நின்று வேதனைப்பட்டதை நேரில் கண்டேன்.ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று மனதார விரும்பினேன்.
கடலூர் டாக்டர் சி.ஏ.ரவி,சென்னை மக்களின் துயர் துடைக்க, என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன் என்று முன் வந்தார். எந்தவித விளம்பரமும் இல்லாமல், அரிசி,மளிகை சாமான்களை ஒரு வண்டியில் ஏற்றி அனுப்பி வைத்தார்.அவர் சார்பாக நாங்களே சென்னையில் ஒரு சில பகுதிக்கு விநியோகம் செய்தோம்.அவரது மனித நேய பணிகளை பாராட்டி வாழ்த்தி மகிழ்கிறேன்.
நெல்லை,தூத்துக்குடி மாவட்டங்களிலும் வரலாறு காணாத மழை.அதனால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.வெள்ள பாதிப்பால், ஸ்ரீ வைகுண்டம் பகுதியில் சிக்கிய ரயில் பயணிகளுக்கு,கிராம மக்கள் ஒன்று சேர்ந்து ஓரு நாள் முழுவதும் சாப்பாடு கொடுத்து உதவியுள்ளார்கள்.அதுமட்டுமல்ல, நாங்கள் உங்களோடு இருக்கிறோம்…கவலை வேண்டாம் என்று ஆறுதல் தந்து இருக்கிறார்கள். அந்த கிராம மக்களுக்கு நமது பத்திரிகை சார்பாக வாழ்த்துகள்.
மக்கள் ஆரோக்கியமாகவும் அமைதியாகவும் வாழ நம்மால் முடிந்த உதவிகளை செய்து கொண்டே இருக்க வேண்டும்.மக்களுக்கு உதவும் கருணை உள்ளம் கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், வெள்ளத்தில் மீட்பு பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட அனைவருக்கும் எனது நன்றி.
-அன்புடன் டாக்டர் ஜி.ராஜமோகன்.

