
முனைவர் மா.ஆ.தீபா,M.Sc, M.Phil,Ph.D.,
உதவிப் பேராசிரியர், தாவரவியல் துறை, அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி),
கோயம்புத்தூர்.
அகத்தை சீர்படுத்தும் சீரகம் நாம் அனைவரும் நன்கு அறிந்த, அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் ஒரு அஞ்சறைப் பெட்டி பொருளாகும். மிகவும் பரிச்சியப்பட்ட இந்த சீரகத்தைப் போலவே மிக அதிக பயன்களை கொண்ட காட்டு சீரகமும் நம் மருத்துவ முறைகளில் நன்கு அறியப்பட்ட ஒன்றே. நம் நாட்டில் காட்டு சீரகம் என்பது (Vernonia anthelmintica) வெரோனியா ஆண்தெல்மின்டிகா என்ற தாவரவியல் பெயரை கொண்ட மூலிகை ஆகும். ஆங்கிலத்தில் இது பர்பில் பிலியாபேன் (Purple Fleabane) என்ற பெயரால் அறியப்படுகிறது.
காட்டு சீரகத்தின் விதைகள் பழுப்பு அல்லது பழுப்பு கலந்த கருமை நிறத்தில் முக்கோண வடிவத்தில் இருக்கும். சீரகத்தைப் போன்ற நறுமணத்தை கொண்டிராமல் காரநெடி மற்றும் கசப்புத் தன்மை கொண்டதாகவும் இருக்கும்.நம் உடலில் ரத்தத்தை சுத்திகரிக்கவும், குளிர்ச்சி ஊட்டுவதாகவும் இதன் தன்மை அமைகிறது.

இந்த தாவரத்தின் விதைகள் வயிறு மற்றும் குடல் பகுதிகளில் இருக்கும் புழுக்களை வெளியேற்ற பயன்படுகிறது. மேலும் இதன் பெயருக்கு ஏற்ப தோல் வியாதிகளுக்கும், குறிப்பாக கரப்பான் என்று அழைக்கப்படும் மரபு வழி தோல் அலர்ஜிக்கும், விட்டிலிகோ என்னும் முதுமை வெண் தோல் படல நோய்க்கும், சர்க்கரை நோய், இன்ஃப்ளமேசன், சுவாசக் கோளாறுகள் போன்ற பல்வேறு நோய்களுக்கும் மருந்தாக பாரம்பரிய மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் ஆயுர்வேத, சித்த மருத்துவ முறைகளில் கபம் மற்றும் வாத தோஷத்தை சமன்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.
பொதுவாக இவ்விதைகள் உணவுப் பொருளாக பயன்படுத்தப்படுவதில்லை.மருத்துவ காரணங்களுக்காகவே அதிகம் பயன்படுகிறது. தோல் நோய்களுக்கு மேல் பூச்சு மருந்தாகவும், குடற்புழுக்களை நீக்க உள் மருந்தாகவும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதற்கான முக்கிய காரணி இவ்விதைகளில் உள்ள ஸ்டீராயிடுகள், டெர்பினாய்டுகள் மற்றும் சபோனின்கள் ஆகும்.
நரம்பு மண்டலத்திற்கு செறிவூட்டும் மருந்தாகவும் இது அமைகிறது. ஆயுர்வேதா மற்றும் யுனானி மருத்துவ முறைகளில் குடல் புழுக்களை அகற்றவும்,தோல் வியாதிகளுக்கும் காய்ச்சல்,ஆஸ்துமா, கேஸ்ட்ரிக் தொல்லைகளுக்கும், கண் எரிச்சலுக்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.நாட்டுப்புற மருத்துவ முறைகளில் தேள் கடிக்கு மருந்தாகவும், வயிற்றுப்போக்கு மற்றும் ஒட்டுண்ணிகளை அகற்றும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.ஹோமியோபதி மருத்துவத்தில் விதைகளில் இருந்து பெறப்படும் டின்சர், புண்களை ஆற்றவும், பூச்சிகளை அகற்றவும் பயன்படுத்தப்படுகிறது.இவ்விதைகளில் எண்ணெய் பொருட்களான கேரியோஃபிலின் மற்றும் லிமோனின் உள்ளது.
இப்பொருட்கள் மெலனோஜெனிசிஸ் எனப்படும் தோளின் நிறமிகளை ஊக்குவிப்பதாக உள்ளது.இதனால் வெள்ளைத் தோல் நோயான லியூகோடெர்மாவிற்கு அருமருந்தாக பயன்படுகிறது.
இவ்விதைகளில் காணப்படும் செஸ்கியூட்டர்ப்பின் லாக்டோன்கள் ஒட்டுண்ணிகள் மற்றும் வயிற்றுப்புழுக்களின் நகர்வையும், வளர்ச்சியையும் தடுப்பதன் மூலம் அவற்றை கட்டுப்படுத்துகிறது என்று அறிவியல் பூர்வமாக அறியப்படுகிறது.
விதைகள் உட்கொள்ளப்படும் போது அதிலுள்ள ஃப்ளேவானாய்டுகள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கிறது.தோல் பகுதிகளில் ஏற்படக்கூடிய எடிமா எனப்படும் வீக்கத்தை குறைக்கக் கூடியதாக உள்ளது. இவ்விதைகளில் உள்ள இரண்டாம் நிலை வளர்சிதை மாற்ற பொருட்கள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதாகவும்,கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்துவதாகவும் அறியப்படுகிறது. அனைத்திற்கும் ஆன அறிவியல் பூர்வமான நிரூபனங்களும் தெள்ளத் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இத்தாவரமானது இந்தியாவில் ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு,கேரளா மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களிலும் ஆசியாவில் பாகிஸ்தான், நேபாளம்,ஸ்ரீலங்கா, மியான்மர், லாவோஸ், மலேசியா மற்றும் தென்மேற்கு யூனான் மற்றும் சீனாவிலும் காணப்படுகிறது. ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, தான்சானியா, உகாண்டா,காங்கோ, சேம்பியா, ஜிம்பாவே, போஸ்வானா, மாளவி மற்றும் மசாம்பிக் ஆகிய நாடுகளிலும் பரவலாக காணப்படுகிறது.
இந்த தாவரம் வறண்ட நிலப் பகுதிகளிலும் புல்வெளிகளிலும் இலை உதிர் மரங்களைக் கொண்ட காடுகளிலும் அதிகம் காணப்படுகிறது. 750 மீட்டர் உயரத்தில் மலைப்பகுதிகளிலும் சீனாவில் காணப்படுகிறது.
இவ்விதைகள் நன்கு முற்றிய பருவத்தில் அறுவடை செய்யப்பட்டு உலர்த்தப்படுகிறது. உலர்த்திய விதைகள் பொடியாக அரைக்கப்பட்டு விற்கப்படுகிறது. இவ்விதையின் பொடி,பசையாக அல்லது வடிநீராக மற்ற மருத்துவ தாவரங்களுடன் சேர்த்து உள் மருந்தாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. விதைகளே அதிக அளவில் விற்கப்படுகின்றன.
ஆனால்,முழு விதைகள் காட்டு சீரகம் என்ற பெயரில் விற்கப்படும்போது, இரு வேறு தாவரங்களின் விதைகள் விற்கப்படுகிறது. ஆங்கில பெயரான கேனரி விதைகள் என்று அச்சிடப்பட்டிருப்பின் அவைகள் நம் நாட்டில் கிடைக்கும் காட்டுச் சீரக விதைகள் அல்ல என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். Phalaris canariensis(கேனரி விதைகள்)என அழைக்கப்படும் இது ஒரு வகையான புல்லில் இருந்து பெறப்படுவது.இந்த கேனரி விதைகள் பறவைகளுக்கு உணவாக பயன்படும் விதையாகும்.
சமீப காலங்களில் க்ளூட்டன் அலர்ஜி என்பது பெரும்பாலோருக்கு உள்ளதால் இவ்விதைகள் க்ளூட்டன் ஃப்ரீ உணவாகவும் (மனிதர்களுக்கு) பிரபலமடைந்து வருகிறது. ஆனால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இவ்விதைகள் விற்கப்படும் போது தவறாக காட்டு சீரகம் என்று தமிழ் பெயர் அச்சிடப்படுகிறது. இந்த விதைகள் ரத்த அழுத்தத்தைக் குறைத்தல், அழற்சி எதிர்ப்பு மற்றும் எடை குறைப்பு போன்ற வேறுமருத்துவத் தன்மைகளைக் கொண்டதாக உள்ளது.
எனினும் பல வலைதளங்களும் சரியான வெரோனியா ஆன்சர்மேன்டிகாவின் விதைகளையே காட்டு சீரகம் என்றும் விற்கின்றன. எனவே மருத்துவ பயன்பாட்டிற்காக நாம் விதைகளை வாங்கும் போது ஆங்கில பெயரில் பர்பில் பிலியாபேன் மற்றும் காட்டு சீரகம் என பெயரிடப்பட்ட விதைகளையே வாங்கி பயன்படுத்த வேண்டும். இத்தகைய பல நன்மைகளைக் கொண்ட காட்டு சீரகத்தை சரியானதாக கண்டறிந்து வாங்கி பயன்படுத்தி ரத்தத்தை சுத்திகரித்து , குடற்புழுக்களை அகற்றி, தோல்வியாதிகளில் இருந்து நம்மை காத்து, ஆரோக்கியமாக வாழ்வோமாக.

