
டாக்டர் டி.காமராஜ், எம்.டி,பாலியல் நிபுணர்.
முருகன் எப்போதும் மனைவியை குறைசொல்லி பேசியபடியே இருப்பான். நிற்பது சரியில்லை, நடப்பது நன்றாக இல்லை.மாடர்னாக உடை அணிவது இல்லை. சமைப்பதில் ருசி பத்தவில்லை. இப்படி உப்புக்கு சப்பு இல்லாத விஷயங்களில் மனைவி தேவி மீது குறைசொல்லிக் கொண்டிருப்பான். இவர்களுக்கு ஒன்றாம் வகுப்பு படிக்கும் மகன் உண்டு.அவன் பள்ளித் தேர்வில் குறைவாக மதிப்பெண் எடுத்தால் கூட தேவியை திட்டு வதுதான் முருகனின் வழக்கமானது.
இதைத் தொடர்ந்து, படுக்கையறையில் முருகன் தொட்டால் தேவிக்கு எந்தவிதமான பாலியல் உணர்ச்சியும் வருவது இல்லை. முருகனும் அவளுக்கு மூடு வரவழைக்க பலவிதமாக முயற்சி செய்து பார்ப்பான். படுக்கையில் எந்த உணர்ச்சியும் இன்றி கட்டை போல கிடப்பாள். பாலியல் மருத்துவர் ஒருவரிடம் ஆலோசனைக்கு தேவியை அழைத்துப் போனான். இருவரிடமும் தனித்தனியே பேசிப் பார்த்தார் மருத்துவர். தேவியிடம் விசாரித்த போது தனது கணவன் மீது அவளுக்கு பெரிய கோபம் எதுவும் இல்லை. அந்த ஆசையுடன் முருகன் நெருங்கும்போது எல்லாம் இவளுக்கு அவன் தன் மீது சொன்ன குறைகள் மட்டும் நினைவுக்கு வருவதால் தாம்பத்ய ஆர்வம் இல்லாமல் போய்விட்டதாகச் சொன்னாள்.
தேவியின் மனநலம் முருகனின் குறை கூறும் வார்த்தைகளால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.முருகனுக்கு அறிவுரை சொன்னார் மருத்துவர். மனைவியின் மீது குறை கண்டுபிடிப்பதை நிறுத்திவிட்டு அன்பாகப் பேசும்படி அறிவுறுத்தினார்.
தம்பதிகள் ஒருவரை ஒருவர் மட்டம்தட்டிப் பேசிக் கொள்வது கூட மனநிலையை பாதித்து தாம்பத்ய ஆர்வத்தைக் குறைக்குமா என்றால் கண்டிப்பாக குறைக்கும்.எப்படி?
எவர்மீதும் எப்போதும் குறை சொல்பவர்கள், மட்டம்தட்டிப் பேசுபவர்கள் யார் என்று பாருங்கள்? தன்னம்பிக்கை இல்லாதவர்கள், சுய முனைப்பு இல்லாதவர்கள் மட்டும்தான் அடுத்தவரைக் குறை பேசுவார்கள். இப்படி தம்பதிகள் ஒருவரையொருவர் குறை சொல்லிக் கொண்டிருந்தால் மனரீதியான பாதிப்பு ஏற்பட்டு அடுத்து அவர்களது அந்தரங்கமான தாம்பத்ய வாழ்க்கையையும் பாதிக்கும். மனைவியை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். அவருக்கு தன்னை விட அறிவு இருக்கக்கூடாது என்று பிற்போக்கு எண்ணம் உடையவர்களும் இதே வேலையை செய்கிறார்கள். இப்படி செய்வதால் தம்பதிகள் இருவருக்கும் நஷ்டமே விளையும்.
கணவரை மனைவி, இப்படி மட்டம்தட்டிப் பேசினால் கணவனுக்கு ஏற்படும் மனரீதியிலான பாதிப்பால் பாலுலுறவின்போது ஆண்குறியின் விறைப்புத்தன்மையில் பாதிப்பு ஏற்படலாம். பெண்கள் இவ்வாறான மன பாதிப்பில் தாம்பத்ய உறவில் ஈடுபடும்போது பெண்ணுறுப்பில் சரியான அளவில் திரவம் சுரக்காது. இதனால் உறவு கொள்ளும்போது வலி அதிகமாக இருக்கும்.தாம்பத்யம் என்பது இருவருக்கும் மனமகிழ்ச்சியை தரும் விஷயமாக இருக்க வேண்டும். மனரீதியிலும், உடல்ரீதியாகவும் வலி தரும் அனுபவமாக ஆகிவிடக்கூடாது.
பெண்களுக்கு சம உரிமை தருவது அதிகமாகி வருகிற இந்த காலகட்டத்தில் பெண்களை மட்டம்தட்டி அடக்கிவிடலாம் என நினைப்பது ஒருவகையில் முட்டாள்தனம். கணவன்,மனைவி யாராக இருந்தாலும் குறை கூறி தனது இணையை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம் என்ற எண்ணத்தை அடியோடு விட்டு விட வேண்டும்.
தம்பதிகள் அவர்களுக்குள் இருக்கும் குறையை பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.இந்த விஷயத்தை சரிசெய்து கொள் ளலாமே…என அன்பாகக் கூற வேண்டும்.கணவர் நல்லபடியாக அன்பாக நடந்துகொண்டால் மனைவியும் அப்படியே நடப்பார். இதுதான் இயற்கை. குறைகள் இல்லாத நிறைவான மனிதர்கள் யாரும் உண்டா? இல்வாழ்க்கை என்பது பூத்துக் குலுங்கும் சோலைவனமாக மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் குறைகள் பேசி ஒருபோதும் அதை பாலைவனமாக மாற்றிவிடக்கூடாது.

