
தலை முடியை வாரிக்கொள்வது என்பது இப்பொழுது அரிதாகக் காணப்படுகிறது. கைகளாலே தலை முடியைக் கோதிவிட்டு, அதை அழகு என்று நினைத்துக்கொண்டு அலைகின்ற இளைஞர்கள் நிறையப் பேரை அன்றாடம் பார்க்கலாம்.பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தாய்மார்கள் ஒரு வேளையாவது எண்ணெய் தடவி, வகிடு எடுத்து, தலை வாரி அழகுபடுத்துவது முக்கியமானது.
வகிடு எடுக்கும்போதும், தலை வாரும் போதும் மேலிருந்து கீழ் வாருவதே சாலச் சிறந்தது. தலை வாரும்போது முடி உதிரும். இது அனைத்து வயதினருக்குமே இயல்பான ஒன்று. ‘முடி உதிர்கிறதே’ என்று தலையைச் சரியாக வாராமல் இருந்துவிடக் கூடாது.
பெண் குழந்தையாக இருக்கும்பட்சத்தில் அடி முதல் நுனி வரை நன்றாக வாரிவிடவும். பின்னல் பின்னுவதாக இருந்தால் முடியின் கடைசி நுனி வரை பின்னிவிடவும். இப்படிச் செய்வதால் முடியின் அடர்த்தி மேலிருந்து கீழ் வரை ஒரே மாதிரியாக இருக்கும். மேலும், தலை முடியை ஒழுங்காக வாரிப் பின்னுவதால், பேன், பொடுகு போன்ற தொல்லைகளும் கிட்டத்தில் அண்டாது.
வாரம் இரண்டு முறை நல்லெண்ணெயைச் சூடு செய்து ஆறவைத்த பின், அதை நன்றாகத் தலையில் தேய்த்து, குறைந்த பட்சம் அரை மணி நேரம் ஊற வைத்து, சீயக்காய்தூள் தேய்த்து அலச வேண்டும்.
தரமான சீயக்காய்தூள் தயாரிப்பு முறை!
கடையில் வாங்கும் சீயக்காய்தூளைவிட, வீட்டிலேயே தயாரிப்பது நல்லது; செலவும் மிச்சம். தரமாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்: சீயக்காய் 100 கிராம், கடலைப் பருப்பு 100 கிராம், பயத்தம் பருப்பு 100 கிராம், வெந்தயம் 100 கிராம், வெட்டிவேர் 25 கிராம். (இந்தப் பொருட்களின் விகிதத்தை, அவரவர் தேவைக்கு ஏற்ப அதிகரித்துக்கொள்ளலாம்.)
மேற்கண்டவற்றை வெயிலில் நன்கு காயவைத்து, அரப்பு அரைக்கும் மிஷினில் கொடுத்து, நன்கு நைஸாகப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும். வாரம் ஒருமுறை எண்ணெய்க் குளியலுக்கு, இந்தப் பொடியைத் தேவைக்கேற்பப் பயன்படுத்திக்கொள்ளலாம். அரிப்பு, வியர்வை நாற்றம் நீங்கும். நல்ல வாசனையைக் கொடுப்பதோடு கூந்தலும் பளபளப்பாகும். வெட்டிவேர் வியர்வை நாற்றத்தினைப் போக்கும் என்பது முக்கியமானது. இதை ஆண் குழந்தைகளுக்கும் உபயோகிக்கலாம்.

