
கலைமாமணி டாக்டர்.எஸ்.அமுதகுமார். எம்.டி.
சைக்கிள் ஓட்டுவதன் அருமை பெருமைகள் இன்றைய தலைமுறையினருக்குத் தெரிவதில்லை. சைக்கிள் ஓட்டினால் அது தரக்குறைவு என்று நினைக்கிறார்கள். மேலை நாடுகளில் எத்தனை கார்கள் ஒரு வீட்டில் இருந்தாலும் ஒரு சைக்கிளையும் கண்டிப்பாக வைத்திருக்கிறார்கள். தினமும் உபயோகிக்கவும் செய்கிறார்கள். மற்ற காரியங்களுக்கு சைக்கிள் உபயோகப்படாவிட்டாலும் உடல் நலத்துக்காக சைக்கிளை எல்லாரும் உபயோகித்தே ஆக வேண்டும்.
பெரும்பாலும் நகரங்களில் சைக்கிளின் உபயோகம் குறைந்து விட்டாலும் கிராமங்களில் இன்றைக்கும் சைக்கிளின் உபயோகம் இருக்கத்தான் செய்கிறது.
அன்றாடம் தொழில்,வியாபாரம் செய்பவர்கள் சைக்கிள் ஓட்டுவதால் உடல் ஆரோக்கியம் இயல்பாக கிடைத்துவிடும்.

உடற்பயிற்சிக்காக சைக்கிள் ஓட்டுபவர்கள் சுமார் 15 கிலோமீட்டர் தூரமாவது ஓட்டுவது தேக ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. அதிலும் மணிக்கு சுமார் 20 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டுவதுதான் சிறந்தது. நானும் சைக்கிள் ஓட்டுகிறேன் என்று ஒரு நாள் சைக்கிளை எடுத்தவுடன், மோட்டார் சைக்கிளை முந்துகிறேன் பார் என்று சொல்லி, மிக வேகமாக ஓட்டிச் சென்று, அதற்குப் பிறகு மறுநாள் எழுந்திருக்க முடியாமல் படுத்துக்கிடப்பது சரியல்ல.
தொழில் சம்பந்தமாக தினமும் சைக்கிள் ஓட்டுபவர்கள் வாரத்துக்கு சுமார் 150 கிலோமீட்டரிலிருந்து 200 கிலோமீட்டர் தூரம் வரை சைக்கிள் ஓட்டிவிடுவார்கள். இம்மாதிரி ஓட்டுபவர்களின் உடல் அதிக வேகத்தையும் தாங்கும். அதிக தூரத்தையும் தாங்கும். அதிக நேரத்தையும் தாங்கும்.
சைக்கிள் பந்தயத்துக்கு ஓட்டுபவர்கள்கூட, எடுத்தவுடன் மிக வேகமாக ஓட்டிவிடமாட்டார்கள். தினம் தினம் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வேகத்தைக் கூட்டுவார்கள். நீங்கள் சைக்கிள் ஓட்டினாலோ, வேறு எதாவது கடின உடலுழைப்பு செய்தாலோ அல்லது உடற்பயிற்சியில் ஈடுபட்டாலோ உங்களது உடலிலுள்ள தசைநார்கள் (குறிப்பாக கை, கால்கள், முதுகு, வயிறு) சிறிது சேதமடையும். இது இயற்கை. சேதமடைந்த இந்த தசைநார்கள் கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி பழைய நிலைக்கு மீண்டு வர, சிறிது கால அவகாசம் தேவை. மோட்டார் சைக்கிளைக் கூட நாம் சற்று அதிக தூரமும் அதிக நேரமும் ஓட்டிவிட்டால் எப்படி கை, கால் தசைநார்கள் சோர்ந்து போய்விடுமோ, அதுபோலவே சைக்கிள் ஒட்டினாலும் அதே சோர்வு;அதே வலி உடலில் ஏற்படும்.
ஒருமுறை இந்த மாதிரி தசை நார்கள் சோர்வடைந்து, சேதமடைந்து பின் குணமாகி மீண்டு வந்தால், அதே தசைகள் முதல் முறையை விட இந்த முறை சற்று பெரிதாகவும்,அதிக சக்தி உடைய தசைகளாகவும் மாறிவிடும்.
தினமும் சைக்கிள் ஒட்டினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
1.தொடர்ந்து சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு இருதய நோய் பாதிப்பு குறையும்.
2. சைக்கிள் ஓட்டும்போது கால்களிலுள்ள பெரிய தசைகள் நன்றாக சுருங்கி விரிகிறது. இதனால் இருதயத்துடிப்பு அதிகமாகிறது.ரத்த ஓட்டம் உடலெங்கும் அதிகமாகிறது.
3. இருதயத்தின் திறனை, சக்தியை அதிகப்படுத்துகிறது.
4.உடலெங்கும் உள்ள தசைகளின் சக்தியை அதிகப்படுத்துகிறது.
5.கை, கால், இடுப்பு, முதுகெலும்பு, மூட்டு களின் இயக்கத்தை அதிகப்படுத்துகிறது.
6.எலும்புகளை உறுதியாக்குகிறது.
7.உடலில் உள்ள அதிக கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
8.வயிற்றில் உள்ள வேண்டாத, தேவையில்லாத கொழுப் பைக் குறைக்க உதவுகிறது. சிக்ஸ் பேக், எயிட் பேக் போன்ற எல்லா பேக்குகளும் சைக்கிளை தினமும் ஓட்டினாலே வந்து விடும்.
9.உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
10.நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
11.பக்கவாதம், அதிக ரத்த அழுத்தம், மாரடைப்பு, புற்றுநோய், சர்க்கரை நோய், உடல் பருமன் போன்றவைகள் வராமல் உடலைப் பாதுகாக்கிறது.
12.ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது.
13.சுத்தமான காற்றை தினமும் சுவாசிக்க வாய்ப்பு கிடைக்கிறது.
14.இதனால் நுரையீரலின் செயல்பாடு அதிகமாகி, நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
உலகம் முழுவதும் சுமார் 200 கோடி மக்கள் தினமும் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். கார், மோட்டார் சைக்கிள் வைத்திருந்தாலும் தினமும் குறைந்தது 15 நிமிடமாவது சைக்கிள் ஓட்டுவதற்கு ஒதுக்குங்கள். சந்தோஷத்துக்காக, ஜாலிக்காக, பொழுது போக்குக்காக, வேலை நிமித்தத்துக்காக, கடைக்குப் போவதற்காக, பக்கத்துத் தெருவிலிருக்கும் நண்பரைப் பார்ப்பதற்காக இன்னும் பல காரியங்களுக்காக நீங்களே ஏதாவதொரு காரணத்தை ஏற்படுத்திக் கொண்டு, ஒரு ரூபாய் கூட செலவே இல்லாத, தினமும் சைக்கிள் ஓட்டும் பழக்கத்தை இன்றே ஆரம்பியுங்கள்.
சைக்கிள் ஓட்டம் உங்கள் வாழ்நாள் முழுவதும் நன்றாக இருந்தால்… உங்கள் ரத்த ஓட்டமும் வாழ்நாள் முழுவதும் நன்றாக ஓடும்.ஆயுள் அதிகரிக்கும்.மன அமைதி கிடைக்கும். ஆரோக்கிய வாழ்க்கை அமையும்.

