
டாக்டர் சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர்
கொரோனா பாதிப்பால் வருமானம் இழந்து வட்டி கட்ட முடியாமல் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தற்கொலைக்க யார் காரணம்?
கடந்த ஆண்டில் மட்டும் உலகம் முழுக்க கிட்டத்தட்ட 10 லட்சம் தற்கொலைகள். பெரும்பாலானோர் 15இல் இருந்து 29 வயதுடையோர்.
15 வயதில் ஒரு வளரிளம் குழந்தை தற்கொலையைப் பற்றி சிந்திக்கிறது என்பதையே நம் மனதால் ஏற்க முடியவில்லை. ஆனால், அதிகபட்சம் தற்கொலைகள் இந்த வயதில்தான் நிகழ்கின்றன. ”எனக்கு ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு” என ஏழெட்டு வயது மகனோ/மகளோ சொல்லும்போது அது நமக்கு நகைப்புக்கு உரியதாக இருக்கிறது. அந்த வார்த்தைகளின் பின்னுள்ள ஓர் ஆழ்ந்த மனவலியை நாம் உணரத் தவறுகிறோம்.
தற்கொலைகள் தொடர்பாக ஒரு மேலோட்டமான சிந்தனைதான் நம் எல்லோருக்குமே இருக்கிறது. தற்கொலை எண்ணம் இருப்பதாக ஒருவர் சொல்லும்போது, நாம் நம்மையும் அறியாமல் நம்மீது கர்வம் கொள்கிறோம். ஒரு பலவீனமான மனிதருக்கு முன், நாம் மிகுந்த பலசாலியாக; வாழ்க்கையைப் புரிந்துகொண்டவராக, வாழ்க்கையின் மீதான பதற்றங்கள் அற்றவராக நம்மை நினைத்துக் கொள்கிறோம். அந்த மமதையில் தற்கொலையின் அவலம் குறித்து ஒரு நீண்ட போதனையை பாதிக்கப்பட்டவரிடம் நிகழ்த்துகிறோம். அவரது பலவீனங்களை அவரிடமே பட்டியலிடுகிறோம். தற்கொலை ஒரு கோழைத்தனம் என பரிகசிக்கிறோம். தற்கொலை எந்தப் பலனையும் தரப்போவது இல்லை என்ற அரிய உண்மையை அவருக்கு அறிவிக்கிறோம்.
தற்கொலையைத் தடுக்க பாதிக்கப்பட்டவரிடம் பேசுவது அத்தனை முக்கியமானது என நமக்குப் போதிக்கப்பட்டுள்ளது. எனவே தற்கொலை எண்ணம் கொண்டோரிடம் நாம் பேசிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் எப்போதாவது கேட்பதற்குத் தயாராக இருந்தோமா?
நிச்சயமற்ற பருவ நிலைகளை நம்பியிருக்கும் விவசாயத்தில், தனது வாழ்வாதாரம் முழுவதையும் முதலீடு செய்யும் ஒரு விவசாயி, பருவ மழை பொய்க்கும்போதும் அளவுக்கதிகமாகப் பெய்து விளைச்சலை நாசமாக்கும்போதும், அரசாங்கம் முன்னெப்போதையும் விட தீவிரமாக எங்களை அரவணைக்க வேண்டும்; தங்களின் குறைந்தபட்ச வாழ்வாதாரத்தையாவது உறுதி செய்ய வேண்டும் என சொல்லும்போதும் நாம் நமது காதுகளைத் திறந்து வைத்திருந்தால், வருடத்திற்கு கிட்டத்தட்ட இருபதாயிரம் விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுத்திருக்கலாமே?
பூச்சி மருந்தை மறைத்து வைத்து விட்டால் விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுத்து விடலாம் என இன்னமும் நாம் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம் இல்லையா?
மதிப்பெண்களின் மீதான கிளர்ச்சியில், நம் குழந்தைகள் மீது நாம் வைத்திருக்கும் போலியான மதிப்பீடுகளின் அழுத்தம் தாங்காமல் அவர்கள் கதறும்போது நாம் செவி கொடுத்துக் கேட்டோமா? தேர்வு முடிவுகள் வெளியாகும் ஒரு நாள் மட்டும் பாஸிட்டிவ்வாக எடுத்துக்கொள்ளச் சொல்லி அறிவுரை வழங்குகிறோம்.
எந்தப் பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வல்ல என்பது தற்கொலையாளர்களுக்கும் தெரியும். பிரச்சனை தீர்ந்துவிடும் என நினைத்து அவர்கள் உயிரை மாய்த்துக்கொள்வது இல்லை. ஆனால் பிரச்சனையை எதிர்கொள்வதற்கான நம்பிக்கைகள் இருண்டு போன தருணத்திலேயே அவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். ஒரு வேளை அந்தக் கணத்தில், தங்களின் மன வலியை இறக்கி வைக்க, தன் வேதனையைப் பகிர்ந்துகொள்ள ஒரு தோழமையான ஜீவன் அருகில் இருந்திருந்தால் அந்தத் தற்கொலை ஒத்தி வைக்கப்பட்டிருக்கலாம் அல்லது ரத்து செய்யப்பட்டிருக்கலாம்.
ஓர் ஆரோக்கியமான சமூகமாக நாம் தோல்வி அடைந்துவிட்டதைத்தான் ஒவ்வொரு தற்கொலையும் நமக்கு உணர்த்துகிறது. ஆனால் நாம், நமது தோல்விகளை அவ்வளவு எளிதில் ஒப்புக் கொள்வதில்லை. மாறாக, தற்கொலை. செய்து கொண்டவர் மீதே அதற்கான பழியையும் சுமத்திவிடுகிறோம். குற்றவுணர்ச்சியின் சிறு எச்சம் கூட நம்மீது படிவதை நாம் விரும்புவதில்லை.
உண்மையை சொல்லப்போனால், நாம் அத்தனை தற்கொலைகளையும் இதே கண்ணோட்டத்தில்தான் பார்க்கிறோம். நம்மைப் பொறுத்தவரையில் அத்தனை தற்கொலையும் ஒன்று. வேறு வேறு புறக்காரணங்கள் சொல்லப்பட்டாலும் தனிப்பட்ட பலவீனங்கள் மட்டுமே அவற்றுக்கெல்லாம் முதன்மையான காரணம் என தீர்க்கமாக நம்புகிறோம். இந்த சிந்தனை ஓட்டம் மாறாத வரையில் தற்கொலைகளை நம்மால் நிச்சயமாகத் தடுக்க முடியாது.
வாழ்க்கையின் மீதான மற்றும் வாழ்தலின் மீதான தீராத காதலில் இருக்கும் ஒரு மனிதன், ஒரு துரோகத்தின் அல்லது ஏமாற்றத்தின் பொருட்டு தற்கொலையை நாடிச் செல்வதையும், வாழ்க்கையின் மீதான தீவிர வெறுப்பில் ஒருவன் மரணத்தை நாடிச் செல்வதையும் நாம் எப்படி ஒரே அளவில் மதிப்பிட முடியும்? சுதந்திரமும், சமத்துவமும், நீதியும், வாழ்வாதாரங்களும், வாய்ப்புகளும் ஒரே மாதிரி இல்லாத ஒரு சமூகத்தில், தற்கொலைகளுக்கு மட்டும் எப்படி ஒரே காரணத்தை சொல்ல முடியும்?
எமில் டர்க்கீம் என்ற தத்துவயியலாளர், தற்கொலை என்பது தனிமனித பலவீனம் அல்ல, அது ஒரு சமூகத்தின் தோல்வி என்கிறார். ஒவ்வொரு தற்கொலையிலும், சமூகம் ஏதோ ஒரு வகையில் தனது சித்தாந்தத்திலும் அதன் அடிப்படைக் கட்டுமானத்திலும் தோல்வி அடைகிறது என்கிறார். அதனால் ஒவ்வொரு தற்கொலையில் இருந்தும், படிப்பினைகளை எடுத்துக் கொண்டு அந்த சமூகத்தை மீள்கட்டுமானம் செய்வது அவசியம் என்பது அவரது வாதம்.
ஆனால் நாம் ஒவ்வொரு தற்கொலையையும் தனிமனித பலவீனமாக நிறுவுவதில் மெனக்கெட்டுக் கொண்டிருக்கிறோம். ஒரு தனிமனிதனின் மூளையில் ஏற்படும் சமநிலையற்ற ரசாயன மாற்றங்களையே அத்தனை தற்கொலைகளுக்கும் காரணம் என நிறுவ முயல்கிறோம். தற்கொலை செய்து கொள்பவர்களில் சுமார் இருபது சதவீதம் பேர் ஏதாவது ஒரு தீவிர மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற தரவு உண்மைதான். ஆனால் எல்லா தற்கொலைகளுக்கும் மனநோயைக் காரணமாக்கும் போக்கு ஆபத்தானது.
அன்பு, பரிவு, பாசம், நேசம், கருணை, ஆதரவு போன்ற உணர்வுகளை ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம்தான் எதிர்பார்க்க முடியும். ஒரு சமூகத்தின் கட்டமைப்பே, இதுபோன்ற சக மனிதர்களின் சுயநலமற்ற அன்பிலும் இணக்கத்திலும்தான்தான் இருக்கிறது. இங்கு ஒருவன் தன்னை நிராதரவாக உணரும்போது, பிறழ்வான அவனது மனம்தான் அதற்குக் காரணமாய் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பிறழ்வான இந்த சமூக அமைப்பும் காரணமாக இருக்கலாம். சொல்லப்போனால் அதுதான் மிக முக்கிய காரணம்.
ஒரு முதிர்ச்சியடைந்த சிவில் சமூகம், ஒவ்வொரு தற்கொலையிலும் தன்னை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதற்கு நம் கேளா செவிகளைத் திறந்து வைக்க வேண்டும். நாலு வார்த்தை பேசுவது முக்கியம் போலவே, நாலு வார்த்தை பேசுவதைக் கேட்பதும் இங்கு முக்கியம்.

