ஆண் மெனோபாஸ் – 6

செலின் ராய், உறவுகள் மற்றும் வாழ்வியல் மேம்பாட்டு நிபுணர்.

தன் வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும், குறிப்பாகத் தனது மெனோபாஸ் காலகட்டத்தில் உணர்வு ரீதியிலான ஆதரவு அல்லது ஆறுதல் எப்படி ஒரு பெண்ணுக்கு ஆணிடமிருந்து தேவைப்படுகிறதோ, அதே போல்தான் ஒரு ஆணுக்கும் பெண்ணிடமிருந்து தேவைப்படுகிறது.ஒரு ஆண் வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாவிட்டாலும் கூட,அல்லது ஒரு பெண்ணை உடல்ரீதியிலாகத் திருப்திபடுத்துவதும்,பல பெண்களை உடல் ரீதியாகச் சொந்தமாக்கிக் கொள்வதும்தான் தனது ஆண்மைக்கு அடையாளம் அல்லது வெற்றி என்று இந்த உலகிற்குக் காட்டிக்கொண்டாலும் கூட உண்மை அதுவல்ல.

ஒரு பெண் தனது உணர்வுகளைத் திருப்திப்படுத்த ஒரு ஆணை எவ்வாறு சார்ந்திருக்கிறாளோ அல்லது எதிர்பார்க்கிறாளோ அதேபோல்தான் ஒரு ஆணிற்கும் உணர்வுரீதியிலான எதிர்பார்ப்புக்களும், தேவைகளுமிருக்கின்றன.அவனும் தன்னை விட மேம்பட்ட நிலையிலுள்ள அல்லது தனக்குச் சமமான உணர்வுகள் மற்றும் சக்தி அதிர்வலைகளுடனிருக்கும் ஒரு பெண்ணை உணர்வுரீதியாகச் சார்ந்திருக்கிறான். ஆண்,பெண் இருவருமே அடிப்படையில் “மனிதர்கள்” என்ற பொதுவான ஒரு பிறவிதானே…?

தன்னைவிட சக்தி அதிர்வலைகள் (Higher Energy Level) அதிகமாயுடைய ஒரு நபரிடமிருந்துதான் இன்னொருவரால் இந்த உணர்வு ரீதியிலான ஆதரவையும், ஆறுதலையும் பெற முடியும்.ஒரு பெண் தன் கணவனிடமிருந்தோ அல்லது தன்னை விட அதிகமான உணர்வு நிலை (Consciousness level and Energy level) அதிர்வலைகளைக் கொண்ட வேறோரு ஆணிடமிருந்தோ உணர்வியல் ரீதியிலான அன்பையும், ஆதரவையும், ஆறுதலையும் பெற்றுக்கொள்ளும் போது அதை அவனிடம் வெளிப்படுத்துகிறாள்.

அதற்காக மிகுந்த நன்றியுடனுமிருக்கிறாள். அதை அனுபவிக்கிறாள்; ஏற்றுக்கொள்கிறாள். அவன் தனக்குக் கொடுக்கும் அன்பையும், ஆதரவையும் அவனுக்கு மீண்டும் திருப்பிக் கொடுக்க முயற்சிக்கிறாள். முழுமையாக முடியாவிட்டாலும் கூட, அதில் பாதியையாவது அவனுக்குத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டுமென்று நினைத்து அதற்காகக் கடும் முயற்சிகளையும் எடுக்கிறாள்; பிரயத்தனப்படுகிறாள். அதனால்,அங்கு அவர்களுக்கிடையே நிலவும் அன்பும், காதலும், அனுசரணையும், ஆதரவும் பரஸ்பரமானதாக இருக்கிறது.

உணர்வு ரீதியிலான இந்தப் பரிமாற்றங்கள் ஒருவர் மட்டும் கொடுத்து இன்னொருவர் பெற்றுக்கொள்வது என்று மட்டும் இல்லாமல், ஒருவழிப்பாதையாக இல்லாமல், எந்தவிதமான பேரங்களுமின்றி, ஒப்பந்தங்களுமின்றி இயல்பாகவே கொடுத்து வாங்கும் ஒரு உணர்வுப் பரிமாற்றமாகயிருக்கிறது.ஒரு பெண்,ஒரு ஆண் இவ்வாறு தனக்குக் கொடுக்கும் அவனது சக்தி அதிர்வலைகளைப் பெற்றுக்கொண்டு, அதை அங்கீகரிக்கும் போது,அவனது உடலில் “டோஃபோமின்” சுரப்பது அதிகரிக்கிறது. அதனால்,அவன் தன்னை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒருவனாகவும், மகிழ்ச்சிகரமானவனாகவும் உணர்கிறான். அவளுக்கு இன்னும் அதிக அன்பையும், பாசத்தையும், அக்கறையையும், அன்பையும், ஆதரவையும் கொடுக்கிறான்.அவன் அவளுக்குக் கொடுக்கும் அந்த நேர்மறையான உணர்வலைகளும், அங்கீகாரங்களும், பாராட்டுதல்களும், அன்பும்,அக்கறையும், ஆதரவும் அந்தப் பெண்ணின் உடலிலும் “டோஃபோமின்” சுரப்பை அதிகரிக்கச் செய்து அவளை மகிழ்ச்சியான ஒரு பெண்ணாக வலம் வரச் செய்கிறது.

இயல்பான மனநிலையிலுள்ள, இயல்பான ஆரோக்கியமுள்ள இருவருக்கிடையே
இப்படித்தான் நிகழும். ஒரு ஆண் தன்னைச் சார்ந்திருக்கும் பெண்ணை விட,தான் அதீத சக்தி அதிர்வலைகளுடன் இருக்கும்போது, அதற்காக அவன் மிகவும் பெருமையடைகிறான். தன்னை ஒரு மிகச் சிறந்த ஆணாக உணர்கிறான்.அதே சமயம்,தன்னை விட அதிக சக்திவாய்ந்த ஒரு பெண்ணிடம் ஈர்க்கப்பட நேரிடும் போது அவன் அந்த சக்தி அதிர்வலைகளை அவளிடமிருந்துப் பெற்றுக்கொள்ள விரும்புகிறான்.ஆனால், அவ்வாறு தான் ஒரு பெண்ணிடமிருந்து சக்தி உணர்வலைகளைப் பெற்றுக்கொள்வதை அவன் ஒப்புக்கொள்ளவோ, பகிரங்கமாகத் தெரிவிக்கவோ விரும்புவதில்லை. அப்படிச் செய்தால் தான் அவளை விடக் கீழேயுள்ள உணர்வுநிலையிலுள்ளோம் என்பதை ஒப்புக்கொண்டதைப் போலாகிவிடுமே,இந்த உலகத்திற்குக் காட்டிக்கொள்வதைப் போலாகிவிடுமே என்று ஒரு சராசரி ஆண் பயப்படுகிறான்.ஆனால், மனநிலையில், உணர்வு நிலையில் மேம்பட்ட ஒரு ஆண் அப்படிச் செய்ய மாட்டான்.ஒரு பெண்ணிடமிருந்து தனக்கு சக்தி கிடைக்கிறது என்பதை பகிரங்கமாக ஒப்புக் கொள்வான்.அதைப் பெருமையான ஒரு விஷயமாகக் கருதுவான்.. அதிலிருக்கும் உண்மைத் தன்மையை உணர்ந்திருக்குமளவிற்கு அவனது உணர்வு நிலை (Consciousness level)மேம்பட்டதாயிருக்கும்.தன்னுடன் உணர்வுப் பரிமாற்றத்திலிருக்கும் அந்தப் பெண்ணை முன்னிலைப்படுத்துவான்.இத்தகைய மனநிலையிலுள்ள ஆண்கள்தான் மனதளவிலும்,தொழில் ரீதியாகவும் வெற்றி பெறுகிறார்கள்.

ஆனால்,நம் சமூகத்தில் பல ஆண்கள் அவ்வாறு ஒப்புக்கொள்ளாமலிருப்பதோடு மட்டுமல்லாமல், அவளிடமிருந்து சக்தியையும் பெற்றுக்கொண்டு அவளை உதாசீனப்படுத்தவும் செய்வார்கள்.அல்லது தன்னை ஒரு “கொடுக்கும் ஆணாக” உணர,தன்னைவிட சக்தி அதிர்வலைகள் குறைந்த வேறொரு பெண்ணைத் தேடிச் செல்வார்கள். குறிப்பாக,” ஆண் மெனோபாஸ்” காலகட்டத்தில் பெரும்பாலும் இதுதான் நிகழ்கிறது.அப்படி அவன் செய்யும்போது, அவனை விட சக்தி அதிர்வலைகளில் மேம்பாட்ட நிலையிலிருக்கும் அந்தப் பெண் அவனை விட்டு விட்டுச் சென்று விடுகிறாள். இதனால்தன் ஒரு ஆண் மெனோபாஸ் அடையும் காலகட்டத்தில் பெரும்பாலும் குடும்பங்களில் பிரச்னைகள், தற்காலிகப் பிரிவுகள் அல்லது நிரந்தரப் பிரிவுகள் அல்லது விவாகரத்துக்கள் அதிகமாகின்றன.

ஆனால், ஆரோக்கியமான மனநிலையிலுள்ள ஒரு ஆண்,தன்னை விட அதீத சக்தி உணர்வலைகள் ஒரு பெண்ணிடமிருந்து
கிடைக்கும் போது அதை ஏற்றுக்கொண்டு. அங்கீகரிக்கிறான்.அதன் மூலம் அவளைத் தக்க வைத்துக்கொள்கிறான். இப்படிப்பட்ட மனநிலையையும், நடத்தையையும் கொண்டுள்ள ஆண்களுக்கு, “ஆண் மெனோபாஸ்” என்பது ஒரு பெரிய பிரச்னைக்குரிய விஷயமாகவே இருக்காது.ஆண்களுக்கு சிறு வயதிலிருந்தே இந்த விஷயங்களைக் கற்றுக்கொடுத்து விட்டீர்களென்றால், எப்படித் தன் துணைவியை சரிவர நடத்துவது, அவளிடமிருந்து எப்படி நேர்மறையான அதிக சக்தி அதிர்வலைகளைப் பெற்றுக்கொள்வது, எப்படி தொடர்ந்து அவளிடமிருந்து நேர்மறையான அதிர்வலைகளையும் ஆதரவையும் பெறுவது, எப்படி அவற்றைத் தக்க வைத்துக்கொள்வது, எப்படித் தனக்கு நிகழும் “ஆண் மெனோபாஸ்” நிலையை ஆரோக்கியமாக எதிர்கொண்டு கையாள்வது என்பனவற்றையெல்லாம் அவன் மிகச் சரியாகப் புரிந்துகொள்வான்.

பெண்கள் இங்கே கையாள வேண்டிய ஒரு யுக்தி என்னவென்றால், உங்கள் துணைவர் உங்களிடமிருந்து நேர்மறையான சக்தி அதிர்வலைகளைத் தொடர்ந்து பெற்றுக்கொண்டேயிருக்கிறார்,ஆனால் அவற்றை ஒப்புக்கொள்வதில்லை,
அங்கீகரிப்பதில்லை, மாறாக அவற்றைப் பெற்றுக்கொளவ்தை மட்டும் செய்து கொண்டு, அதை ஒப்புக்கொள்வதை மரியாதைக் குறைவாக, இழிவாகக் கருதுகிறார் என்றால், உங்களிடமிருந்து தனக்குத் தேவையான நேர்மறை அதிர்வலைகளைப் பெற்றுக்கொண்டு, தன்னை விடக் கீழான சக்தி அதிர்வலைகளோடு இருக்கும் ஒரு பெண்ணுக்கு அவற்றைக் கடத்துவதில், கொடுப்பதில் ஈடுபடுகிறார் என்றால் உடனடியாக அவருக்கு நேர்மறையான சக்தி அதிர்வலைகளைக் கொடுப்பதை நிறுத்தி விடுங்கள். இடைவெளியைக் கடைபிடியுங்கள். பரிதாபம் பார்க்காதீர்கள்.

ஏனெனில்,இந்த மனப்போக்கு உள்ள ஆண்கள் “உங்களது சக்தியை அப்படியே உறிஞ்சிவிடும் ஒரு ஒட்டுண்ணியைப் போன்றவர்கள். காட்டேரியைப் போன்றவர்கள்” ஆங்கிலத்தில் இவர்களை Energy vampires அதாவது “ஆற்றல் காட்டேரிகள்” என்போம். வெளியிடங்களிலோ அல்லது நீங்கள் வேலை பார்க்குமிடங்களிலோ இப்படிப்பட்ட நபர்களிருந்தால் நீங்கள் அவர்களிடமிருந்து நிரந்தரமாக விலகிவிடலாம்.அல்லது இடைவெளியைப் பின்பற்றலாம். அவர்களை நேரடியாகப் பார்க்கும் நேரத்தை மிகவும் குறைத்துக் கொள்ளலாம்.

ஆனால்,ஆண் மெனோபாஸ் நிலையை அடையும் காலகட்டத்தில் உங்கள் குடும்பத்திலுள்ள வாழ்க்கைத்துணையே இப்படி உங்களிடமிந்து சக்தியை உறிஞ்சும் ஒரு நபராக இருக்கும்போது, உங்களால் அவரை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து செல்லும் சூழ்நிலை இல்லாவிட்டாலும் கூட, குறைந்தபட்சம் உங்களிடமிருந்து நேர்மறையான சக்தி அதிர்வலைகள் உறிஞ்சப்படுவதைத் தடுத்து நிறுத்தி விடுங்கள்.இது இந்தக்காலக்கட்டத்தில் நீங்கள் கட்டாயம் செய்தாக வேன்டிய ஒரு தற்காப்பு நடவடிக்கை அல்லது செயல்முறையாகும்.

உங்கள் மனதிற்குப் பிடித்த வேலைகளைச் செய்வது,சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவுகளைத் தயாரித்து சாப்பிடுவது,நன்றாகத் தூங்கி ஓய்வெடுப்பது, பல இடங்களுக்குப் பயணம் செய்வது,பல புதிய மனிதர்களை புதிய ஊர்களில் அல்லது இடங்களில் தள்ளி நின்று கவனிப்பது,சுய அன்பை அதிகரித்துக் கொள்ளும் விதமாக நன்றாக உங்களைக் கவனித்துக்கொள்வது, இயற்கையை ரசிப்பது, தோட்டம் வளர்ப்பது, ஏதாவது கலைகளில் ஈடுபடுவது,உங்கள் குழந்தையுடன் நேரத்தைச் செலவழிப்பது மற்றும் அழகாக உடுத்திக்கொள்வது என்று நீங்கள்
பலவிதங்களில் உங்கள் சக்தி அதிர்வலைகளை அதிகரித்துக் கொள்ளும் செயல்களில் ஈடுபடுங்கள்.

குறிப்பாக நிறைய தன்ணீர் மற்றும் தண்னீர் சத்துள்ள பழங்களையும், காய்கறிகளையும் சாப்பிடுங்கள்.இந்த அனைத்து விஷயங்களையும் “ஆண் மெனோபாஸ்” நிலையிலுள்ள ஆண்களும் செய்யலாம்;செய்தாக வேண்டும். அப்போதுதான்,நீங்கள் பிறரிடமிருந்த,குறிப்பாக உங்கள் வாழ்க்கைத் துணைவியிடமிருந்து நேர்மறையான சக்தியைத் தேடி அலையாமல், எதிர்பார்க்காமல் உங்களுக்கு நீங்களே அதை உருவாக்கிக்கொள்ள முடியும்.

நாற்பது,ஐம்பத்தைந்து வயதில் பெண்களின் உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் அளவில் மாற்றங்கள் ஏற்படுவதைப்போல, குறைவதைப்போல ஆண்களின் உடலில் ”டெஸ்டோஸ்டீரானின்” அளவும் குறைகிறது. உடம்பில் கொழுப்பின் அளவும் அதிகரிக்கிறது. இதனால்தான் திடீரென உடல் எடை அதிகரித்தல்
மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்னைகளும் இந்த “ஆண் மெனோபாஸ்” காலகட்டத்தில் பெரும்பாலான ஆண்களுக்கு ஏற்படுகிறது.

இவ்வாறு டெஸ்ட்டேஸ்டீரோன் அளவு குறைந்துவிடும் போது ஆண்களின் உடலில் விந்தணுக்களின் உற்பத்தியும்,அவை நகரும் தன்மையும் குறையும்.இதனால் ஆண்மைக்குறைவு ஏற்படும்.தொடர்ச்சியான மன அழுத்தம், ஆரோக்கியக் குறைவு போன்றவற்றால் “கார்டிசாலின்” அளவு உயரும்.அப்படி அது அதிகரிக்கும்போது, ஆண்மைக்குறைவு ஏற்படுவதென்பது மிக இயல்பான ஒரு விஷயம்தான்.எவ்வளவு அதிகமாக,எவ்வளவு நன்றாக ஓய்வெடுத்த பிறகும் அவர்கள் மிகவும்
உடல் சோர்வாக உணர்வார்கள்.இதுவும் டெஸ்ட்டோஸ்டீரான் அளவு குறைவாயிருக்கக் கூடும் என்பதற்கான ஒரு அறிகுறிதான். “டெஸ்ட்டோஸ்டீரான்” அளவு குறையும்போது தூக்கமின்மையும், உடற்சோர்வும் ஏற்படுவதென்பதும் மிகவும் இயல்பானதொரு விஷயம்தான்.கார்டிசால் (Cortisol) ஹார்மோன் மனிதர்களின் தூக்கத்தைச் சீராக்க, சமநிலையில்
வைத்துக்கொள்ள உதவுகிறது. தொடர்ச்சியான மன அழுத்தம்,கார்டிசாலின் அளவை அதிகரித்து விடும்.இதனால் சோர்வு, நரம்புத்தளர்ச்சி போன்றவை உண்டாக நேரிடலாம்.

ஆனால், இவற்றையெல்லாம் நீங்களே தீர்மானித்துக் கொள்ளாமல்,ஒரு முடிவிற்கு வந்து விடாமல் தகுந்த உடலியல் மற்றும் பாலியல் மருத்துவரிடம் சென்று தகுந்த ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

இந்தக் கட்டுரைத் தொடர், “ஆண் மெனோபாஸ்” என்று ஒரு நிலை இருக்கிறது. ஒரு பிரச்னை இருக்கிறது. ஆனால்,அது நம் சமூகத்தில் மூடி மறைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலை குறித்து நீங்கள் விழிப்பாயிருங்கள் என்று உங்களுக்கு உணர்த்துவதற்குத்தான். உங்களுக்கு இந்த “ஆண் மெனோபாஸ்” நிலை குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு மட்டும்தான்.மற்றபடி இந்த நிலையை நீங்கள் சரியாகக் கையாள, உங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சிக்குள், ஆரோக்கியத்திகுள் இந்த ” ஆண் மெனோபாஸ்” நிலையால் ஏற்படும் மாற்றங்கள் கும்மியடிக்காமலிருக்க வேண்டுமென்றால்
தகுந்த மருத்துவரிடம் நீங்கள் ஆலோசனை பெறுவதுதான் சரியானது.

ஏனென்றால்,ஒவ்வொரு தனி நபரின் உடல் நிலையும் வேறு; மனநிலையும் வெவ்வேறு.அதனால் நேரடியாக உங்களின் உடல் நிலையை மற்றும் மனநிலையைப் பரிசோதித்துப் பார்த்து மட்டுமே ஒரு மருத்துவரால் உங்களுக்கு மிகச் சரியாக,துல்லியமாக வழிகாட்ட முடியும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
இந்த தொடரை படித்து பயன்பெற்றவர்களுக்கும், உற்சாகம் தந்த அனைத்து வாசகர்களுக்கும் நன்றி!.