
– டாக்டர்.கு.கணேசன், பொதுநல மருந்துவர்
மழைக்காலம் தொடங்கிவிட்டது. தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்து, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங் களில் கனமழை பெய்து, மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்துவிட்டது. இதனால் சுற்றுப்புறம் மாசடைந்து, குடிநீர், கழிவுநீர், மழைநீர் என எல்லாமே கலந்து கொசுக்களும் நோய்க்கிருமிகளும் வாழ வசதி செய்துவிட்டன. இதன் விளைவாக, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, காலரா, சீதபேதி, டைபாய்டு, மஞ்சள் காமாலை என்று பல தொற்று நோய்கள் வரலாம்.
வழக்கத்தில் பருவநிலை மாறும்போது, அதுவரை உறக்க நிலை யில் இருக்கிற பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் விழித்தெழுந்து, வீரியம் பெற்று மக்களைத் தாக்கத் தயாராகின்றன. மக்கள் மழையில் நனைகின்றபோது இந்தக் கிருமிகள் பரவுவதற்கு மிகவும் ஏதுவான சூழல் உருவாகிறது. அப்போது ஊட்டச்சத்து குறைந்தவர்கள், நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்தவர்கள் எளிதில் பாதிக்கப்படுகிறார்கள். இதனால்தான் மழைக்காலத்தில் நோயால் அவதிப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
வைரஸ் காய்ச்சல்
மழைக்காலத்தில் பரவுகின்ற காய்ச்சல்களில் முதன்மையானது, ஃபுளு காய்ச்சல். இது ஒன்றுக்கு மேற்பட்ட வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. கடுமையான காய்ச்சல், தலைவலி, உடல்வலி, கை கால் வலி. தும்மல், மூக்கு ஒழுகுதல், சளி, இருமல், தொண்டை வலி போன்றவை இதன் அறிகுறிகள். இந்தக் காய்ச்சலுக்கு எந்த ஒரு சிறப்புச் சிகிச்சையும் இல்லை. காய்ச்சலை குறைக்க ‘பார சிட்டமால்’ மாத்திரை உதவும். தும்மல், மூக்கு ஒழுகுதல் போன்ற தொல்லைகளைக் கட்டுப்படுத்த ‘ஹிஸ்டமின் எதிர்ப்பு மருந்துகள்’ பலனளிக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி சரியாக இருந்தால், ஒரு வாரத்தில் இது தானாகவே சரியாகிவிடும். அடுத்தவர்களுக்கு இது பரவாமலிருக்கச் சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் வந்தால் வலிப்பும் வந்துவிட லாம். எனவே, உடனடியாகக்காய்ச்சலைகுறைக்கநடவடிக்கை எடுக்க வேண்டும். திரவ உணவுகளையும் சுத்தமான குடிநீரையும் தரவேண்டியது முக்கியம்.
வாந்தி, வயிற்றுப்போக்கு, காலரா…
பாக்டீரியா மற்றும் ரோட்டா வைரஸ் கிருமிகள் மாசடைந்த குடிநீர் மற்றும் உணவு மூலம் நமக்குப் பரவுவதால் வாந்தி,வயிற்றுப்போக்கு,காலரா ஏற்படுகின்றன. ஈக்களும் எறும்புகளும் இந்தக் கிருமிகளை நமக்குப் பரப்புகின்றன. நோயாளியின் உடல் இழந்த நீரிழப்பைச் சரி செய்வதே இதற்குத் தரப்படும் சிகிச்சை பின் நோக்கம். எனவே, பாதிக்கப்பட்ட நபருக்கு சுத்தமான குடிநீரை அடிக்கடி குடிக்கத் தர வேண்டும். உப்பும் சர்க்கரையும் கலந்த தண்ணீரையும் தரலாம். அல்லது ‘எலெக்ட்ரால்’ பவுடர்களில் ஒன்றைத் தரலாம். இதில் நோய் கட்டுப்படவில்லை என்றால் அந்த நபரை மருத்துவமனையில் அனுமதித்து சலைன் ஏற்ற வேண்டும்.
சீதபேதி
அமீபா,சிகெல்லா, ஜியார்டியா போன்ற கிருமிகள் நம்மை பாதிக்கும்போது சீதபேதி வரும். தெருக்கள், குளங்கள் மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் மலம் கழிக்கும்போது மலத்தில் வெளி யாகும் இந்தக் கிருமிகளின் முட்டைகள், மழைக்காலத்தில் சாக்கடை நீர் மற்றும் குடிநீரில் கலந்து நம்மைத் தொற்றிவிடும். அப்போது சீதபேதி ஏற்படும். காய்ச்சல், அடிவயிற்றுவலி, வாந்தி, மலத்தில் சீதமும் ரத்தமும் கலந்து போவது போன்றவை இதன் அறிகுறிகள். மருத்துவரின் ஆலோசனைப்படி தகுந்த சிகிச்சை
யைப் பெறவேண்டும்.
மஞ்சள் காமாலை
மாசடைந்த குடிநீர் மற்றும் உணவு மூலம் ‘ஹெபடைடிஸ்-ஏ’ வைரஸ் கிருமிகள் நம்மைத் தாக்கும்போது மஞ்சள்காமாலை வரும். பசியின்மை, காய்ச்சல், குளிர் நடுக்கம், வயிற்றுவலி, வாந்தி, சிறுநீர் மஞ்சள் நிறத்தில் போவது, கண் மஞ்சள் நிறத்தில் காணப்படுவது போன்றவை இதன் அறிகுறிகள் சுத்தமான குடிநீரைப் பருகுவது, மாவுச்சத்துள்ள உணவுகளை அதிகமாக உண்பது, எண்ணெய் மற்றும் கொழுப்பு உணவுகளைத் தவிர்ப்பது ஆகியவை இந்த நோயைக் குணப்படுத்த உதவும்.
மழைக்கால நோய்களை சமாளிக்க பொதுவான வழிகள்!
- மழைநாட்களில் குடை அல்லது ரெயின்கோட் எடுத்துச் செல்லவும், வீட்டுக்குள் நுழைந்ததும் சுடுநீரில் கை, கால்களைக் கழுவவும்.
- வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். கை, கால்களை சோப்பு போட்டுக் கழுவி வைத்துக்கொள்ள வேண்டும்.
- எப்போதும் சுத்தமாக பத்து நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டிய தண்ணீரையே குடிக்க வேண்டும்.
- அடிக்கடி தலைக்குக் குளிப்பது, குளிர்பானங்களைக் குடிப்பது, ஐஸ்கிரீம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
- ஈக்கள் மொய்த்த உணவுகளை தவிர்க்கவும்.
- சமைத்த உணவுகளையும், குடிநீர் பாத்திரங்களையும் மூடி வைக்கவும்.
- வெளியிடங்களிலும் சாலையோர உணவகங்களிலும் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
- இருமல், தும்மல் வரும்போது கைக்குட்டையால் முகத்தை மறைத்துக்கொள்ளவும்.
- கொசுக்களைக் கட்டுப்படுத்த கொசு வலையைப் பயன்படுத்தலாம்.
- உடல் முழுவதும் மறைக்கிற உடைகளை அணியலாம்;
- கொசு விரட்டிகளையும் கொசுவை விரட்டும் களிம்புகளையும் பயன்படுத்தலாம்.
- வீட்டைச்சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- வீட்டுச் சுவர்களில் டி.டி.டி. மருந்து தெளித்தால் கொசுக்கள் ஒழியும்.
- தெருக்களில் வாரம் ஒருமுறை கொசு மருந்து தெளிப்பதும் முக்கியம்.
- தெருக்களைச் சுத்தப்படுத்தி பிளீச்சிங் பவுடர் தூவினால் ஈக்கள் வராது.
- மழைக்காலத்தில் அவசியம் செருப்பு அணிந்துதான் தெருக்களில் நடக்க வேண்டும்.
- மழைக்காலத்தில் எண்ணெய்ப் பண்டங்களையும் அசைவ உணவுகளையும்
குறைத்துக்கொண்டுஆவியில் அவித்த உணவுகளை அதிகரித்துக்கொண்டால் செரிமானப் பிரச்னைகள் வராது.
சத்தான காய்கறிகள், பழங்கள், சூப்புகளைச் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இதன் பலனால் மழைக்கால நோய்கள் நம்மை அண்டவிடாமல் பார்த்துக்கொள்ளலாம்.

