பொதுவாக, மூக்கின் ‘லிட்டில்ஸ் ஏரியா’வில் இருந்துதான் ரத்தம் கொட்டும்.இது சாதாரண தொல்லையாகவும் இருக்கலாம்.ஆபத்தான அறிகுறியாகவும் இருக்கலாம். பெரும்பாலும், குழந்தைகள் மூக்கில் விரலை நுழைத்துக் குடைவது,குச்சி, பலப்பம்,பென்சில், பேனா போன்றவற்றால் மூக்கைக் குடைவது ஆகிய காரணங்களால் மூக்கிலிருந்து ரத்தம் வடியும்.மூக்கில் அடிபடுவது,பலமாக மூக்கைச் சிந்துவது, ஜலதோஷம்,மூக்குச் சளி,அடினாய்டு அழற்சி, சைனஸ் அழற்சி, நீர்க்கோர்ப்புச் சதை, காளான் சதை ‘ஹீமோபிலியா’ எனும் ரத்த உறைவுக் குறைபாடு,உயர் ரத்த அழுத்தம்,இதயவால்வு நோய்,காசநோய்,கபால நோய்,புற்றுநோய் என்று மூக்கில் ஏற்படும் ரத்தக் கசிவுக்குப் பல காரணங்கள் உண்டு. எனவே,சில்லு மூக்குதானே என்று அலட்சியமாக இருந்துவிடாமல், இதற்குக் காரணம் தெரிந்து சிகிச்சை பெற வேண்டியது முக்கியம்.

மூக்கில் ரத்தம் வடிவதை நிறுத்த!

*பாதிக்கப்பட்ட நபரை லேசாகத் தலையைக் குனிந்து கொண்டு உட்காரச் சொல்லுங்கள். வாயைத் திறந்து மூச்சுவிடச் சொல்லுங்கள்.

*மூக்கின் இரண்டு துவாரங்களையும் உங்கள் பெருவிரல்
மற்றும் ஆள்காட்டி விரலால் அழுத்தமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.இப்படிப் பத்து நிமிடங்களுக்குத் தொடர்ச்சியாகப் பிடித்துக் கொள்ள, ரத்தம் வடிவது நின்றுவிடும்.

*மூக்கைப் பிடித்திருப்பதால்,வாய் வழியாக ரத்தம் வர வாய்ப்புள்ளது.பயப்பட வேண்டாம். வாயிலிருக்கும் ரத்தத்தைத் துப்பச் செய்யுங்கள்.

*இந்த முயற்சியில் ரத்தம் நிற்கவில்லை என்றால்,அடுத்த வழி இது:குளிர்ந்த நீரில் பருத்தித் துணியை முக்கிப் பிழிந்து கொண்டு,மூக்கின்மேல் பத்து நிமிடம் வைக்கலாம்.

*ஐஸ் கட்டியையும் மூக்கின் மீது,மூக்கின் இரு பக்கங்களில் வைக்கலாம்.

*பஞ்சு/ சுத்தமான துணியை குளிர்ந்த நீரில் நனைத்து,திரி போல் செய்து, மூக்கினுள் அழுத்தமாகத் திணித்து, மூக்கை அடைக்கலாம்.

*இத்தனை முயற்சிகளிலும் ரத்தக் கசிவு நிற்கவில்லை என்றால்,அது மூக்கின் மேற்பகுதி அல்லது கபாலத்திலிருந்து வருவதாக அர்த்தம். அதற்கு மருத்துவர் உதவியை நாடுவதே நல்லது.

*ரத்தக்கசிவு உள்ள இடத்தை மின்சூட்டுக்கோலால் தீய்த்து ரத்தக் கசிவு நிறுத்தப்படும்.இதற்குக் ‘காட்டரைசேஷன்’ (Cauterization) என்று பெயர்.