பொதுவாக தினமும் மூன்று வேளை சாப்பிடுவதற்கு நாம் பழகி இருக்கிறோம்.அந்த மூன்று வேலைகளிலும் கூட நாம் உண்ணும் அளவில் எந்த வித்தியாசமும் இருப்பதில்லை. ஆனால், இந்த உணவு முறை ஆரோக்கியமானதல்ல. 

பொதுவாக, காலை உணவை அரசன்போலச் சாப்பிட வேண்டும்; மதிய வேளையில் சாமான்யனைப்போலச் சாப்பிட வேண்டும்;

இரவு நேரத்தில் பிச்சைக்காரனைப்போல் சாப்பிட வேண்டும் என்பார்கள். இதன் அர்த்தம் என்ன தெரியுமா?

காலை வேளையில்தான் நாம் அதிகமாகச் சாப்பிட வேண்டும். ஏனெனில், இரவு எட்டு மணிக்கோ அல்லது ஒன்பது மணிக்கோ நாம் இரவு உணவை முடித்துக்கொள்கிறோம். மறுபடி அடுத்த நாள் காலை எட்டு அல்லது எட்டரை மணிக்குத்தான் சாப்பிடுவோம்.

இடைப்பட்ட காலகட்டத்தில், நாம் ஒன்றுமே சாப்பிடுவதில்லை என்பதால் உடலில் சக்தி பெருமளவு குறைந்திருக்கும். அதோடு, காலையில் சுறுசுறுப்பாக உடல் ஏகப்பட்ட வேலைகளைக் கவனிக்கவேண்டி இருக்கிறது. அந்த வேலைகளைச் செய்ய வேண்டும் என்றால், அதற்கு அதிகப்படியான சக்தி தேவையாக இருக்கிறது. அந்தத் தேவையை நிறைவேற்றும் வகையில், நம் காலை உணவு அமைய வேண்டும்.

காலை உணவைவிட, மதிய உணவைக் குறைவாக உண்ண வேண்டும். இரவில் எந்த வேலையும் செய்யப்போவதில்லை. ஓய்வுதான் எடுக்கப்போகிறோம் என்பதால், மிகக் குறைந்த அளவு உணவே போதுமானது. அதாவது, நாம் தூங்கினாலும் உடலுக்குள் நடைபெறும் சுவாசம், ரத்த ஓட்டம், தட்பவெப்ப நிலையைச் சீராகப் பராமரித்தல் போன்ற அடிப்படை வேலைகளுக்கான சக்தி கிடைக்கும் வகையில் சாப்பிட்டுக்கொள்ளலாம்.

இந்த மூன்று வேளையைத் தவிர, குறிப்பிட்ட கால இடை வெளிகளில், உடலுக்குச் சக்தி அளிக்கக்கூடிய வகையில் எதை யாவது சாப்பிடலாம். அந்த வேளைகளில், நீங்கள் சாப்பிடுவது நீராகாரமாகவோ, உணவாகவோ, பழங்கள், காய்கறிகளாகவோ இருக்கலாம்.

மூன்று வேளை உணவு என்கிற நம் பழக்கத்தை மாற்றி, ஆறு வேளைகளாக, ஏழு வேளைகளாகப் பிரித்துச் சாப்பிடுவது நல்லது. காலை 6 மணியில் ஆரம்பித்து, இரவு 9 மணி வரை 3 மணி நேர இடைவெளியில், சிறிய அளவில், அடிக்கடி உண்ணும் உணவே இரைப்பைக்கும், ஜீரணத்துக்கும் உடலுக்கும் நல்லது.

மூன்று மணி நேர இடைவெளி என்பது ஏதோ ஒரு தோராயமான கணக்குக்காகச் சொல்லப்படுவதல்ல. அதற்கும் ஒரு அறிவியல் பூர்வமான காரணம் இருக்கிறது. நம் இரைப்பையில், தோராயமாக இரண்டு மணி நேரம்தான் உணவு தங்கியிருக்கும். உணவுப் பொருள்கள், குடல் நோக்கித் தள்ளப்பட்டவுடன் இரைப்பை காலியாகிவிடும். அதனால்தான், மூன்று மணி நேர இடை வெளியில் சாப்பிடச் சொல்கிறோம். சிறிதளவே சாப்பிடுவதால், இரைப்பைக்கும் அதிகச் சுமை இருக்காது.

கொஞ்சம் கொஞ்சமாக, மூன்று மணி நேர இடைவெளியில் சாப்பிடுவதால், பல பலன்கள் கிடைக்கின்றன.

* உடலில் அதிக கலோரி சேராது.

* அதிக உணவு இருக்காது.

*இரைப்பை விரியாது.

*பானை வயிறு வராது.

எனவே வயிறு முட்ட சாப்பிடாமல் சிறுகச் சிறுக சாப்பிட்டு நலமாக வாழலாம்.