
-டாக்டர் கு.கணேசன்.
மூக்கில் உள்ள டர்பினேட்டுகளில் ‘ஆல்ஃபாக்டரி எபிதீலியம்’ (Olfactory epithelium) என்று ஒரு சவ்வுப் படலம் உள்ளது. இதுதான் மல்லிகைப் பூ வாசனையில் தொடங்கி சமையலறை கேஸ் லீக்கேஜ் வரை நாம் தெரிந்துகொள்ள உதவுகிறது.மூக்கில் பொடி போடுவது, மூக்கில் கட்டி, புற்றுநோய், பிறவிக்கோளாறு, மூளை தொடர்பான நோய்கள், சில மருந்துகளின் பக்கவிளைவுகள், வாசனை நரம்புக் கோளாறு,மரப்பட்டறை, வேதிப்பொருள் தயாரிப்பு போன்ற வேலைகளைச் செய்வது என்று பல காரணங்களால் வாசனை தெரியாமல் போகலாம்.
வாசனைக் குறைபாடுகளில் பலவிதம் உண்டு. மொத்த வாசனையும் தெரியாமல் போனால் அதற்கு ‘அனாஸ்மியா’ (Anosmia) என்று பெயர். லேசாகத்தான் உணர முடியும் என்றால் அதற்கு ‘ஹைப்பாஸ்மியா’ (Hyposmia) என்றும், எப்போதும் ஒரு கெட்ட வாசனை அடித்துக் கொண்டிருப்பதாக உணருவதை ‘காகோஸ்மியா’ (Cacosmia) என்றும் அழைக்கிறோம். வாசனை பிரச்னை எந்த அளவுக்கு உள்ளது என்பதை ‘ஆல்ஃபாக்டோ மீட்டர்’ (Olfactometer) மற்றும் ‘எலெக்ட்ரோ ஆல்ஃபாக்டோகிராம்’ (Electro Olfactogram) எனும் பரிசோதனைகள் மூலம் தெரிந்துகொண்டு, அடிப்படைக் காரணத்தைச் சரி செய்வதன் மூலம் வாசனைத் திறனைத் திரும்பப் பெற முடியும். நரம்புப் பிரச்னை என்றால்தான் இதைக் குணப்படுத்துவது சிரமம்.
மூக்கின் நலம் காக்க!
1. தினமும் குளிக்கும்போது மூக்கையும் சுத்தப்படுத்த வேண்டும்.
2. குளிர்ந்த நீரும் குளிர் பானங்களும் மூக்கின் பாதுகாப்பைக் கெடுக்கும் என்பதால், இவற்றைக் குறைத்துக்கொள்வது நல்லது.
3. மூக்கைப் பலமாகச் சிந்தக்கூடாது.
4. மூக்கை குடைகின்ற பழக்கத்திற்குத் தடை போட வேண்டும்.
5. தும்மும்போதும், மூக்கை சிந்தும்போதும் கைக்குட்டையால் மூக்கை மறைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் மூக்குச் சளியில் உள்ள கிருமிகள் மற்றவர்களுக்குப் பரவாது.
6. மூக்குப் பொடி போட்டால் புற்றுநோய் ஆபத்து உள்ளதால் இதைத் தவிர்க்க வேண்டும்.
7. சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்துக் கொண்டால், ஒவ்வாமை தும்மல் வராது.
8. தினமும் பிராணாயாமம், யோகாசனம் போன்ற பயிற்சிகளைச் செய்வது மூக்கின் நலம் காக்க உதவும்.
-டாக்டர் கு.கணேசன்.

