
– எம்.ஜெயஸ்ரீ
வாழை, அறிவியல் வகைப்பாட்டின் பூண்டுத் தாவரங்களைக் கொண்ட பேரினம் ஆகும். வாழையின் அனைத்துப் பகுதிகளும் பயன்படும். எனவே, இது பூரண மருத்துவக்குணம் கொண்ட தாவரமாக கருதப்படுகிறது. தமிழர் கலாச்சாரத்தில் வாழை மரத்தின் பயன்பாடு அன்றாடம் இருந்தது. தன்னை முழுமையாக மருத்துவப் பயன்களுக்காகவே அர்ப்பணித்துக் கொண்டமிக முக்கிய தாவரம் ஆகும்.
வாழைத்தண்டு அதிக நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் கொண்டது. இதில் அதிகமான பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்துக்கள் உள்ளன.
மருத்துவகுணங்கள்
கசப்பும் துவர்ப்பும் சேர்ந்த சுவை கொண்ட வாழைத்தண்டின் அனேக மருத்துவக் குறிப்புகள் பற்றி நமது முன்னோர் ஆயுர்வேத புத்தகங்களிலும் ஓலைச் சுவடிகளிலும் கூறியிருக்கிறார்கள். இது பித்தத்தைத் தணித்து தேவையற்ற கபத்தை நீக்கும் வல்லமை பெற்றது.
- கொழுப்பைக் குறைக்கும்.
- வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தும்.
- சிறு நீர் எரிச்சலைப் போக்கும்.
- சிறு நீர் பாதையில் கல் அடைப்பு இருப்பவர்களுக்கு மிகச்சிறந்தது.
- நமது உடலில் நோய்கள் தோன்றக்கூடிய காரணங்களில் ஒன்று உடல்பருமன். இது அளவுக்கு அதிகமான உணவை உண்பதாலும், உடலுக்குத் தேவையான உழைப்பு இல்லாததாலும் ஏற்படுகிறது.
- வாழைத் தண்டு மாதிரி ஸ்லிம்மாக இருக்கா பாரு என்று சில பெண்களைப் பார்த்து வியந்து கூறுவதுண்டு. வாழைத் தண்டிலுள்ள நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் அதிகப் படியான சதையைக் குறைத்து உடலை சிக்கெனமாற்றும்.
- இதிலுள்ள வைட்டமின் பி6, ஹீமோ குளோபின் மற்றும் இன்சுலின் உற்பத்திக்கு பெரிதும் உதவுகிறது.
- இதிலுள்ள பொட்டாசியம் இதய தசைகளை வலுவடையச் செய்கிறது.
- வைட்ட மின் ஏமற்றும் சி நிறைந்த வாழைத்தண்டு, தோல் நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
- இருமல், காதுநோய், கர்ப்பப்பைநோய்கள், மஞ்சள்காமாலை, விஷக் கடிகளால் ஏற்படும் வலிமற்றும் இதர நோய்களுக்கு வாழைத் தண்டு மிகச் சிறந்த மருந்தாகத் திகழ்கிறது.
உபயோகிக்கும்முறை
- வாழைத் தண்டை இடித்து, சாறு பிழிந்து, அத்துடன் முள்ளங்கி சாறு அரை பாகம் சேர்த்து காலை, மாலை இரு வேளையும் 100 மி.லி. குடித்து வர கல்லடைப்பு நீங்கும். நீர்எரிச்சல், நீரில் ரத்தம் கலந்து போவதைக் குணப்படுத்தும்.
- வயிற்றில் நீர்க்கட்டி இருந்தால் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு சாறு குடித்து வந்தால் நாளடைவில் குணமாகும்.
- கோடைக் காலத்தில் வாழைத்தண்டு அதிகம் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் உஷ்ணம் குறையும்.
- உடலில் உள்ளநச்சுப் பொருளை வெளியேற்றி ஆரோக்கியம் தரும்.
- வாழைத் தண்டுசாறு ஒரு நாள் மற்றும் பார்லி கஞ்சி ஒரு நாள் என்று சாப்பிட்டு வர சிறுநீர்க் கற்கள் பொடிப் பொடியாகி சிறு நீருடன் வெளியேறும்.
- வாழைத் தண்டுசூப் (வாழைத் தண்டு சிறு துண்டுகள், இஞ்சி, எலுமிச்சைச்சாறு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம்) 200 மி.லி. வாரத்தில் மூன்று நாள் சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்து குறையும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த மருந்தாகவும் உணவாகவும் உள்ளது.
- வாழைத்தண்டுடன் வாழைப்பூ சேர்த்து உட்கொண்டால் மாதவிடாய் கோளாறுகளால் உண்டாகும் அதிகப்படியான ரத்தப் போக்கு, வயிற்று வலி நீங்கும்.
- வாழை சாற்றுடன் திரிபலாசூரணம் சேர்த்து அருந்த மலச் சிக்கல் நீங்கி அதனால் ஏற்பட்ட மூல நோய் மற்றும் ஆசனக் கடுப்பு நீங்கும்.
வாழைத்தண்டுபொரியல்
தேவையானபொருட்கள் :
வாழைத்தண்டு–600 கிராம்,
பச்சை மிளகாய் – 3,
கறிவேப்பிலை சிறிதளவு,
தேங்காய்த் துருவல் – 20 கிராம்,
தேங்காய் எண்ணெய் – 10 மி.லி.,
மஞ்சள் தூள் – 5 கிராம்,
தண்ணீர் 50 மி.லி.,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
வாழைத்தண்டை சுத்தம் செய்து, தோல் சீவி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காய் எண்ணெயை சூடுபடுத்தி அதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்து அதில் நறுக்கி வைத்துள்ள வாழைத்தண்டை சேர்க்கவும். இதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். அத்துடன் சிறிது மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து காய் வெந்த பிறகு அதில் தேங்காய் துருவலை சேர்த்து இறக்கவும். பிறகு அதன் மீது கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.

