
-டாக்டர்.சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர்
நமது சமூகத்தில் மாற்றங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.
பெரும்பாலான குடும்பங்களில் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. அதனால் குழந்தைகளுடன் பெற்றோர் செலவிடும் நேரம் குறைந்துவிட்டது. கண்டிப்பாகக் குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்கவேண்டும். அவர்களுடன் ஆக்கபூர்வமாகப் பேசவேண்டும். பிரச்னைகள், சிக்கல்கள், மகிழ்ச்சிகளைப் பகிர்ந்துகொள்ளும்போது அதைப் பொறுமையுடன் கேட்கவேண்டும்.
“வேலைக்குச் செல்வதால் குழந்தைகளுக்கான நேரம் ஒதுக்க முடியவில்லை” என்பது பலரின் குற்றச்சாட்டாக இருக்கிறது. ஆனால், பெற்றோர் குழந்தைகளுக்காக எத்தனை மணி நேரம் செலவழிக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. செலவழிக்கும் நேரத்தை எவ்வளவு ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதே முக்கியம். குவான்டிட்டி ஆஃப் டைம் முக்கியமில்லை… குவாலிட்டி ஆஃப் டைமே முக்கியம். அதற்காகப் பணியிடங்களில் நடக்கும் பிரச்னைகளையும் அவற்றால் ஏற்படும் மன உளைச்சலையும் வீட்டுக்குக் கொண்டுவரக் கூடாது.
பூர்ணா ஒரு தகவல் தொழில்நுட்ப அலுவலகத்தில் தணிக்கையாளராக வேலை பார்க்கிறார். தனது கணவரை வற்புறுத்தி மனநல மருத்துவரைப் பார்த்தே ஆக வேண்டும் என வந்திருந்தார். அவரது அலுலகத்தின் ஆண்டு இறுதி தணிக்கையில் சில இலட்சங்கள் கணக்கில் வராமல் இருந்திருக்கிறது. அது தொடர்பாக கடந்த இரண்டு மாதங்களாக பூர்ணாமீது விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. விசாரணைக் கேள்விகள், அலுவலக நண்பர்களின் சந்தேகப் பார்வை, வேலை பறிபோகுமோ என்ற கவலை, அபராதம் போட்டு விடுவார்களோ என்ற பயம் என அத்தனையும் சேர்த்துக் கடும் மனவுளைச்சலில் இரண்டு மாதமாக இருக்கிறார்.
ஆனால் பூர்ணா வந்தது அதற்காக அல்ல. வீட்டில் இருக்கும்போது அவருக்கு நிறைய கோபம் வருகிறதென்றும் அதில் குழந்தைகளை மோசமாகத் திட்டிவிடுவதாகவும், சில நேரங்களில் அவர்களைப் போட்டு அடித்து விடுவதாகவும் வருந்தினார். இதனால் வீட்டில் அம்மாவைப் பார்த்து குழந்தைகள் பயப்படுவதாகவும், இவளின் அருகிலேயே கூட வருவதில்லை. எப்போதும் அம்மாவுடனே தூங்கும் குழந்தைகள் இப்போதெல்லாம் தனியாகத் தூங்குவதாகவும் அதனால் நிறைய குற்றவுணர்ச்சியில் தவிப்பதாகவும் சொன்னார்.
பூர்ணாவைப் போல பல பெண்கள் இருக்கிறார்கன். ஆண்களும் இருக்கிறார்கள். தங்களது தனிப்பட்ட அலுவலக நெருக்கடிகளை வீட்டிற்கு எடுத்து வந்து வீட்டின் அமைதியையும் குலைப்பது என்பதை அவர்கள் தொடர்ச்சியாக செய்து வருகிறார்கள். அலுவலகம் தொழில் நிமித்தமாக நமக்கு நிறைய நெருக்கடிகள் கொடுக்கக்கூடியது. ஆனால் வீடு என்பது வெளிப்புற நெருக்கடிகளில் இருந்து நம்மைக் காப்பாற்றக் கூடியது. அதனால் வீட்டின் அமைதியையும், இயல்பு நிலையையும் நிலை நிறுத்துவது அவசியம். அப்போதுதான் வெளியே எவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் நம்மை அதிலிருந்து ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் நாம் என்ன செய்கிறோம்? அலுவலகத்தில் இருக்கக்கூடிய பதட்டங்களையும், பிரச்சினைகளையும் வீட்டிற்கு எடுத்து வந்து வீட்டின் நிம்மதியையும் கெடுக்கிறோம். அதனால் மனவுளைச்சல் நமக்கு அதிகமாகத்தான் ஆகுமே தவிர குறையாது.
பெரும்பாலான நேரங்களில் பணியிடத்தில் ஏற்படும் அழுத்தத்தை வீட்டுக்குள் எதிரொலிக்கிறோம். குறிப்பாக, பெண்கள். அவர்கள் தங்களது கோபத்தைக் குழந்தைகளிடமே வெளிப்படுத்துவார்கள். காரணம், கோபத்தை பணியிடத்திலோ, கணவனிடமோ அவர்களால் காட்ட முடியாது. குழந்தைகள் அவர்களைப் பொறுத்தவரையில் எளிய இலக்காக இருக்கிறது. அதன் வழியாக அவர்கள் தங்களது மனவுளைச்சலுக்கான வடிகாலைத் தேடிக்கொள்கிறார்கள். ஆனால் குழந்தைகளின் மனநிலையைப் பற்றி நாம் யோசிப்பதில்லை. குழந்தைகளின் ஆரம்ப கால மூளை வளர்ச்சி என்பது முக்கியமானது.
இந்த உலகத்தைப் பற்றி, தங்களைப் பற்றி, தங்களைச் சுற்றியுள்ளவர்களைப் பற்றி குழந்தை தங்களுக்குள் சில அபிமானங்களை உருவாக்கிக்கொள்ளும் வயதில் அவர்களின் மனநிலை சீராக இருக்க வேண்டியது அவசியம். நம்மிடம் ஏற்படக்கூடிய திடீர் கோபம் குழந்தைகளின் மனதில் அதிர்ச்சியை ஏற்படுத்தும். அதற்கு முன்பு நாம் மிக இயல்பாக குழந்தைகளிடம் சொன்ன ஒரு விஷயத்தை இன்னொரு தருணத்தில் கோபமாக சொல்லும்போது நம்மைப் பற்றிக் குழந்தைகள் கொண்டிருக்கும் மதிப்பீடுகள் உடையத் தொடங்கும். வெளிப்புற
உலகத்தின் அனுபவங்களைப் பரிச்சயித்துக் கொண்டிருக்கும் ஒரு குழந்தையின் மனதில் உருவாகும் இந்த அவ நம்பிக்கை அதற்குப் பிறகான அவர்களின் வளர்ச்சியையும், சுய சிந்தனையையும், தன்னிச்சை உணர்வையும் பாதித்து விடக்கூடியது.
அதற்குப் பிறகு அவர்களின் முடிவுகள் பிழையாக மாறிவிடும் வாய்ப்பிருக்கிறது. நம்மைப் பற்றிய இப்படிப் பிழையான மதிப்பீட்டை ஒரு குழந்தை எடுப்பதில் ஆபத்து இருக்கிறது.இந்த மதிப்பீட்டின் வழியாகவே அந்த குழந்தை நம்மை புரிந்துகொள்ளும். மேலும் நம்மிடம் இருந்து விலகத் தொடங்கும். நம்மிடம் ஏற்படும் அச்சவுணர்வு அவர்களின் ஆழ்மனதில் பதிந்துவிடும். குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்குமான உறவு பயத்தின் அடிப்படையில் இருக்கக்கூடாது. அது சுதந்திர உணர்வையும், பாதுகாப்பு உணர்வையும் கொண்டிருக்க வேண்டும்.அந்த உணர்வில் ஏற்படக்கூடிய உணர்வைக் கொண்டுதான் நாம் குழந்தைகளின் வளர்ச்சியை ஆரோக்கியமானதாக எடுத்து செல்ல முடியும்.
அதனால் பணியிடத்தில் நடக்கும் பிரச்னைகளை அங்கேயே விட்டுவிட்டு வர வேண்டும். வீட்டையும் பணியிடத்தையும் தனித்தனியாகப் பிரித்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். வீட்டில் இருக்கும் நேரத்தில் குழந்தைகளுக்குப் பிடித்த விஷயங்கள், அவர்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து செயல்பட வேண்டும்.
பெரும்பாலானோர் அலுவலகத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பியதும் ஓய்வெடுத்துக்கொள்ளவே ஆர்வம் காட்டுவார்கள். இல்லையென்றால் தொலைக்காட்சியை ஆன் செய்துவிட்டோ, கையில் செல்போனை எடுத்துக்கொண்டோ அமர்ந்திருப்பார்கள். இப்படியெல்லாம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
குழந்தைகளிடம் அன்று பள்ளியில் நடந்த விஷயங்களைப் பற்றியும், அவர்களுக்கு ஏதேனும் பிரச்னைகள் இருக்கின்றனவா என்பதையும் கேட்டறிய வேண்டும். அவர்களோடு விளையாட வேண்டும். இல்லையென்றால் பக்கத்திலுள்ள விளையாட்டு மைதானத்துக்கு அவர்களை அழைத்துச் சென்று, விளையாட விட வேண்டும்.
அதேபோல பணியிடத்தில் ஏற்படும் சிக்கல்களை வளர்ந்த குழந்தைகளிடம், சொல்லலாம். பெற்றோரால் ஏன் நம்முடன் அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை, பணியிடத்தில் என்ன மாதிரியான பிரச்னைகள் நம் பெற்றோருக்கு இருக்கின்றன என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள். அதற்கு அவர்களைத் தயார் செய்ய வேண்டும். அப்படி அவர்கள் தயாராகிவிட்டால், பெற்றோருடன் கிடைக்கும் நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றிக்கொள்வார்கள். இதன்மூலம் பணிச்சூழலால் நல்ல தாய், தந்தையரின் பாசத்தை இழப்பதைத் தவிர்க்க முடியும்
குழந்தைகளிடம் முடிந்தஅளவு பெற்றோர் வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ளவேண்டும். எத்தகைய பிரச்னைகளையும் தயக்கமின்றி வீட்டில் பேசுவதற்கான சுதந்திரத்தைப் பெற்றோர் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.
குழந்தைகள் செய்யும் தவறுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். அது எந்தவகையில் தவறு, அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்று அவர்களிடம் வெளிப்படையாகப் பேசவேண்டும். குழந்தைகள் தவறு செய்யும்போது அதை உணரவைக்கும் பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது.
முடிந்தவரை குழந்தைகளைத் தன்னிச்சையாக முடிவெடுக்க ஊக்குவிக்கலாம். அதற்குப் பெற்றோர் வழிகாட்டலாம்; ஆனால் வற்புறுத்தக் கூடாது.
குழந்தைகளைப் பொறுத்தவரை பெற்றோர்தான் அவர்களது ரோல்மாடல். அவர்கள் நீங்கள் சொல்லித் தருவதைவிட, உங்களைக் கவனிப்பதன்மூலம் அனைத்தையும் கற்றுக்கொள்கிறார்கள். அதனால் அவர்களுக்கு முன்பு நீங்கள் பொறுப்பாகவும், கண்ணியமாகவும், நேர்மையாகவும் நடக்கவேண்டும்.
குழந்தைகளைப் போட்டி மனப்பான்மையுடன் வளர்க்கிறோம். நம் குழந்தை எல்லாவிதத்திலும் சிறந்ததாக இருக்கவேண்டும் என்பதற்காகக் குழந்தைகளின் உலகத்தை ஒரு போட்டிக்களமாக மாற்றி வைத்திருக்கிறோம். இதன் விளைவாக, இப்போதுள்ள குழந்தைகள் எல்லாம் மிக எளிதாக உணர்ச்சிவசப்படுபவர்களாகவும். தோல்வியைத் தாங்க முடியாதவர்களாகவும் இருக்கிறார்கள். இதை உணர்ந்து குழத்தைகள் மற்றவர்களுடன் எத்தகைய போட்டியும், வெறுப்பும் இல்லாமல் உள்ளார்ந்த பிணைப்புடன் பழகுவதை ஊக்குவிக்க வேண்டும்.
18 வயதுவரை எந்தவித டிஜிட்டல் சாதனங்களையும் அவர்களிடம் கொடுப்பதைத் தவிர்க்கலாம். அதையும் மீறி அவர்கள் பயன்படுத்தினால் அதை வெளிப்படைத்தன்மையுடனும் நம்முடன் பகிர்ந்துகொள்ளும் விதமாகவும் பயன்படுத்த அனுமதிக்கலாம். நமக்குத் தெரியாமல் பயன்படுத்தும்போது ஏற்படும் சிக்கல்கள் மற்றும் ஆபத்துகளை அவர்கள் உணர்ந்துகொள்ளச் செய்வதுடன் அவற்றின் பயன்பாட்டை நெறிமுறைப்படுத்தவேண்டும்.
குழந்தைகளின் பிரச்னைகளைக் காது கொடுத்துக் கேட்க எப்போதும் தயாராக இருக்கவேண்டும். அவர்களது நடவடிக்கைகளை நாம் தொடர்ச்சியாகக் கண்காணிக்கவேண்டும். அவர்களுடன் பழகும் முறை,பேச்சு,கோபம், பயம், மகிழ்ச்சி, பசி,தூக்கம், ஆர்வம் போன்ற உணர்வுகளில் மாற்றங்கள் ஏற்படும்போது அதைப்பற்றி அவர்களுடன் விவாதிக்கவேண்டும். அவர்களின் தயக்கத்தைக் களைந்து அவர்களது பிரச்னைகளைப் புரிந்துகொள்ளவேண்டும்.
வீடு என்பது அழகாக அமைதியாக அன்பு நிறைந்த இடமாக, எல்லோரும் ஒன்றாக இணைந்து வாழும் குடும்பமாக இருக்க வேண்டும்.

