
டாக்டர் கண்மணி கணேஷ்,MD, DGO.
பெண்கள் உடற்பயிற்சியில் ஆர்வம் காட்டுவது அதிகரித்து வருகிறது.இருந்தாலும் போதிய அளவில் ஆர்வம் காட்டுவது இல்லை. தமிழ்நாட்டில் பெண்கள் உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் காட்டாததற்கு அல்லது அதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதற்கு குடும்பப் பொறுப்புகள், சமூகக் கட்டுப்பாடு மற்றும் போதிய நேரமின்மை ஆகியவையே முதன்மைக் காரணங்களாக இருக்கின்றன.
நம் நாட்டில் ஆண்களை விட பெண்கள் மத்தியில் உடற்பயிற்சியின்மை வெகுவாக அதிகரித்து இருப்பதாக ‘லான்செட்’ என்ற சர்வதேச மருத்துவ இதழில் ஒரு ஆய்வுக் கட்டுரை வெளியாகி உள்ளது.
தற்போது பெண்களுக்கு 30 வயதிலேயே பலவித ஹார்மோன் கோளாறுகள், மாதவிடாய் பிரச்சனைகள், முழங்கால் மூட்டு வலி என்று பல்வேறு தொந்தரவுகள் அவர்களை பாதிக்கின்றன.
பெரும்பாலான பெண்கள் நடைப்பயிற்சி போன்ற சாதாரண உடல்ரீதியான செயல்பாட்டில்கூட ஈடுபடுவதை தவிர்க்கின்றனர். எடையைக் குறைக்கவும், உடலை கட்டுக்கோப்பாக மாற்றுவதற்கு மட்டுமன்றி, மனநிலையை மேம்படுத்தவும், உடல்வலுவை அதிகரிக்கவும் உடற்பயிற்சிகள் தேவை.
உடற்பயிற்சிகள் செய்யும்போது நல்ல மனநிலையை தரும் ஹார்மோன்கள் சுரக்கும். இதனாலேயே உடற்பயிற்சி என்பது மிகச் சிறந்த மன அழுத்த நிவாரணியாக இருக்கிறது.
நேரமில்லை என்பது பொறுப்பற்ற பதில்!
தங்களுக்கு வயதாகிவிட்டது, இனி விளையாடுவதோ, உடற்பயிற்சிகள் செய்வதோ வேண்டாம் என பலரும் தவிர்க்கிறார்கள். ஏற்கெனவே இந்தியாவில்தான் நீரிழிவு நோய் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் எச்சரித்து வரு கின்றனர்.பிசிஓடி, வாழ்க்கைமுறை சார்ந்த நோய்கள் போன்றவை அதிகமாகி வருகின்றன. இதற்கெல்லாம். தீர்வு உடற்பயிற்சிகள்தான்.
இன்று வேலை நேரம் அதிகமாகி விட்டது. டிஜிட்டல் சாதனங்களின் ஸ்க்ரீன் டைம் அதிகமாகி விட்டது, உணவின் தரம் மிகவும் மோசமாகி இருக்கிறது, வெளியில் சாப்பிடுகிற பழக்கம் அதிகமாகியிருக்கிறது,தூக்கம் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் இன்று முன்பு போல நாம் ஆரோக்கியமாக இல்லை.எனவே, நோய்களும் எளிதாகத் தாக்குகின்றன. ‘உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் இல்லை’ என்பது ஒருவரது பொறுப்பற்ற பதிலாகவே உள்ளது.உங்கள் உடலை நீங்களே பார்த்துக் கொள்ள முடியவில்லை என்றால், உங்களின் வாழ்க்கைத்தரம் நாளடைவில் குறைந்துகொண்டே வரும்.முதுமையில் மற்றவர்களை எதிர்பார்த்து வாழவேண்டிய அவலம் வரலாம்.
இப்போதைய தலைமுறையில் சீக்கிரமாகவே ஆர்த்ரைட்டிஸ் போன்ற எலும்பு குறைபாடுகள் வருகின்றன. இதற்குக் காரணம் வாழ்க்கைமுறை மாற்றங்கள்தான். வாழ்க்கைமுறை மாற்றங்கள் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்காத வகையில் இருக்க வேண்டுமென்றால் உடற்பயிற்சி உங்களுக்குக் கட்டாயம். திருமணத்துக்கு முன்பு, திருமணத்துக்குப் பிறகு, கர்ப்பகாலத்தில், குழந்தைப்பிறப்புக்குப் பிறகு என பெண்களின் உடல் பல மாற்றங்களைச் சந்திக்கிறது. எனவே, பெண்களுக்கு உடற்பயிற்சி கட்டாயமாகி யிருக்கிறது.
வீட்டிலேயே செய்யக்கூடிய பயிற்சிகளும் இருக் கின்றன.அதையும் நிபுணர்களின் உதவியுடன் கற்றுக் கொண்டு நேரம் கிடைக்கும்போது செய்யலாம்.நடைப் பயிற்சி எப்போதும் எளிதானது. அதற்கெனவும் தினமும் நேரம் ஒதுக்கிவிடுங்கள். வெளியில் செல்லும்போது தயக்கமோ, பாதுகாப்பு குறித்த பயமோ இருந்தால் குடும்ப உறுப்பினர்களுடன் வாக்கிங் போன்ற பயிற்சிகளைச் செய்யலாம்.

