பக்கவாதம் (Stroke) என்பது மூளைக்கான இரத்த ஓட்டம் தடைபடுவதால் அல்லது மூளையில் இரத்தக் கசிவு ஏற்படுவதால் மூளைச் செல்கள் பாதிப்படையும் ஒரு தீவிரமான மருத்துவ அவசர நிலையாகும். இதற்கு சரியான சிகிச்சை எடுக்காவிட்டால் வாழ்நாள் முழுக்க அவதிப்பட வேண்டிய நிலை ஏற்படலாம்.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான மறுவாழ்வு சிகிச்சையில், நவீன ரோபோடிக் மற்றும் நரம்புத் தூண்டுதல் தொழில்நுட்பங்களை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் நோயாளிகளுக்கு பல்வேறு வகையான தொடர் பயிற்சிகள் மற்றும் எதிர்ப்பு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை ஒவ்வொரு நபரின் தேவைகளுக்கு ஏற்ப திட்டமிட்ட முறையில் வழங்கி, நோயாளிகள் மீண்டும் சுயமாக தங்கள் அன்றாட செயல்பாடுகளை தாங்களே செய்யும் வாய்ப்புகளை அதிகரிக்க முடியும்.

அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரோபோடிக் தொழிநுட்பத்தில் முக்கியமான அமைப்புகளில் ஒன்று ‘மல்டிலிம்ப் ஐசோகினெடிக்’ ரோபோடிக் மறுவாழ்வு அமைப்பு ஆகும். இந்த அமைப்பு, கைகள் மற்றும் கால்கள் இரண்டிற்கும், முக்கிய மூட்டு பயிற்சிகள் உட்பட 20-க்கும் மேற்பட்ட பயிற்சி முறைகளை நோயாளிகள் மேற்கொள்ள உதவுகிறது. ஒவ்வொரு நோயாளியின் மறுவாழ்வுத் தேவைக்கு ஏற்ப மறுவாழ்வு குழுவின் உதவியோடு பயிற்சி முறை மற்றும் பயிற்சி அளவை மாற்றியமைக்க முடியும்.

இந்த ரோபோடிக் அமைப்பின் மூலம் அன்றாட வாழ்க்கைச் செயல்பாடுகளுக்கான பிரத்யேக பயிற்சிகளையும் மறுவாழ்வின் பல்வேறு கட்டங்களில் இருக்கும் நோயாளிகளுக்கு ஏற்ற வகையில் வழங்க முடியும்.

கை மற்றும் விரல் இயக்கங்களில் சிரமத்தை எதிர்கொள்பவர்களுக்காக ரோபோடிக் கையுறைகளும் இந்த அமைப்பில் உள்ளன.அவற்றின் துணையுடன் கைகளைத் திறத்தல்,மூடுதல் மற்றும் விரல் இயக்கப் பயிற்சிகளை நோயாளிகள்
மேற்கொள்ளலாம். இந்த வசதி தொடர்ச்சியான கை இயக்கப் பயிற்சிகள் செய்வதை எளிதாக்குகிறது.

அனைத்து ரோபோடிக் மறுவாழ்வுத் தொழில்நுட்பங்களும் பிசியோதெரபி மற்றும் பிற மறுவாழ்வு சிகிச்சை நிபுணர்களின் பணிகளுக்கு உதவியாக அமைகிறது.

பக்கவாத சிகிச்சையில் மறுவாழ்வின் முக்கியத்துவம் குறித்து, ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை பக்கவாத மருத்துவப் பிரிவின் மூத்த ஆலோசகர் டாக்டர் சிவராஜன் தண்டேஸ்வரன் கூறுகையில், “பக்கவாத சிகிச்சை என்பது ஆரம்பக்கட்ட மருத்துவ சேவையுடன் முடிவடைந்து விடுவதில்லை. அன்றாட வாழ்வை மேற்கொள்வதில் அவர்களுக்கு ஏற்படும் உடல் இயக்க சவால்களுக்கு தீர்வு அளிக்கும் மறுவாழ்வு பயிற்சிகளும் முக்கியம்.இதற்கு தொடர்ச்சியான ஒருங்கிணைக்கப்பட்ட பிரத்யேக உடல் இயக்க பயிற்சிகள் தேவைப்படுகிறது. இதற்கு ரோபோடிக் மறுவாழ்வு அமைப்புகள் பெரிதும் உதவுகின்றன.

இது நோயாளிகளுக்குத் தனிப்பட்ட மறுவாழ்வுத் திட்டங்களை வழங்க உதவுகிறது. இதன் மூலம் நோயாளிகள் உடல் இயக்கங்களை மீண்டும் பெற்று சுயசார்போடு வாழ முடியும்” என்றார்.

பக்கவாதத்தின் அறிகுறிகள்

நடக்கும்போது எதிர்பாராத வகையில் சிரமம் இருப்பது, பேலன்ஸ் செய்ய முடியாமல் தடுமாறுவது, பார்வையில் திடீரென்று பிரச்சனைகள்,கை, கால் மரத்துப் போவது,பேச்சில் தடுமாற்றம் இருந்தால் பக்கவாதமாக இருக்கலாம்.

இது போன்ற அறிகுறிகள் இருந்தால் தாமதம் இல்லாமல் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். மூன்று முதல் நான்கு மணி நேரத்திற்குள் சிகிச்சையை தொடங்கி விட்டால் ஓரளவுக்கு விரைவாக நலம் பெற முடியும். தாமதித்தால் முழுமையாக நலம் பெற முடியாமல் போகலாம்.

ஒருவர் தனது வேலைகளை தானே செய்து கொண்டால் தான் நிம்மதியாக வாழ முடியும். அடுத்தவர்கள் உதவி செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி வரும். பொருளாதார சிக்கல்கள் ஏற்படலாம்.மன உளைச்சல் ஏற்படும்.

சக்கரை நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும்.ரத்த அழுத்தத்தை அவ்வப்போது பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மருத்துவர்கள் பரிந்துரைத்த மாத்திரைகளை தவறாமல் எடுத்து வந்தால் இது போன்ற நோய் பாதிப்புகள் ஏற்படாமல் ஆரோக்கியமாக வாழலாம்.

-பவித்ரன். ஹெல்த் அண்ட் பியூட்டி.