
குழந்தைகள், நோயாளிகள், முதியவர்கள் என அனைவருக்கும் பக்க விளைவு ஏற்படுத்தாத உணவு என மருத்துவர்கள் பரிந்துரைப்பது இட்லியைத்தான்.
உலக அளவில் இட்லி ஒரு சிறந்த,சுவை மிகுந்த காலை உணவு. ஏனெனில்,ஆவியில் வேகவைத்தல் முறையில் சமைக்கப்படுவதால், இதில் கொழுப்புச்சத்து இருக்காது என்பதே இதற்குக் காரணம்.’ஆவியில் வேகவைத்து எடுக்கப்படும் சுவையான கேக்’ என்று இட்லியைச் சொல்லலாம்.இட்லியில் மட்டுமே ஊறவைத்த அரிசியின் மூலம் கார்போஹைட்ரேட்டும், பருப்பின் மூலம் புரதச்சத்தும் ஒன்றிணைந்து கிடைக்கும்.தக்காளிச் சட்னி,தேங்காய் சட்னி, புளித்துவையல் மற்றும் சாம்பாருடன் சாப்பிட ஏற்ற அருமையான உணவு இது.
சரி… ஒரு இட்லியில் சராசரியாக என்னென்ன பொருள்கள் இருக்கின்றன… பார்க்கலாமா? 65 கலோரிகள், 2 கிராம் புரோட்டீன், 2 கிராம் நார்ச்சத்து, 8 கிராம் கார்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து இல்லை.
இட்லி சாப்பிடுவது ஆரோக்கியம்தான். ஆனால்,அளவாகச் சாப்பிட வேண்டும். எண்ணெய், நெய், வெண்ணெய் தடவிய இட்லி,ஃப்ரைடு இட்லி இவையெல்லாம் அதிக கலோரி கொண்டவை.இவற்றை அதிகமாகச் சாப்பிடும்போது கலோரி அதிகமாக உடலில் சேரும்.
இட்லிக்குத் தொட்டுக்கொள்ள பரிமாறப்படும் சட்னியிலும் கவனம் தேவை.குறிப்பாக, தேங்காய் சட்னி.ஒரு சிறிய துண்டு தேங்காயில் (சராசரியாக 45 கிராம் எடையுள்ள) 159 கலோரிகளும், 15 கிராம் கொழுப்பும் உள்ளன.தேங்காயில் ஊட்டச்சத்துகள் இருந்தாலும், சாப்பிடும்போது அதிகமான அளவில் கலோரிகள் உடலில் சேராமல் பார்த்துக்கொள்வது நல்லது.இட்லி மிளகாய்ப் பொடியில் எண்ணெய், நெய் அதிகமாக ஊற்றினால்,இதுவும் அதிக கலோரி உடலில் சேரக் காரணமாகிவிடும்.
இட்லிக்கு சாம்பார் தொட்டுக்கொள்வது மிகவும் நல்லது.சாம்பாரில் உள்ள பருப்பு உடலுக்குத் தேவையான புரதச்சத்தை அளிக்கிறது.அதனுடன் புதினா, தக்காளி அல்லது வெங்காயச் சட்னி சேர்த்து சாப்பிட்டால் புரதம், கார்போஹைட்ரேட், வைட்டமின் சத்துக்களும் கிடைக்கும்.

