
கலைமாமணி டாக்டர் எஸ்.அமுதகுமார்,
MBBS, MCIP,PG.Dip. Diabetology,F.C.G.P.
எந்தப் பிரச்னையும் இல்லாமல் நன்றாகத்தான் படிகளில் ஏறிக்கொண்டிருந்தேன். ஓடிக்கொண்டிருந்தேன்.நடந்து கொண்டிருந்தேன். ஆனால், இப்பொழுதெல்லாம் கொஞ்சம் தடுமாற்றம் ஏற்படுகிறது. காலைத்தூக்கி வேகமாக வைக்க முடியவில்லை.கால் மூட்டுகளில் லேசாக வலி வர ஆரம்பித்துவிட்டது.
எதிர்காலத்தில் நடக்கமுடியாமல் போய்விடுமோ என்கிற பயமும் வந்துவிட்டது… என்றார் நாற்பது வயதைத் தாண்டிய நண்பர்!
எனக்கு 80 வயது ஆகிறது.இன்று வரை கால் மூட்டு, கைமூட்டு எதிலும் எந்தப் பிரச்னையும் இல்லை.தினமும் நன்றாக வாக்கிங் போகிறேன். சம்மணம் போட்டு தரையில் உட்கார்ந்துதான் சாப்பிடுகிறேன். சும்மா வாலிப பசங்க மாதிரி ரவுண்ட் அடிக்கிறேன்… என்கிறார் ஒரு முதிய தோழர்!
நாற்பது வயதுக்காரர்களுக்கு எண்பது வயதில் வரக்கூடிய உடல்நலக் கோளாறுகள் வந்துகொண்டிருக்கின்றன.எண்பது வயதுக்காரர்கள் சிலர் இன்றும் நாற்பது வயதுக்கான ஆரோக்கியத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு என்ன காரணம்?வாழ்க்கை முறை, உணவுப்பழக்கவழக்கம்,சிரமமாக இருக்கிறது என்று பலரையும் சொல்லவைப்பது, ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ்(Osteoarthritis) என்று சொல்லக்கூடிய எலும்பு மூட்டு நோய். இது மூட்டுகளைத் தாக்கி,பாதிக்கச் செய்கிறது.
வீட்டுக்கு வீடு இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்று சொல்வதைவிட, நாட்டுக்கு நாடு நிறைய பேர் இருக்கிறார்கள் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு எல்லா நாட்டு மக்களையும் தாக்கி, தாங்கித் தாங்கி நடக்கவைக்கிறது.
மூட்டுகள் என்பது என்ன?
இரண்டு எலும்புகளை ஒன்றோடு ஒன்று சேர்க்கும் இணைப்பின் பெயர்தான் மூட்டுகள் (Joints).
தலையிலிருந்து கால் வரை உடலின் பல பகுதிகளிலும் மூட்டுகள் இருக்கின்றன. அவற்றின் உதவியால்தான் விராட் கோலி சிக்சர் அடிக்கிறார்.பத்மா சுப்பிரமணியம் பரதநாட்டியம் ஆடுகிறார்.சானியாவும்,சாய்னாவும் விளையாட்டுகளில் பதக்கங்களை குவிக்கிறார்கள்.
மூட்டுகள் நலமாக இருந்தால்தான் நம்மால் நடக்க,ஓட, எழுத முடியும். அன்றாடப் பணிகள் அனைத்தையும் செய்யமுடியும். மூட்டுகளில் பாதிப்புகள் ஏற்பட்டால் நமது அன்றாட வாழ்க்கை, அதிர்ச்சியான வாழ்க்கையாகிவிடும்.உடல் முழுக்க பல எலும்பு மூட்டுகள் இருந்தாலும் நாம் நிற்பதற்கு உதவும் மூட்டுகளை உடல் எடையைத் தாங்கும் மூட்டுகள் (Weight Bearing Joints) என்று அழைக்கிறோம்.
இந்த வகை மூட்டுகளில் இரண்டு வகை உள்ளன. ஒன்று,அதிகமான உடல் எடையைத் தாங்கும் மூட்டுகள் . இரண்டு,குறைவான உடல் எடையைத் தாங்கும் மூட்டுகள்.
அதிகமான உடல் எடையைத் தாங்கும் மூட்டுகள் என்பது உடலின் மொத்த எடையையும் தாங்கக்கூடிய எலும்பு மூட்டுகள்.
அவை,கணுக்கால் மூட்டு(Ankle Joint), முழங்கால் மூட்டு (Knee Joints),இடுப்பு மூட்டு(Hip Joints ) ஆகியவை.கால் பாதவிரல்கள் மூட்டு, குருத்தெலும்பின் கடைசிப் பகுதி மூட்டு ஆகியவை குறைவான உடல் எடையைத் தாங்கும் மூட்டுகளாகும்.
ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் என்கிற எலும்பு மூட்டு நோய் உடலின் எந்த மூட்டுகளில் ஏற்பட்டாலும்,அதற்கு அநேகமாக மூட்டுகளின் தேய்மானம்தான் மிக முக்கிய காரணமாக இருக்கும்.
மூட்டுகளின் தேய்மானத்திற்கு முக்கியக் காரணம் அதிக உடல் எடையினால், மூட்டுகளில் ஏற்படும் எடை அழுத்தம் ஆகும்.உடல் எடை கூடிக்கொண்டே வந்தால்,கொழுப்பு உடலில் அதிகமாகும். அதனால், இருதயத்திற்குப் பிரச்னை வரும். பின்பு சர்க்கரை வியாதி வரும் என்றுதான் எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால்,முக்கியமாக எலும்பு மூட்டு நோய் கால்களில் அதிகம் தாக்கும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. அமெரிக்காவில் மட்டும் 2.7 கோடி மக்கள் உடல் எடை அதிகமானதால், எலும்பு மூட்டு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் இந்த நோயின் பாதிப்பு அதிகமாகிக்கொண்டே வருகிறது. அதிக உடல் எடை இரண்டு வழிகளில் உங்களது மூட்டுகளுக்கு வலியை ஏற்படுத்தும். ஏற்கெனவே குறிப்பிட்ட உடல் எடையைத் தாங்கிக்கொண்டிருக்கும் மூட்டுகளுக்கு, உங்கள் உடல் எடை அதிகரிக்க அதிகரிக்க அழுத்தம் கூடிக்கொண்டே போகும்.இதனால் வலி அதிகரிக்கும். (உதாரணம்: முழங்கால் மூட்டு). அதிக உடல் எடையும்,நோயும் சேர்ந்து மூட்டு வலியை அதிகரிக்கச் செய்யும். (உதாரணம்: கால் மூட்டுகள்,கை மூட்டுகள்)
உடல் எடை அதிகமானால்,கால் மூட்டு வலி வரும் என்று சொல்கிறீர்களே, ஒல்லியாக இருப்பவருக்குக்கூட கால் மூட்டு வலி வரத்தானே செய்கிறது.அதற்கு என்ன காரணம்? என்று கேட்பீர்கள்.
ஒல்லியாக இருப்பவர்களுக்கு ஏற்படும் கால் மூட்டு வலிக்கு மூட்டு நோய் பாதிப்பு,அதிக உடலுழைப்பு, அதனால் ஏற்பட்ட அதிக தேய்மானம் போன்றவை காரணமாகும். 1971-ஆம் ஆண்டில் 3 சதவீதமே இருந்த எலும்பு மூட்டு நோய், 2002-ஆம் ஆண்டில் 18 சதவீதமாக உயர்ந்து விட்டது.
1480 பேரின் முழங்கால் மூட்டு எக்ஸ்ரே ஆய்வுப்படி, 30 சதவீதம் பேருக்கு உடல் எடைக்கும், மூட்டு வலிக்கும் தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டிருக்கிறது.அவர்கள் உடல் எடையை முறைப்படி குறைத்துக் கொள்ளும்போது மூட்டு வலி குறைவதும் கண்டறியப்பட்டிருக்கிறது.
நமது குதிகாலில் கேல்கேனியம் என்கிற எலும்பு உள்ளது.இதுதான் உடலில் அதிக எடையைத் தாங்கக்கூடிய எலும்பாகும். கணுக்கால்
எலும்புகள் என்று சொல்லக்கூடிய கால் விரல்களின் மேலிருக்கும் 5 எலும்புகளும் அதிக எடையைத் தாங்கும் சக்தி கொண்டதாக இருக்கின்றன.
குருத்தெலும்புகூட (அதாவது முதுகெலும்பின் கடைசிப் பகுதி) நாம் நேராக நிற்கும்போதும், நடக்கும்போதும் அதிக எடையை தாங்குகிறது. அதனால்தான் நீண்ட தூரம் நடந்தாலோ, நீண்ட நேரம் நின்றாலோ,இடுப்பு வலி ஏற்படுகிறது.
முழங்கால் மூட்டுக்குக் கீழே டிபியா (Tibia) என்று அழைக்கப்படும் கனமான, உறுதியான எலும்பு இருக்கிறது.காலில் அதிக எடையைத் தாங்கக்கூடிய எலும்புகளில் இதுவும் ஒன்று.
ஒருவர் 60 கிலோ எடை கொண்டவராக இருந்தால்,அவரது எலும்புகளின் எடை அதில் 15 சதவீதமாகும். அதாவது,சுமார் 9 கிலோ எலும்புகள் இருக்கும்.இந்த எலும்புகளின் எடை, ஆணைவிட பெண்ணுக்குச் சற்று குறையும். பெண்களின் உடல் எடையில் 12 சதவீதம்தான் எலும்புகள்.
உடல் எடை அதிகரிப்பது ஒருபுறம் இருக்க, சிறுவர் சிறுமியர் பள்ளிக்காலத்தில் புத்தகப்பை சுமையையும் தூக்கிச்செல்கிறார்கள்.இந்த சுமையும் அளவுக்கு அதிகமானால், அவர்களது மூட்டு சிறுவயதிலேயே பாதிக்கத்தான் செய்யும்.
3498 நடுநிலைப்பள்ளி மாணவர்களிடம் எடுத்தப் புள்ளி விவரப்படி,சுமார் 5 கிலோ எடையைச் சராசரியாக ஒவ்வொரு குழந்தையும் தூக்கிச்
செல்கிறது.சில நாட்கள்,அவர்கள் 18 கிலோ வரைகூட சுமக்கிறார்களாம். குழந்தைகள் தங்களது எடையில் சுமார் 10 சதவீதத்திற்கு மேல் புத்தகங்களை சுமந்து செல்வது நல்லதல்ல!
நீங்கள் படிகளில் ஏறும்போதும் இறங்கும்போதும் உங்கள் மூட்டுகளுக்கு உங்களது உடல் எடையைப்போல் 2 அல்லது 3 மடங்கு எடை அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
நீங்கள் குனிந்து, உங்கள் ஷூவிலுள்ள கயிறைக் கட்டினாலோ அல்லது தரையில் விழுந்த ஒரு பொருளை குனிந்து எடுத்தாலோ உங்களது உடல் எடையைப் போல் 4 அல்லது 5 மடங்கு எடை அழுத்தம் உங்களது மூட்டுகளுக்கு கொடுக்கப்படுகிறது. உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும், மூட்டுகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உணவும், உடற்பயிற்சியும் அவசியம்.

