– டாக்டர் எஸ்.அமுதகுமார்

ருசியினை உணர்வதில் முக்கிய பங்கு நாக்குக்கு இருந்தாலும், உணவை வாங்கி நாக்கில் வைத்த பின்புதான் ருசி தெரியும். அதற்கு முன்னால் கண்கள் பார்த்து, அந்த உணவை உண்ண தூண்டுகிறது. அதற்கும் முன்னால் எங்கிருந்தோ வரும் அதன் மணம், அதை சுவைக்கும் ஆசையை உருவாக்குகிறது. ஆக முதலில் மூக்கு நுகர்ந்து மணத்தை உணரச் செய்ய வேண்டும். இரண்டாவது கண்கள் அதைப் பார்த்து சாப்பிட தூண்டவேண்டும். பின்புதான் நாக்கு அதை ருசித்து ‘ஆஹா அபார ருசி’ என்று சொல்லும்.

ருசியில் இப்படி மூக்கு, கண், நாக்குக்கு ஒருங்கிணைந்த தொடர்பு இருக்கிறது.

வயதானவர்களில் பலர், ‘தங்களுக்கு ருசியே தெரியவில்லை’ என்று அடிக்கடி சொல்வார்கள். 50 வயதை தாண்டிவிட்டாலே சுவை அரும்புகள் குறையத் தொடங்கிவிடும். இது இயற்கை. அதேநேரத்தில் சிறுவர்கள், வாலிபர்கள், நடுத்தர வயதினர் ‘தங்களுக்கு சுவையே தெரியவில்லை’ என்று சொன்னால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ருசி தெரியவில்லை என்றால், அது முதலில் பசி இல்லாமல் செய்துவிடும். பசி இல்லையென்றால் சரியாக சாப்பிட மாட்டார்கள். அதனால் உடல் எடை குறைய ஆரம்பிக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் குறையும். இது ஆபத்தில் கொண்டுபோய் விடும். எனவே உங்களில் யாருக்காவது ருசி உணர்வு குறைகிறது என்றால், உங்கள் குடும்ப டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.

ருசியில் எப்போதுமே கவனமாக இருங்கள். உங்கள் நாக்கில் ருசி குறையக் கூடாது. அப்படியே குறைந்தாலும் அந்த ருசியின்மை நிரந்தரமாக மாறிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மதுவை அதிகமாக குடிப்பவர்களுக்கும், ரொம்ப ஸ்ட்ராங்காக குடிப்பவர்களுக்கும், வெற்றிலை பாக்கு புகையிலையை ஆண்டுக் கணக்கில் தினமும் உபயோகிப்பவர்களுக்கும், சுவை உணர்வு குறையும்.

உலக மக்கள் தொகையில் 15 சதவீதம் பேருக்கு சுவை அல்லது மணத்தை கண்டுபிடிப்பதில் பிரச்னை இருக்கிறது. முதலில் அவர்கள், ருசி தெரியவில்லை என்றுதான் டாக்டரிடம் சொல்வார்கள். ஆனால், அவர்களுக்கு மணமும் தெரியவில்லை என்பதை டாக்டர் கண்டுபிடித்துச் சொன்னபிறகுதான், அவர்களுக்கே தெரியவரும்.
உடலில் துத்தநாகம் மற்றும் வைட்டமின் பி12 சத்து குறைவாக இருந்தால் ருசியின்மை தோன்றும். எனவே அந்த சத்துக்கள் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
கடற்சிப்பிகளில்தான் துத்தநாக சத்து அதிகளவில் இருக்கிறது. இறைச்சி வகைகளிலும் அவரை, பருப்பு வகைகள், முழு தானியங்கள், பால் பொருட்கள், பூசணி விதை, முந்திரி பருப்பு, காளான், சாக்லெட் போன்றவைகளிலும் துத்தநாகச் சத்து அதிகமாக உள்ளது. ருசி எப்போதும் நன்றாக உணரப்பட வேண்டுமென்றால், மேற்கண்ட உணவுகளை சாப்பிட வேண்டும்.
ருசி குறைந்துவிட்டது என்று தோன்றினால், முதலில் கலர், கலரான, கவர்ச்சிகரமான உணவுகளைத் தயாரியுங்கள். பார்க்கும்போதே உணர்வு தூண்டப்பட்டு, ருசி மறுபடியும் பழைய நிலைக்கு வந்துவிடும். உப்பு, சர்க்கரை இரண்டையும் அதிகம் சேர்க்காமல், அதிக மணம் தரக்கூடிய பட்டை, சோம்பு, லவங்கம், ஏலக்காய், கிராம்பு போன்ற கரம் மசாலா உணவுப்பொருள் அயிட்டங்களை உணவில் அதிகம் சேர்த்துப் பாருங்கள். ருசி தானாக மேம்பட ஆரம்பிக்கும். பாலாடைக்கட்டி, வெண்ணெய், வறுத்த முந்திரி, வறுத்த வேர்க்கடலை முதலியவைகளையும் உணவில் சேருங்கள்.

தனியாக உட்கார்ந்து சாப்பிடும்போது ருசி தெரியாது. கூட்டமாக உட்கார்ந்து சாப்பிட்டுப் பாருங்கள். ருசி நன்றாகவே உணரப்படும். கெட்ட நாற்றம் அடிக்கக்கூடிய இடங்களில் உட்கார்ந்து சாப்பிட்டால், ருசியை நன்றாக உணர முடியாது.

தற்காலிக ருசியின்மைக்கு காரணங்கள்

  • நெஞ்சில் சளி, வாயில் தொற்றுநோய், செயற்கை பல் செட், ஈறுகளில் நோய்த் தாக்குதல், தொண்டை கோளாறுகள் முதலியவைகளில் எந்த பிரச்னை இருந்தாலும் ருசி குறையும்.
  • தலையில், மூளையில் பலத்த காயம் ஏற்பட்டு ஆபரேஷன் பண்ணியவர்களில் சிலருக்கு ருசி தெரியாமல் போக வாய்ப்புண்டு.
  • ஏதாவது நோய்க்கு அதிக நாட்கள் மருந்து சாப்பிடுகிறவர்களில் சிலருக்கு ருசி தெரியாமல் போய்விட வாய்ப்புண்டு. மருந்துகளை நிறுத்தினால் மறுபடியும் ருசியை உணர ஆரம்பிப்பார்கள்.
  • சிகரெட் புகைப்பவர்களுக்கு எல்லா உணவுமே, சற்று ருசி குறைவாகத்தான் தெரியும். சிகரெட் பழக்கத்தை நிறுத்த ஆரம்பித்தால், ருசியை உணரும் தன்மை சிறிது சிறிதாக மேம்படும்.
  • ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் இருந்தால், மூக்கு அடைக்கும். அப்போது உணவின் வாசனையை நுகர முடியாது. வாசனை தெரியவில்லை என்றால் உணவு சப்பென்றுதான் இருக்கும்.
  • கழுத்து மற்றும் தலையில் புற்றுநோய்க்கு கதிரியக்க சிகிச்சை கொடுக்கும்போது ருசியின்மை உருவாகும்.
  • சில ரசாயனப் பொருட்களின் நெடி, ருசியைக் குறைத்துவிடும்.
    பற்களில் பிரச்னை இருந்தாலும், வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் இருந்தாலும் ருசியின்மை தோன்றக் கூடும்.