
கடவுளுக்குப் போடவும், பெண்கள் தலையில் சூடவும் மட்டுமே பூக்கள் பயன்படுவதில்லை. மருந்து பொருளாகவும் பயன்படுகின்றன. நறுமணமிக்க மலர்கள் உடல் ஆரோக்கியத்துக்கும் மணமூட்டுகின்றன. அப்படிப்பட்ட பூக்களைப் பற்றி பார்ப்போம்..
செம்பருத்தி பூ: இது இதயத்துக்கு இதம் சேர்ப்பது. நான்கு செம்பருத்திப் பூக்களைச் சுத்தம் செய்து சிறிதளவு தண்ணீரில் நன்றாகக் காய்ச்சி, சுண்டிய பிறகு அதை வடிகட்டி காய்ச்சிய பசும்பாலில் கலந்து தேவையான சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை என இரு வேளை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவந்தால் இதயம் வலுப்படும்.
மந்தாரை பூ: மலம் கெட்டியாக இருக்கிறதே என மலச்சிக்கலால் மனம் புழுங்குவோருக்கு ஏற்றப் பூ இது. மந்தாரைப் பூவை நிழலில் காய வைத்து இடித்துத் தூளாக்கிச் சலித்துச் சூரணமாக்கிக் கொண்டு சர்க்கரை அல்லது தேன் குழைத்துச் சாப்பிட்டால் மலம் இளகிப் போகும்.
வேப்பம் பூ: வேப்ப மரமே மருத்துவ மரம். அதன் எல்லா பாகங்களும் மருந்துப் பொருளாக பயன்படுகின்றன. வேப்பம் பூவை வறுத்துப் பொடி செய்து, பருப்பு ரசத்துடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாந்தி, ஏப்பம், குடல் கிருமிகள் போகும்.
வெங்காயப் பூ: இது பெண்களுக்கு ஏற்ற பூ. வெங்காயப் பூக்களை நீரில் போட்டு, அத்தண்ணீரைக் காலையிலும் மாலையிலும் குடித்துவந்தால் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.
ஆவாரம் பூ: அரிப்பால் அவதிப்படுவோருக்கு ஆரோக்கியம் தரும் பூ இது. ஆவாரம் பூவை பச்சைப் பயறுடன் சேர்த்து அரைத்து, உடலில் தேய்த்துக் குளித்துவந்தால் உடல் நமைச்சல் போகும்.
மாம்பூ: மாம் பூவைக் காய வைத்துப் பொடி செய்து, தயிரில் கலந்து சாப்பிட்டால் ரத்தபேதி நிற்கும்.
தூதுவளை பூ: தூதுவளைப் பூவை பாலுடன் சேர்த்துக் காய்ச்சிக் குடித்துவந்தால், ஆஸ்துமா மட்டுப்படும்.
மருதாணி பூ: தூக்கமின்றி துக்கப்படுவோருக்கு ஏற்ற பூ இது. மருதாணிப் பூக்களைத் தலையணைக்கு அடியில் வைத்தால் நல்ல தூக்கம் வரும். அத்துடன் உடல் வெப்பம் தணியும்.
ரோஜா பூ: இதை சூட மட்டுமல்ல.. சுவைக்கவும் சிலருக்கு பிடிக்கும். ரோஜா பூவின் இதழ்களைக் காய வைத்துக் கஷாயம் வைத்துக் குடித்துவந்தால், வாய்ப்புண் ஆறும்.
சாமந்தி பூ: சாமந்திப் பூவை தினமும் தலையில் சூடிவந்தால் தலைமுடி உதிராமல் இருக்கும். அத்துடன் தலையில் பேன் தொல்லை இருக்காது.
மகிழம் பூ: மகிழம் பூவை எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி, தலையில் சிறிது நேரம் ஊறவைத்துக் குளித் தால், காதுகளில் ஏற்படும் தொல்லை போகும்.

