ஆசிரியர்: உறவுகள் மேம்பாட்டு நிபுணர்
செலின் ராய்.

வெளியீடு: ஹெர் ஸ்டோரிஸ்,
15, மகாலட்சுமி அபார்ட்மெண்ட்,1,ராக்கியப்பா தெரு,

சென்னை -600 004.
செல்:75500 98666.

பக்கங்கள்: 256
விலை ரூபாய்: 350

பாலியல் கல்வியை வலியுறுத்தி வெளிவந்து உள்ள முக்கியமான நூல்.தம்பதியர்கள் மகிழ்ச்சியாக வாழவும் தாம்பத்ய வாழ்க்கை சிறக்கவும் உளவியல், உடலியல், மருத்துவ அறிவியல் அடிப்படையில், சமூக அக்கறையுடன் எழுதப்பட்ட நூல்.காவல் துறையில் உயர்ந்த பொறுப்புகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற திலகவதி ஜ.பி.எஸ். இந்த நூலை வாழ்த்தி வரவேற்று எழுதியதை வெளியிடுகிறோம்.
-ஆசிரியர்.

காலம் காலமாகப் பொதுவெளியில் பெண்கள் பேசத் தயங்கும், பேசினால் சமூகமே அப்பெண்களைத் தனிமைப்படுத்திவிடக்கூடிய அபாயகரமான தலைப்பு, ‘தாம்பத்ய உறவு’.

நிலவில் இந்தியாவின் சந்திரயான் – 3 தடம் பதித்துவிட்ட இந்தக் காலத்திலும்கூட இந்த எண்ணத்தில் மாற்றமுமில்லை.பசி, தாகம்போல, தாம்பத்ய உறவில் பெறும் திருப்தியும் பெண்களுக்கான அடிப்படை உரிமை என்கிற புரிதல் இந்தச் சமூகத்தில் பலருக்கும் இல்லை.

‘இது குறித்து பெண்கள் பேசுவதே வெட்கக்கேடு’, ‘கணவனுடனான உறவில் திருப்தி பெறுவதைப் பற்றியெல்லாம் பெண்கள் பகிரங்கமாகப் பேசலாமா ?’ ‘ச்சே… ச்சே… பெண்களா இவர்களெல்லாம்?”, “யாருக்கு வேண்டும் செக்ஸ் எஜுகேஷன்?” இப்படித் தூற்றுவதற்கும், இவற்றைப் பற்றியெல்லாம் வெளிப்படையாக, பகிரங்கமாகப் பேசும் பெண்களை அம்பலப்படுத்தி பொதுவெளியில் கொச்சைப்படுத்துவதற்கும் எத்தனையோ சமூகநீதிக் காவலர்கள் தயாராக இருக்கிறார்கள்.

இந்தச் சூழலில், வெகு துணிச்சலோடு யாரும் பேசாத அக்கருப்பொருளை, இந்த நூலில் தந்திருக்கிறார் ஒரு பெண் எழுத்தாளர். அதற்காகவே முதலில் அவரை மனதாரப் பாராட்டுகிறேன்.

இலைமறைகாயாக இருக்கவேண்டிய ஒன்றை, பட்டவர்த்தனமாகப் பேசுவது சரிதானா? நின்று நிதானித்து, நன்கு யோசித்து இந்தக் கேள்விக்கான பதிலை ஆராய்ந்தால், ‘சரியில்லை’ என்ற ஒற்றை பதிலில் சமூகம் இதைக் கடந்துபோய்விட முடியாது என்றே தோன்றுகிறது. திருமணமான ஒரு பெண் கர்ப்பம் தரிக்கவில்லையென்றால், அவளை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தும் சமூகம், ஆணை அதற்கு நிர்பந்திப்பதில்லை என்பது இன்றுவரை நிதர்சனம்.ஏனென்றால், அவன் ஆண். பெண்ணிடம்தான் குறை. அவள் மலடி.ஆனால் மலடன் என்ற சொல் புழக்கத்திலேயே இல்லையே.

இதையெல்லாம் நிறுவ அத்தனை ஆயுதங்களையும் முன்னெடுப்புகளையும் சர்வ சாதாரணமாகப் பலரும் எடுப்பதை இப்போதும் பார்க்கிறோம். ஆண், பெண்ணின் மேல் ஆதிக்கம் செலுத்துவது தவறே இல்லை என்பதற்கு சாட்சியாக இன்றைக்கும் பல தொலைக்காட்சி சீரியல்கள், திரைப்படங்கள் அன்றாடம் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.அந்த ஆணாதிக்கக் கருத்தாக்கம் திரும்பத் திரும்ப எல்லோர் மனதிலும் காட்சிகளாக, பாத்திரங்களாக அழுத்தமாக மனதில் பதியவைக்கப்படுகிறது.

இப்படிப்பட்ட ஒரு சூழலில் ஒரு பெண், சக பெண்களின் பாலியல் வேட்கைக்கு நியாயம் வேண்டிக் குரல் கொடுத்தால் என்னவாகும்… அந்தப் புரட்சிக்குரல்தான் இந்தப் புத்தகம்.

திருமணமான தம்பதி. இரவு, படுக்கையறை.கணவன், மனைவியை ஆட்கொள்கிறான்.தான் திருப்தி அடைந்ததும் குப்புறப்படுத்து, குறட்டைவிட்டுத் தூங்குகிறான்.தன் துணைவி பற்றியோ, அவள் அந்த உறவில் திருப்தியடைந்தாளா, இல்லையா என்பது பற்றியோ அவனுக்குக் கவலையே இல்லை. இதுதான் உலகம் முழுக்க இருக்கும் பெரும்பாலான திருமணமான பெண்களின் உண்மை வாழ்க்கை.

அவர்களால் இது குறித்து வெளியே பேச முடியாது. பேசுவது அசிங்கம். மீறிப் பேசினால், அவள் குடும்பப் பெண் அல்ல. இந்தச் சமூகத்தைவிட்டே ஒதுக்கப்பட வேண்டியவள். பெண்களுக்கும் ‘அந்த’ அடிப்படைத் தேவையும், வேட்கையும் உண்டு. அவளும் ரத்தமும் சதையும் உணர்ச்சியும் உள்ள மனுஷி
என்கிற எண்ணம் பல ஆண்களுக்கு இல்லை. இது குறித்து விரிவாகப் பேசுகின்றன இந்த நூலிலுள்ள அத்தியாயங்கள்.

உண்மையில், பாலியல் வறட்சிதான் பல குற்றச் செயல்களுக்கும் காரணமாகிறது என்பதே உண்மை.திருமணம் தாண்டிய உறவு,கொலை செய்யும் அளவுக்குக் கணவன் மீது எழும் கோபம், சுய பச்சாதாபத்தில் தற்கொலை முடிவு… எனப்பல விபரீத முடிவுகளுக்கும் பாலியல் வறட்சி காரணமாகிவிடுகிறது. பெண் என்பவள் ஆண்களுக்கு வளைவும் நெளிவும் கூடிய வெற்று உடல்.இச்சைக்கான வடிகால்.இதுதான் இன்று வரைக்குமுள்ள ஒரு நடைமுறை. திருமணமான ஒரு பெண், தன் கணவனிடம் எதையெல்லாம் விட்டுக் கொடுக்கலாம், எவற்றையெல்லாம் கேட்டுப் பெறலாம் என்பதை அழுத்தம் திருத்தமாக முன்வைக்கிறது இந்த நூல்… குறிப்பாக தாம்பத்ய உறவில்.

தாம்பத்ய உறவில் திருப்தி என்பது ஆண், பெண் இருவருக்கும் பொது.அதை திருமணமான ஒரு பெண் எப்படிக் கண்டடைவது என்பதை அறிவியல்,மருத்துவம்,உளவியல் ரீதியாக இந்த நூலிலுள்ள கட்டுரைகள் முன்வைக்கின்றன. கற்பை ஆண், பெண் இருவருக்கும் பொதுவில் வைக்க வேண்டும் என்று சொன்ன பாரதியார் இன்று இருந்திருந்தால், பாலியல் கல்வியை உயர்நிலைப் பள்ளியிலேயே பாடமாக்க வேண்டும் என்று சொல்லியிருப்பார்.இது என் கருத்து.

பாலியல் உறவு குறித்த புரிதல் இல்லாததே இன்றைக்குச் சமூகத்தில் நடக்கும் பல பாலியல் வன்கொடுமைகளுக்கும் தொல்லைகளுக்கும் சீண்டல்களுக்கும் காரணம்.குறிப்பாக, மனைவி என்கிற மனுஷியின் உணர்வுகளுக்குக் கணவன் மதிப்பளிக்காதது என்னென்ன பிரச்னைகளுக்கெல்லாம் வழிவகுக்கும் என்பதை இந்த நூலிலுள்ள அத்தியாயங்கள் விரிவாகப் பேசுகின்றன. திருமணமான ஒவ்வோர் ஆணும் பெண்ணும் அவசியம் படிக்கவேண்டிய புத்தகம் இது.

இப்படி ஒரு நூலை எதுபற்றியும் கவலைப்படாமல் வெளிக்கொண்டு வந்த ஹெர் ஸ்டோரிஸ் அமைப்பையும், கட்டுரைகளை எழுதிய எழுத்தாளரையும் மனதார வாழ்த்துகிறேன்.

-திலகவதி.ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி.