
சமீபகாலமாக புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதில் முன்னோடி மருத்துவமனையாக எம்.ஜி.எம்.கேன்சர் இன்ஸ்டிடியூட் செயல்பட்டுவருகிறது.
54 வயது பெண் ஒருவருக்கு இரண்டாவது ஸ்டேஜ் புற்று நோயை குணப்படுத்த முதலில் அறுவை சிகிச்சை மூலம் கட்டி அகற்றப்பட்டது. பின்னர் எஞ்சியிருக்கும் நுண்ணிய புற்றுநோய் செல்களை அழித்து நோய் மீண்டும் வருவதை தடுக்க “பிராக்கிதெரபி” எனப்படும் உள் கதிர்வீச்சு சிகிச்சை முறையை அளித்துள்ளனர்.
“பிராக்கிதெரபி” என்பது ஒரு மேம்பட்ட கதிர்வீச்சு சிகிச்சை முறையாகும்.இதில், கட்டி அகற்றப்பட்ட பகுதிக்குள் கதீட்டர் எனப்படும் மெல்லிய குழாய்கள் செலுத்தப்பட்டு, அந்த குறிப்பிட்ட இடத்திற்கு மட்டும் மிகத் துல்லியமாக கதிர்வீச்சு வழங்கப்படுகிறது. இந்தப் பெண் நோயாளிக்கு, மார்பகத்தில் ஐந்து மெல்லிய குழாய்கள் பொருத்தப்பட்டு, இரண்டு நாட்களில் நான்கு அமர்வுகளாக கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த முறையில் கதிர்வீச்சு நேரடியாகப் புற்றுநோய்க் கட்டி இருந்த இடத்திற்கு மட்டும் செலுத்தப்படுவதால், அதனைச் சுற்றியுள்ள ஆரோக்கியமான திசுக்களுக்கு கதிர்வீச்சின் பாதிப்பு வெகுவாகக் குறைக்கப்படுகிறது. மேலும்,மார்பகம் மற்றும் அருகிலுள்ள முக்கிய உறுப்புகளான இதயம், நுரையீரலுக்கு ஏற்படும் கதிர்வீச்சு பாதிப்புகள் பெருமளவு தவிர்க்கப்படுகின்றன.
சாதாரண கதிர்வீச்சு சிகிச்சை முறையில் ஏற்படும் தோல் நிறம் மாறுதல்,வடுக்கள் ஏற்படுதல் மற்றும் திசுக்கள் கடினமாதல் போன்ற பக்கவிளைவுகளைத் தடுக்கிறது.முதல் நிலை மார்பக புற்றுநோயில் 1-2% மற்றும் இரண்டாம் நிலை மார்பக புற்றுநோயில் 2-5% என்ற அளவில் மட்டுமே புற்றுநோய் மீண்டும் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதே இந்த சிகிச்சையின் சிறப்பம்சமாகும்.
இந்த வெற்றிகரமான சிகிச்சையை, புற்றுநோய் அறுவைசிகிச்சை முதுநிலை நிபுணர் டாக்டர் சிவகுமார் மகாலிங்கம் மற்றும் கதிர்வீச்சு புற்றுநோயியல் முதுநிலை நிபுணர் டாக்டர் அலெக்ஸ் ஏ. பிரசாத் தலைமையிலான மருத்துவக் குழுவினர் மேற்கொண்டனர்.
முதுநிலை நிபுணர் டாக்டர் எம்.ஏ.ராஜா, புற்றுநோய் என்ன காரணத்தினால் ஏற்படுகிறது?அதை தவிர்ப்பது எப்படி என்பதைப் பற்றிய விவரங்களை தெரிவித்தார்.
பெண்கள், அவ்வப்போது தங்களது மார்பகங்களில் ஏதாவது அசாதாரண கட்டியிருக்கிறதா, மாற்றம் ஏதேனும் தென்படுகிறதா என்பதை பரிசோதித்து வர வேண்டும்.
உடல் எடையை சீராக பராமரிப்பது முக்கியம்.அதிக உடல் எடை நல்லதல்ல.
கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது முக்கியம். தினசரி உடற்பயிற்சி செய்வதும் நல்லது.
-பவித்ரன்,
ஹெல்த் அண்ட் பியூட்டி.

