பீர் குளிர்ச்சி தரும் என்ற நம்பிக்கை தவறானது.மிதமான அளவு மது அருந்துவது,அதிலும் ரெட் ஒயின் எனும் வகை மதுவை அருந்துவது இதயத்திற்கு நல்லது என்று முன்பு சொல்லப்பட்டு வந்தது.அமெரிக்கா மற்றும் சில மேலை நாடுகளில் நடத்தப்பட்ட நிறைய ஆராய்ச்சிகளில் மிதமான அளவு என்பது பீர் எனும் மதுவாக இருந்தால் 360 மில்லி,ரம், பிராந்தி,விஸ்கி போன்ற மது வகைகளாக இருந்தால் 45 மில்லி என்று வரையறுக்கப்பட்டது. இந்த அளவு மட்டும் ஒரு நாளைக்கு ஒருவர் எடுத்துக்கொண்டால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வரும் வாய்ப்பு குறைவதாகச் சில ஆராய்ச்சிகளில் தெரியவந்தது. அதேநேரம், எவ்வளவு குறைவாக மது அருந்தினாலும் கல்லீரல்,கணையம் சார்ந்த நோய்கள், புற்றுநோய் போன்றவை அதிகரிக்கும் என்பதும் தெரியவந்துள்ளது.

எனவே,இதயத்துக்கு நல்லது செய்ய வேண்டுமானால் உடல் எடையைக் குறைத்து, ஆரோக்கியமான உணவை எடுத்து, நல்ல உடற்பயிற்சி செய்து, புகைப்பழக்கத்தை நிறுத்தினாலே போதும்.எவ்வளவு குறைவாக மது அருந்தினாலும் ஏதாவது ஒரு உறுப்புக்கு பிரச்னை வரத்தான் செய்யும். எனவே மதுவை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது.

கோடை வெயிலுக்கு பீர் குடிப்பது நல்லதல்ல.தாராளமாக மோர் குடிக்கலாம்.

வாரத்தில் ஒருநாள் ஃபுரூட் டயட் இருக்கலாமா?

அரிசி சாதம்,இட்லி, தோசை, சப்பாத்தியைவிடப் பழங்கள் பரவாயில்லை. ஆனால் நாள் முழுக்க நமக்குத் தேவையான கலோரிகள் பழங்கள் மூலம் கிடைக்க வேண்டும் என்றால் 3-4 கிலோ சாப்பிட வேண்டும்.இந்த அளவுக்குப் பழங்கள் சாப்பிடும்போது, அதில் உள்ள பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் சர்க்கரைகள் இன்சுலின் எதிர்ப்புத்தன்மை, கல்லீரல் கொழுப்பு போன்ற பிரச்னைகளை அதிகப்படுத்த வாய்ப்புண்டு. சர்க்கரை,உடல் பருமன் போன்ற எந்தப் பிரச்னையும் இல்லாதவர்கள் வேண்டுமானால் இப்படி எப்பொழுதாவது ஒன்றிரண்டு நாள்கள் முயற்சி செய்யலாம். மற்றவர்கள் மற்ற உணவுகளுடன் சேர்த்து மிதமான அளவு பழங்களை எடுத்துக்கொள்வதே நல்லது