ளம் பிராயத்திலேயே  குழந்தைகளுக்கு இயற்கையின் மேல் ஓர் ஆர்வத்தை ஏற்படுத்துங்கள். அதனுடன் ஓர் இணைப்பை ஏற்படுத்துங்கள். கடற்கரைக்கு அழைத்துக் கொண்டு செல்லுங்கள். தண்ணீர்,மணல், ஈரத்துடன் உருண்டு, புரண்டு விளையாடட்டும். மழை சேற்றில் அளையட்டும். ஒவ்வொரு நாளும் வீட்டுக்கு வெளியே கொஞ்ச நேரமாவது குழந்தைகள் சுற்றிவிட்டு வரவேண்டும். அடிக்கடி பூங்காக்களுக்குக் கூட்டிச் செல்லுங்கள். இயற்கையின் வனப்பை ரசிக்கவும், அனுபவிக்கவும் அதைப் போற்றவும், அதன் வீச்சைப் பார்த்து அதிசயிக்கவும் அவர்கள் கற்றுக்கொள்ளட்டும்.

தெளிவான வானத்தில் இரவில் நட்சத்திரத்தைக் குழந்தையுடன் பார்த்து ரசியுங்கள். மழையும் பெய்து மஞ்சள் வெய்யிலும் காயும்போது வானம் வீசி இறைக்கும் வானவில்லையும், அதன் வர்ண ஜாலத்தையும் ரசிக்க விடுங்கள். அந்தி சாயும்போது சூரியன் தன் கோலத்தை ஆரஞ்சு நிறப் பந்தாக மாற்றிக்கொள்ளும் மாயா ஜாலத்தை அனைவரும் ரசிக்கலாமே!

பிளானடேரியத்துக்கு அழைத்துச் செல்லுங்கள். இருட்டான அறையில் இரவு வானத்தையே அறைக்குள் கொண்டு வரும் பிளானடோரியத்தின் சாதனையை  ஆராயட்டும்; போற்றட்டும். தொலைநோக்கியில் கோள்கள் கிட்டே வரட்டும். அது காவியம் ஆயிரம் பேசட்டும். நம் உயிர் வாழ்க்கைக்குக் காட்டுப் புலிகளும், மான்களும் எவ்வாறு உறுதுணையாக இருக்கின்றன என்ற சூட்சுமத்தை குழந்தையிலேயே  தெரிந்துகொள்ளட்டும். மண்புழுவும் பாம்பும் பறவையும் மரமும் ஒரு விளம்பரமும் செய்யாமல், ஒரு பொன்னாடையும் போர்த்திக் கொள்ளாமல், இடது கை கொடுப்பது வலது கைக்குத் தெரியாமல் எப்படி மனித குலத்துக்கு சேவை செய்கின்றன என்று அதிசயிக்கட்டும்.

மார்க், ரேங்க், ஹோம் ஒர்க், மனப்பாடம் என்று என்நேரமும் அழுத்தம் தராமல் மகிழ்ச்சியாக கொண்டாட்டமாக ஆடி ஓடி விளையாடட்டும்.

– டாக்டர்.ஆர்.கே.ஆனந்த்,குழந்தை நல மருத்துவர், மும்பை