
ஆங்கில புத்தாண்டு பிறந்தால் காலண்டர்,டைரி வாங்கி அழகு பார்ப்பது எல்லோருக்கும் பிடித்தமானதாக இருந்தது.டைரி விற்பனையும் அமோகமாக இருக்கும்.நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பரிசாக கொடுத்து மகிழ்ந்தது ஒரு காலம்.தொழில் வியாபார நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அன்பளிப்பாக வகைவகையான டைரிகளை கொடுத்து அசத்துவார்கள்.
இதெல்லாமே அந்தக்காலம். இப்போது என்னாச்சு தெரியுமா?செல்ஃபோன் கைக்கு வந்த பிறகு வாட்ஸ் ஆப்,பேஸ் புக்,யு டியூப் செயலிகள் பார்க்காமல் ஒரு மணி நேரம் கூட இருக்க முடியாது.இரவு தூங்குவதும் குறைகிறது.செல்ஃபோனுக்கு அடிமைகளாகி வருகிறோம்.பெரியவர்கள் மட்டுமல்ல குழந்தைகளையும் கெடுக்கிறோம்.கிரவுண்டில் விளையாடாமல் வீட்டில் மணிக்கணக்கில் உட்கார்ந்தபடியே செல்ஃபோனில் விளையாடுகிறார்கள்.
இந்த நிலை மிகவும் ஆபத்தானது.நவீன அறிவியலின் அற்புதமான கண்டுபிடிப்பு செல்ஃபோன்.அதன் அளவில்லா பயன்பாட்டையும் மறுக்க முடியாது.அதே நேரத்தில் நமது வழக்கமான அவசியமான வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு செல்ஃபோனே கதி என்று கிடந்தால் என்னாவது?
நமது அன்றாட நிகழ்வுகளை,வரவு செலவுகளை,செய்ய வேண்டிய பணிகளை தினசரி டைரியில் எழுதி வைப்பது அவசியமாகும்.ஒரு நாள் முழுவதும் என்னென்ன செய்தோம், என்ன பொருள் வாங்கினோம்,யாரை சந்தித்தோம்,புதிய அனுபவங்கள் என்ன என்பது உட்பட எல்லாவற்றையும் பதிவு செய்து வைப்பது எதிர்காலத்துக்கு உதவும்.
சமீபத்தில் ஒரு நண்பர் தனது செல்ஃபோனை தொலைத்துவிட்டார்.அவரது தொடர்புகள் அனைத்தும் இல்லாமல் சிலபல நாட்கள் தவித்துப்போனார்.பல இழப்புகளையும் சந்தித்தார்.அதனால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார்.இழந்ததை மீண்டும் பெற முடியுமா?இந்த நிலை யாருக்கும் வர வேண்டாம்.
இந்த புத்தாண்டு 2022 ல் இருந்து புதிய சபதம் எடுப்போம்.
* செல்ஃபோனை தேவைக்கு ஏற்ப திட்டமிட்டு குறைவாக பயன்படுத்துவோம்.
* தவறாமல் டைரி வாங்குவோம்.
* வாங்குவது மட்டுமல்ல அதில் தினசரி அன்றாட நிகழ்வுகளை பதிவு செய்வோம்.
* தினமும் குறைந்தபட்சம் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வோம்.
* நோய் நொடி இல்லாத வாழ்வை அடைவோம்.
* மன அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் முக்கியத்துவம் தருவோம்.
* புதிய வாய்ப்புகளை தேடுவோம்.
* கொரோனாவை எதிர்கொள்ள திட்டமிடுவோம்.
இவை சில உதாரணங்கள்தான்.
உங்கள் விருப்பம் போல் புதிய சபதங்களை எடுத்து வருடம் முழுவதும் அவசியம் கடைபிடியுங்கள்.
அனைவருக்கும் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துகள்!
-குணசேகரன்

