
டாக்டர் ஜி.ராஜமோகன்.
மனிதன் விரும்புகிறானோ, இல்லையோ அவனுடைய ஆயுட்காலம் வேகமாக நீட்டிக்கப்பட்டு வருகிறது.சில முதியவர்கள் பெரிதாக நோய் எதுவும் இல்லாமல் தங்கள் உறவுகளுடன் முதுமை என்னும் பருவத்தை பூங்காற்றாக அனுபவித்து வருகிறார்கள்.அதற்கு மாறாக,சிலர் தள்ளாமை,இயலாமை,வறுமை மற்றும் நோய்களுடன் முதுமையை ஒரு புயல் காற்றாக,வேதனையோடு எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள்.
வயது முதிர்வால் ஏற்படும் நோய் பாதிப்புகள்,ஞாபக மறதி ஒரு பக்கம்.மறுபக்கம், குடும்பத்தினர் வேண்டாத சுமையாக புறக்கணிப்பது, அவமானப்படுத்துவது, அலட்சியப்படுத்துவது,அநாகரிகமாக நடத்துவது வெட்கக்கேடு.
பொதுவாகவே, “இந்தியா என்பது முதியவர்களை கொண்டாடும் நாடு, இந்தியக் குடும்பங்கள் முதியவர்களின் மீது மரியாதையையும்,மதிப்பையும் கொண்டிருப்பவை” என்று நாம் காலம் காலமாக நம்பிக்கொண்டிருப்பவை எல்லாம் தவறானவை என சமீபத்திய ஆய்வுகள் சொல்கின்றன.
இன்றையப் பொருளாதாரச் சூழலில், குடும்ப அமைப்பு என்பதே சுருங்கியிருக்கிறது.ஒரு குடும்பத்தின் மீது ஏராளமான நெருக்கடிகள் இருக்கின்றன.அதுவும் நகர்ப்புற குடும்பங்களின் பொருளாதார சூழல் இன்னும் கடினமானது.அது முதியவர்களுக்கு அத்தனை இலகுவானதாகவும் இருப்பதில்லை.ஒரு கட்டாயத்தின் பேரில் முதியவர்களை பராமரிக்கும் பொறுப்பிற்கு ஒரு குடும்பம் தள்ளப்படும்போது,பராமரிக்க நேரும் குடும்ப உறுப்பினர்கள் அந்த முதியவர்களை துன்புறுத்துவதன் வழியாகவே தங்களது மனவுளைச்சலை போக்கிக் கொள்கிறார்கள்.குடும்ப அமைப்பில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றங்களும், நெருக்கடிகளுமே முதியவர்களின்
மீதான வன்முறைகளுக்கு முக்கியமான காரணம்.
வன்முறை என்றால் அது வெறும் உடல் மீதான வன்முறை மட்டுமேயல்ல.சிறு அவமதிப்பும்,கடும் சொல்லும்,நிராகரிப்பும், அலட்சியமும், முதியவர்களுக்கு எதிரான சிறு உடல் அசைவுகளுமேகூட உளவியல் ரீதியாக அவர்களை பெரிதும் பாதிக்கின்றன.இந்த உளவியல் நெருக்கடிகள் முதியவர்களை மிக விரைவாகவே நோய்மையிலும் முதுமையிலும் தள்ளுகின்றன.அவர்கள் அங்கே மரணத்தை ஒரு விடுபடுதலாக எதிர்பார்க்க தொடங்கிவிடுகிறார்கள்.
முதியவர்களைப் பராமரிப்பதில் குடும்பங்கள் தன்னளவில் நிறைய மாற்றிக்கொள்ள வேண்டும்.இளைய தலைமுறையினருக்கு முதுமை தொடர்பான புரிதல்களை உருவாக்க வேண்டும்.முதியவர்களுடன் குழந்தைகள் உரையாடுவதையும் அவர்களுக்கான சேவைகளை வழங்குவதையும் குடும்பங்கள் உறுதிபடுத்த வேண்டும்.
முதியவர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள்!
குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நல்ல உறவை பேணுவது அவசியமாகும். சமூகத்தில் உறவு அற்றவராயின் அவர்களுக்கு மற்றவர்களைக் காட்டிலும் விரைவில் மரணம் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
எனவே மற்றவர்களுடன் இணைந்து செயல்படுங்கள்.கலை, இலக்கியம், விழிப்புணர்வு,அரசியல் நிகழ்வுகளில் ஈடுபடுபவர்கள் மகிழ்ச்சியுடன் நீண்ட காலம் வாழ்வதாகவும், அவர்களுக்கு நோய்களும் அதன் சிக்கல்களும் குறைவாக ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.தியானம், இசை, உடற்பயிற்சி போன்ற விஷயங்களில் உற்சாகமாக ஈடுபடுங்கள்.செயல் எதுவாயினும் அதன் விளைவுகள் அன்றாட கவலைகளில் இருந்து உங்களை விடுபட வைக்கும்.

