பரிமளா சரவணன், சைக்கோ தெரபிஸ்ட்
பல குடும்பங்களில் நிம்மதி பறிபோக காரணமாக இருப்பது குடும்பத் தலைவி அல்லது குடும்பத் தலைவன் மணவாழ்க்கை தாண்டி வேறொரு உறவை நாடிப்போவதுதான். துணையின் மீது நிறைந்த காதலும் பரிபூரண நம்பிக்கையும் வைத்து, தங்களுக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை பெரிதுபடுத்தாமல், களிப்போடு இல்லறம் நடத்தும்போது மட்டுமே, குடும்ப வாழ்க்கை சொர்க்கமாகும். இது கணவன்&மனைவி இருவருக்குமான செயல்முறை.
கணவன் அல்லது மனைவி, தம் வாழ்க்கைத் துணையிடம் தான் எதிர்பார்க்கும் ஒருசில குணங்கள் அல்லது அம்சங்கள் இல்லையெனில், அப்படி இருக்கும் நபரை சந்திக்கும்போது, ஒருவித மன ஈர்ப்பு உண்டாவது இயல்பே. ஆனால், அதைக் பெரிதுபடுத்தாமல் வாழ்க்கை துணை விட்டுக் கொடுத்தல், அனுசரித்துப் போதல், பொறுமை காத்தல், மன்னித்தல், நிபந்தனையற்ற அன்பு செலுத்துதல் மற்றும் பரந்த மனப்பான்மை போன்ற உயரிய பண்புகளால் மட்டுமே ஒரு நல்ல குடும்பத் தலைவனாகவோ, தலைவியாகவோ விளங்க முடியும். சுயநலம், பொறாமை, பழி வாங்குதல், அளவு கடந்த கோபம், அவசர முடிவு, வன்மம் போன்ற குணமுள்ள பெற்றோரால் சிறந்த வாழ்க்கையை பிள்ளைகளுக்கும் தர முடியாது.
என்னதான் கல்வி அறிவு, வேலைவாய்ப்பு போன்ற வளர்ச்சி வாய்ப்புகள், பெண்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினாலும், குடும்பம் என்று வரும்போது ஆணாதிக்க மனப்பான்மையே மேலோங்கியுள்ளது. ‘வீடுதான் சொர்க்கம்’ என்று பலபேருக்கு தெரியவில்லை. விளைவு.. திக்கற்ற மனப்பான்மையில் குழந்தைகள் வளர, வடிகால் தேடி அலையும் பெற்றோர் குடும்பம் நடத்த.. வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் மிகச் சுலபமாக, இல்லறம் தாண்டிய உறவுகள் நுழைய, ஆணிவேர் ஆட்டங்கண்டு குடும்பங்கள் கூறுகளாகின்றன.
கட்டுப்பாடற்ற முறையில் சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துதல், அடிமையாகவே ஆகிப்போதல் போன்றவற்றால் இன்று பல குடும்பங்கள் சிதைந்து போகின்றன. தன்னை நம்பியுள்ள வாழ்க்கைத்துணை, பிள்ளைகள், குடும்பம் என்னும் வரத்தை, துச்சமாக நினைத்து வீட்டை விட்டு பிரிந்து செல்லும் நிலை உள்ளது.
கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், கணவனை நினைத்து அழுது புலம்பாமல், குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்ற வைராக்கியத்தோடு வாழ்ந்து வரும் பெண்களும் நம் நாட்டில் இருக்கத்தான் செய்கின்றனர். ஆண்டுகள் பலவானாலும் ஆறாத ரணத்தை தன் மனதில் தாங்கிக் கொண்டு, முகத்தில் காட்டாமல், தன் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ஒழுக்கமாக வாழ்ந்து காட்டுகிறாள் அந்தப் பெண். அவள் அல்லவோ பெண்! நம் மண்ணின் மணத்தை, மானத்தை பாதுகாக்கும் ஆண்களும் சமுதாயத்தில் பெருமளவில் இருக்கின்றனர்.
திருமண பந்தம் என்பது வெறும் உடல் சம்பந்தப்பட்டது அல்ல, பரஸ்பர அன்பு, மரியாதை, பெருந்தன்மை போன்ற நற்குணங்களால் பேணிக் காக்கப்பட வேண்டியது. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம். மேலைநாட்டு நாகரிக மோகம், விபரீத விஞ்ஞான வளர்ச்சி என மனித வாழ்வில் பல மாறுதல்கள் ஏற்பட்டதால், இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப சில விஷயங்களை விட்டுக் கொடுத்து வெறுப்பை காட்டாமல், பெரிய மனதுடன் நடந்த கொண்டால் நிச்சயம் நல்ல குடும்பம் உருவாகும். மனதை கட்டுப்படுத்தக் கூடிய உரிய வழிகாட்டுதலால், இதமாக வீசும் தென்றலைப் போல மனதை அமைத்தால் நல்ல மனமாற்றங்களும் நாளும் இயல்பானதுதான்.
இதை புரிந்து கொள்ளாமல் ஆத்திரம், வெறுப்பு என கோபாவேசமாக முடிவெடுத்து தவறு இழைத்த துணையை தனக்கு அடிமையாக இருக்க வேண்டும் என முற்படும்போதுதான் குடும்பம் என்ற அழகான கூடு சிதைந்து போகிறது.
குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் குடும்பத்தின் வளர்ச்சியை சீர்தூக்கிப் பார்த்து மன எழுச்சியை கட்டுக்குள் கொண்டுவந்து வாழ்வோரே, மிகச் சிறந்த குடும்பத்தலைவி அல்லது தலைவனாக பரிணமிக்க முடியும். அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படக் கூடாது. அடுத்தவர் தீண்ட அனுமதிக்கக் கூடாது. மாற்றுத்துணை மங்காத புகழையும் மங்கச் செய்யும். சபலமில்லாமல் நன்னெறியை கடைபிடித்தால்தான் பிரச்னைகளில் இருந்து தப்பலாம்.
வாரிசுகளுக்கும் சிறந்த முன்னுதாரணமாக இருக்க முடியும். உயர்ந்த குணநலன்கள் கொண்டோரின் வாரிசுகள், பெற்றோர் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாமல், ஒழுக்கமாக வாழ வேண்டும் என்ற நற்சிந்தனையை குடும்பத்தில் இருந்தே பெறுகின்றனர். தனிமனித சுகம் மட்டுமே பிரதானம் என வாழ்ந்தால் நிச்சயம் நல்ல குடும்பத்தை உருவாக்க முடியாது. தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்ளும் சுய கட்டுப்பாடுள்ளவர்களே நல்ல குடும்பங்களை உருவாக்குகின்றனர். நல்ல குடும்பங்களால் மட்டுமே நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும். நல்ல சமுதாயமே தலை சிறந்த நாடாக திகழும். குற்றமற்றவர்கள், குறையற்றவர்கள், தவறு செய்யாதவர்கள் என்று யாருமில்லை.
தவறை திருத்திக் கொண்டு வாழ முற்பட்டால்தான் இல்லறம் நல்லறமாகும். துரோகம் இழைத்த துணையோடு ஒரேவீட்டில் வாழ்வது பெரிதல்ல.. மனதார மன்னித்து வாழ்வதே அவர்களைப் பார்த்து வளரும் குழந்தைகள், இதமாகவும் நெறியாகவும் வளர வழி செய்யும். பிள்ளைகளின் எதிர்காலம் கருதி குடும்பத்தின் மேன்மையை ஆண்களும் பெண்களும் கண்ணியம் காக்க வேண்டும்.
பெற்ற குழந்தைகளை சிறந்த குடிமக்களாக நம் இந்திய தாய் திருநாட்டுக்கு அளிக்கும் பொறுப்பை பெற்றோர்கள் நிறைவேற்ற வேண்டும். நம் மண்ணின் மேன்மை இப்படிப்பட்ட மனித தெய்வங்களால்தான் பாதுகாக்கப்படுகிறது.

