டாக்டர் டி.காமராஜ், எம்டி, பாலியல் நிபுணர்
குழந்தைகள், வேலை, டெக்னாலஜி , பொழுதுபோக்குகள், நட்பு மற்றும் இதர ஈடுபாடுகள்.. இவற்றில் எதுவுமே ஒருவரின் வாழ்க்கையின் மையமாக மாறிவிடக் கூடாது. அப்படி மாறுகிற பட்சத்தில் வாழ்க்கைத் துணைக்கான முக்கியத்துவம் குறையத் தொடங்கும்.
குழந்தைகள்
குழந்தைகள் அற்புதமான உறவுகள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், பல நேரங்களில் அவர்கள் கணவன்&மனைவியின் மொத்த நேரத்தையும் நெருக்கத்தையும் வற்றச் செய்து விடுகிறார்கள். குழந்தைகள் வந்த பிறகு தம்பதியரும் ஒருவர் மீதான ஒருவரது ஈர்ப்பு குறைந்து தவிர்க்கத் தொடங்குகிறார்கள். குழந்தைகளைச் சுற்றியே அவர்களின் உலகம் இயங்குகிறது.
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் ஆய்வின்படி, 90 சதவீத தம்பதிகள் முதல் குழந்தை பிறந்தவுடன் தங்கள் நெருக்கத்தில், தாம்பத்யத்தில் மிகப்பெரிய வெற்றிடம் உருவாவதை உணர்கிறார்கள் என்று தெரிவித்துள்ளது.
குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி படிப்பு, வேலை, வாழ்க்கை நிமித்தம் பெற்றோரைப் பிரிய நேரிடலாம். பிள்ளைகளே உலகம் என வாழ்ந்து பழகும் பெற்றோருக்கு அந்தப் பிரிவுக்குப் பிறகு ஒருவித வெறுமை மனப்பான்மை அதிகரிக்கும். அதுவே குழந்தைகள் பிறந்த பிறகும் நெருக்கம் குறையாமல் அன்யோன்யமாக இருக்கும் தம்பதிகளுக்கு, பிற்காலத்தில் இந்த வெறுமை உணர்வு தலை தூக்குவதில்லை. தம்பதியரின் நெருக்கம் என்பது அவர்களது குழந்தைகளின் மனநிலையையும் ஆரோக்கியமாக வைக்கும். விவாகரத்தாகி பிரிகிற தம்பதியரின் குழந்தைகள், பெரிய அளவில் மன உளைச்சலுக்கு உள்ளாவதும் இதனால்தான்.
கணவன், மனைவியின் நெருக்கம் அவசியம் என்பது மேலோட்டமாகப் பார்த்தால் சுயநலமாகத் தோன்றலாம். இருப்பினும், குழந்தைகளின் தொந்தரவு உட்பட எந்தக் குறுக்கீடும் இல்லாமல் அவர்கள் இருவருக்கு மட்டுமேயான பொழுதுகள் நிச்சயம் அவசியம்.
சுருக்கமாகச் சொன்னால், உங்கள் குழந்தைகள் உங்களது காதலில் இருந்து பிறந்தவர்கள்தான். ஆனால், அவர்கள் உங்கள் காதலுக்கு குறுக்கே வர ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். அன்யோன்யமான, அன்பான, ஆரோக்கியமான, பிரிவில்லாத உங்கள் தாம்பத்யம்தான், உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் கொடுக்கக் கூடிய மிகச் சிறந்த பரிசு என்பதையும் மறக்காதீர்கள்.
வேலை
எல்லோருக்கும் பணத்தேவை இருக்கிறது. எப்போதும் அதன் பின்னால் நமது ஓட்டம் தொடர்கிறது. குறிப்பாக ஆண்களுக்கு பணம் சம்பாதிப்பது என்பது ஓர் அடையாளமாகவும் இருக்கிறது. அதனால் வேலை வேலை என அதைப்பற்றியே சிந்தனை. வேலைக்கும் வாழ்க்கைத்துணைக்கும் சமமாக முக்கியத்துவம் கொடுப்பதென்பது பலருக்கும் மிகச் சவாலான காரியமாக இருக்கிறது. வேலை முடிந்து வீட்டுக்கு வந்தாலும், வேலை மிச்சம் வைக்கிற மன அழுத்தத்தைக் கூடவே சுமந்து கொண்டு வர வேண்டியிருக்கிறது. வீட்டில் நுழைந்ததும் அந்த மன அழுத்தமானது துணையின் மீது வெறுப்பாகவோ, எரிச்சலாகவோ, கோபமாகவோ பிரதிபலிக்கிறது. அது இருவருக்குமான நெருக்கத்தை தவணை முறையில் கொல்கிறது.
வாழ்க்கையில் வேலை முக்கியம்தான். அதைவிட முக்கியம் திருமண உறவு. எனவே வீட்டுக்கு வந்ததும் வேலையைப் பற்றிய எண்ணங்களுக்கு விடை கொடுங்கள். வேலை தொடர்பான தகவல் தொடர்புகளை தற்காலிகமாக துண்டியுங்கள். உங்கள் துணையுடன் சேர்ந்து பேசுங்கள். சேர்ந்து உணவருந்துங்கள். நேரமின்மையை காரணம் காட்டி, துணையுடனான நெருக்கத்தை தவிர்க்காதீர்கள்.
என்னதான் வேலையில் பிஸியாக இருந்தாலும், உங்கள் துணைக்கு அடிக்கடி ஒரு எஸ்எம்எஸ் அனுப்புங்கள். பிஸியான வேலைக்கு இடையிலும் தான் தன்னவரின் நினைவில் இருக்கிறோம் என்கிற அந்த நினைப்பே துணையை உற்சாகப்படுத்தும். உங்களுடன் நெருக்கமாக்கும்.
டெக்னாலஜி
உலகத்தை சுருக்கி உள்ளங்கைகளுக்குள் கொண்டு வந்து விட்ட தொழில்நுட்ப வளர்ச்சி சாதனங்கள், கூடவே உறவுகளையும் சுருக்கி காணாமல் போகச் செய்கின்றன. டிஜிட்டல் அடிமைகளாக மாறிக் கொண்டிருக்கிற மனிதர்களுக்கு உறவுகளின் உன்னதம் தெரிவதில்லை. எப்படிப்பட்ட அன்யோன்ய தம்பதியரையும் இந்த நவீன தொழில்நுட்பங்கள் டிஜிட்டல் உலக அடிமைகளாக மாற்றி விடுகின்றன. நொடிக்கொரு முறை பளிச்சிடும் ஃபேஸ் புக் ஸ்டேட்டசும், டுவிட்டர் சிமிட்டலும், இமெயில் ஒளிரலும் தம்பதியரின் இனிமையான மாலைப் பொழுதுகளையும் அதன் பிறகான இன்பமான இரவுப் பொழுதுகளையும் தீர்த்துக் கொண்டிருக்கும் அபாயத்தை அவர்களே அறிவதில்லை. தொழில்நுட்ப முன்னேற்றங்களை ஒரு அளவுக்கு மேல் வாழ்க்கையில் குறுக்கிட அனுமதிக்க வேண்டாம். கணவனும் மனைவியும் ஒன்றாக இருக்கும் தருணங்களிலாவது இவற்றின் இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். எல்லா சமூக வலைத்தள தொடர்புகளையும் குறிப்பிட்ட சிலமணி நேரம் மட்டுமே அனுமதிக்க வேண்டும். இவற்றில் எல்லாம் மிச்சமாகும் நேரத்தை துணையுடன் நெருக்கமாக இருக்கச் செலவழிக்கலாம்.
நட்பு, பொழுதுபோக்கு
நட்பில்லாத வாழ்க்கையில் சுவாரஸ்யம் இருப்பதில்லை. ஆனாலும், அது அளவோடு இருக்கும்வரைதான் பாதுகாப்பு. ஒருநாள் வேலையில் விடுமுறை கிடைக்கிறது என வைத்துக் கொள்வோம். அந்த நாளை நண்பர்களுடன் சேர்ந்து செலவிடுவதைத்தான் பெரும்பாலானவர்கள் விரும்புகிறார்கள். அதேநாள் உங்கள் துணைக்கும் விடுமுறை என்றால், அப்போதும் இதே விதியைத்தான் பின்பற்றுவேன் என்பது நியாயமா? நட்பு, தனிப்பட்ட ஈடுபாடு, பிடித்த பொழுதுபோக்கு என எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, துணைக்கான நேரம் என்பதுதான் முதலில் நிற்க வேண்டும். ஒருநாள் விடுமுறையில்கூட தனக்கு நேரம் ஒதுக்காத துணையின் மீது கணவருக்கோ, மனைவிக்கோ காதல் எப்படி அதிகரிக்கும்?
இருவருக்குமான நெருக்கம் கூட சில யோசனைகள்..
· கட்டிப்பிடிப்பதையும் முத்தமிடுவதையும் தினசரி செய்யுங்கள்.
· பேசும்போது துணையின் கையை பிடித்துக் கொள்ளுங்கள்.
· துணையுடன் செலவிடுகிற நேரத்தைவிட வேறு எதுவும் முக்கியமில்லை என்பதை சொற்களாலும் செயல்களாலும் அடிக்கடி காட்டுங்கள்.
· அந்தரங்க உறவு என்பது அதுவாக நடக்கட்டும் என அலட்சியமாக இருக்காதீர்கள். அதற்கும் நேர அட்டவணை போட்டு முறையாகப் பின்பற்றுங்கள்.
அப்புறம் என்ன? வருடத்தில் ஒருநாள் அல்ல.. தினம் தினம் காதலர் தினம்தான்.

