பியூட்டி பார்லருக்கு போகாத மாதர்களே இல்லை; ஃபேஷியல் செய்யாத பெண்களே இல்லை என்றாகி விட்டது. ரசாயன, செயற்கை கிரீம்களைக் கொண்டு முகத்தை அழகுபடுத்திக் கொள்ளும் பெண்கள் போனசாக பக்கவிளைவையும் வாங்கி வந்துவிடுகின்றனர். இயற்கையாக கிடைக்கும் பொருட்களைக் கொண்டு ஃபேஷியல் செய்தால் உங்கள் அழகுக்கு அழகு சேர்க்கலாம். பக்கவிளைவுகளையும் தவிர்க்கலாம்.

செலவில்லா ஃபேஷியலைப் பப்பாளி பழம் தரும். பப்பாளிப் பழக் கூழை பத்து முதல் பதினைந்து நிமிடங்கள்வரை முகத்தில் பூசி வைத்து, பிறகு இளஞ்சூடான வெந்நீரில் முகத்தைக் கழுவினால் போதும். பழத்தில் உள்ள பப்பாயின் தோலில் உள்ள இறந்த செல்களை நீக்கி, முகத்தைப் பளிச்சிட வைக்கும். வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள் பப்பாளித் தோலின் அடிப்பகுதியைத் தோலில் பூசிவர, சருமம் நீரோட்டம் பெற்றுப் பொலிவடையும்.

வெள்ளரிக் காய்களை நறுக்கிக் கண்களில் வைத்துக் கட்டக் கண்கள் பிரகாசம் அடைவதோடு, கண் எரிச்சலும் மட்டுப்படும். கணினி முன்னால் அதிக நேரம் குடியிருக்கும் மென்பொருள் இளைஞர்கள் ‘கண்களின் மேல் வெள்ளரி’யை வைத்துக்கொள்வது சிறந்தது. அதேபோல, வெள்ளரிக்காயை அரைத்துப் பூசினால் தோலில் உள்ள இணைப்பு திசுக்கள் ஊட்டம் பெறுவதோடு, சூரிய வெப்பத்தால் உண்டாகும் எரிச்சலும் குறையும். கண்களின் கீழ் உள்ள கருவளையம் மறைய வெள்ளரிக்காய் வளையத்தை வைப்பதோடு, விளக்கெண்ணெயையும் தடவலாம். நல்ல தூக்கமும் தேவையான அளவு தண்ணீர் குடிப்பதும் கருவளையத்தைப் போக்குவதற்கான சிறந்த ஆயுதங்கள்.

முகத்தில் உள்ள சுருக்கங்களைக் குறைக்கவும் தடுக்கவும் தக்காளி ஃபேஷியல் உதவுகிறது. இதிலுள்ள ஆன்டி-ஆக்சிடன்ட் தோலுக்கு ஊட்டம் தருகிறது. வாரத்துக்கு இரண்டு முறை தக்காளியை மசித்துத் தயிரோடு சேர்த்துத் தடவிவந்தால், விரைவில் முகப்பருக்கள் நீங்கி முகத்தில் களிப்பு உண்டாகும்.

முகத்தில் கற்றாழைக் கூழைத் தடவிவந்தால் பருக்கள் வராமல் தடுக்கலாம். கிருமிநாசினி செய்கையும் வீக்கமுறுக்கி செய்கையும் கொண்ட கற்றாழை, தோலில் உண்டாகும் சுருக்கங்களைத் தடுக்கிறது. முகச்சவரம் செய்து முடித்த பிறகு ரசாயனம் கலந்த செயற்கை கிரீம்களுக்குப் பதிலாக, `தேங்காய் எண்ணெய் – கற்றாழைக் கலவையை’ தடவுவதால் சவரம் செய்யும்போது உண்டான சிறு சிராய்ப்புகள் விரைவாகக் குணமடையும்; முகமும் பிரகாசமடையும். எண்ணெய்ப் பசை சருமத்தைக் கொண்டவர்களுக்குக் கற்றாழை முகப்பூச்சு சிறந்த தேர்வு.

முகத்துக்கு பொலிவையும், குளிர்ச்சியையும் தருவதில் சந்தனத்தை அடித்துக் கொள்ள முடியாது. பாக்டீரியாவை அழிக்கும் தன்மையுடைய சந்தனத்தை நீருடன் கலந்து முகப்பருக்களில் தடவிவந்தால், விரைவில் குணம் கிடைக்கும். தோலுக்கு அடியில் உள்ள ரத்தத் தந்துகிகளில் செயல்புரிந்து தோலை மென்மையாக்குகிறது சந்தனம்.
நிறைய தண்ணீர் அருந்துங்கள். பச்சை காய்கறிகள், கொய்யா, நெல்லி, மாதுளை, அத்தி, சாத்துக்குடி, திராட்சை போன்ற பழவகைகளை உட்கொள்ளுங்கள். மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அகத்தில் ஆரோக்கியமும், முகத்தில் அழகும் ததும்பி வழியும்.
பாக்ஸ்

அழகுக் குறிப்புகள்

  • முல்தானிமட்டியை தயிரில் கலந்து பூச, சருமத் துவாரங்களில் உள்ள அழுக்கு நீங்கி முகம் புத்துணர்வு பெறும்.
  • தேன் சிறந்ததொரு ஒப்பனைப் பொருள். புண்ணாற்றும் செய்கையும் கிருமிகளை அழிக்கும் செய்கையும் இனிப்பான தேனுக்கு உண்டு.
  • அரிசி மாவை முகத்தில் தடவ `பளிச்’ வெண்மை முகத்துக்குக் கிடைக்கும்.
  • அவ்வப்போது தயிரைக் கொண்டு முகத்தில் லேசாக மசாஜ் செய்துவந்தால் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளின் தீவிரம் குறையும்.
  • நன்றாகக் கனிந்த வாழைப்பழத்தை மசித்துப் பாலோடு கலந்து முகத்தில் தடவி, அரை மணி நேரம் கழித்துக் கழுவினால் முகம் வசீகரம் பெறும்.