காலத்துக்கு ஏற்ப விளையும் காய்களையும் பழங்களையும் சாப்பிடுவதால், குறிப்பிட்ட காலநிலையை உபாதைகள் இன்றி நகர்த்தலாம். கோடை வெயிலின் தாக்குதலை எதிர்கொள்ள நாம் உண்ண வேண்டிய காய்கள், கீரைகள், பழங்களைப் பார்ப்போம்..
கோடை வெயிலை சமாளிக்க காய் வகைகளில் நீர்த்தன்மை நிறைந்த சுரை, புடல், பீர்க்கங்காய் போன்றவற்றை அடிக்கடி பயன்படுத்தலாம். இவை அனைத்துக்கும் குளிர்ச்சியை உண்டாக்கும் குணம் இருப்பதோடு, நீர்த்தன்மையை உடலில் தக்கவைக்கவும் உதவுகின்றன. இவற்றைக் கூட்டாகவோ, பொறியலாகவோ செய்து சாப்பிடும்போது, சிறிது மிளகுத் தூளும் சேர்த்துக்கொள்வதால், கபம் தலை தூக்காது.
சுரைக்காயில் சாறெடுத்தும் குடிக்கலாம். சுரையில் 95 சதவீதம் நீர்ச்சத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. நீர்க்காய்கள் ஜீரணத்தையும் விரைவுபடுத்துகின்றன. முள்ளங்கி, வெண்பூசணி, தயிர் சேர்த்த பச்சடி ஆகியவை அனலைத் தணிக்க உதவும்.
குளிர்ச்சி உண்டாக்குவது, சிறுநீர் எரிச்சலைக் குறைப்பது, நீர்வேட்கையை நிவர்த்தி செய்வது என வெயிலை எதிர்த்து முன்னின்று போராடும் குணம் வெள்ளரிக்கு உண்டு. இதன் விதைகளுக்குச் சிறுநீர் பெருக்கும் செய்கை இருப்பதால் கோடைக் காலத்தில் உண்டாகும் நீர்ச்சுருக்கு, சிறுநீர் எரிச்சல், கல்லடைப்பு போன்றவை வராமல் பாதுகாக்கும்.
கீரை வகைகள் எல்லாக் காலத்துக்கும் ஏற்றவை. வைட்டமின்கள், தாதுக்களின் நிரம்பிய கீரை வகைகள், உடலில் குளிர்ச்சியை நிலைபெறச் செய்யக்கூடியவை. அதிகமாக நாம் பயன்படுத்தத் தவறிய கொடிப் பசலைக்கீரை, வெயில் காலத்துக்கே உரிய சூப்பர் கீரை. பருப்பு சேர்த்துப் பசலை கீரையைக் கடைந்து சாப்பிட, அழல் தணிந்து சிறுநீர் எரிச்சல் மறையும். சிறுகீரை, பருப்புக்கீரை, பொன்னாங்கண்ணி, வெந்தயக்கீரை, தண்டுக்கீரை என வெயில் காலம் முழுவதும் கீரைகளை மாற்றி மாற்றி உணவில் சேர்த்துக்கொள்ளலாம். மலத்தை முழுமையாக வெளியேற்றுவதில் கீரைகளுக்கு முக்கியப் பங்குண்டு. கீரை வகைகளை இரவு நேரத்தில் தவிர்க்க வேண்டும்.
உடலின் நீர் உறிஞ்சப்படும் வெப்ப காலத்தில், தாகத்தை நிவர்த்தி செய்வதில் நீர்ச்சத்து நிறைந்த தர்ப்பூசணிக்குச் சிறப்பான இடமுண்டு. தர்ப்பூசணி உடலின் நீர்ச்சத்தை அதிகரித்து, தோல் பகுதிக்கும் நல்ல ஊட்டத்தை அளிக்கிறது. இதில் 92 சதவீதம் நீர்ச்சத்து, 3.2 சதவீதம் நார்ச்சத்து, இரும்புச் சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி உள்ளன. மற்ற காய்கள், பழங்களைவிட தர்ப்பூசணியில்தான் ‘லைகோபீன்கள்’ அதிகம். லைகோபீன்களுக்குப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றலும் உண்டு. வெயில் கால உபாதைகளைத் தடுப்பதோடு, நாம் எதிர்பார்க்கும் அளவைவிட அதிகப் பலன்களை தர்ப்பூசணி தரும்.
கோடைக் கால நோய்களைத் தடுக்க, அதிக எதிர்ப்பு சக்தியை அள்ளித் தரக்கூடியது நெல்லிக்கனி. இதை தேனில் ஊற வைத்து சாப்பிடலாம். நெல்லிக்காயோடு சேர்த்துத் தேனுக்கும் நோய் எதிர்ப்பு திறன் உண்டு. `தேன் நெல்லிக்காயை’ வீட்டிலேயே தயார் செய்வதால், வைட்டமின் `சி’ இல்லம் தேடி வரும். கோடை மழையால் ஏற்படும் வெப்பநிலை மாற்ற நோய்களைத் தடுக்கிறது நெல்லி.
கோடைக்கு ஏற்ற இயற்கையின் மற்றொரு கொடை என முலாம் பழத்தை சொல்லலாம். இதை சாறாகவும், நாட்டுச் சர்க்கரை சேர்த்த பண்டமாகவும் உண்ணலாம். தாகத்தைத் தணித்து, சோர்வைப் போக்கி, உடனடியாகப் புத்துணர்வைக் கொடுக்கும். பப்பாளி, கொய்யா, ஆப்பிள், சப்போட்டா, ஆரஞ்சு, திராட்சை, மாதுளை, வாழை போன்றவற்றை ரசனைக்கேற்ப `சாலட்களாக’ சாப்பிடலாம். நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மலத்தை எளிமையாக வெளியேற்ற இவை உதவும்.

