
தினை, குதிரைவாலி, சாமை, வரகு ஆகியவற்றை சமைக்கும் முன்பு 10 நிமிடங்கள் ஊறவைத்து விட்டு சமைக்கவும். சீக்கிரமாக வெந்துவிடுவதோடு சாதமும் மலர்ந்திருக்கும்.
ஒவ்வொரு தானியத்தை முழுதாக எடுத்து பயன்படுத்தும் முன்பு 4 முறையாவது கழுவி ஊறவைத்து பின்னர் சமைக்கலாம். வறுத்து செய்யும் முறைக்கு நன்கு துடைத்துவிட்டால் போதுமானது.
கம்பு, சோளம் நீரை அதிகம் உறிஞ்சும் தன்மை கொண்டது. எனவே இதில் சப்பாத்தி செய்ய மாவு பிசையும்போது தண்ணீர் அதிகமாக விட்டு தளர பிசைந்து வைக்க மாவு இறுகாமல் சப்பாத்தி மென்மையாக இருக்கும்.
கம்பு மாவு மற்றும் சோளமாவில் சப்பாத்தி செய்து வைக்கும்போது 2 நாளைக்கு வைத்து சாப்பிடலாம். அதை பாத்திரத்தில் சேமிக்கும்போது 2 அல்லது 3 பழத்துண்டுகள் (ஆப்பிள், கொய்யாக்காய்) போட்டு வைக்க திறக்கும்போது வாசனையாகவும், ரொட்டி அல்லது சப்பாத்தி மிருதுவாகவும் இருக்கும்.
சிறுதானிய சமையலில் உப்பின் அளவு மிக முக்கியம். அரிசி சமையலில் உபயோகிக்கும் உப்பைவிட சிறுதானிய சமையலில் உப்பின் அளவு குறைவாக இருப்பது சிறந்தது.
சிறுதானியத்தை பருப்பு வகை, தானிய வகை, பயறு வகை, காய்கறி கீரை வகை, பழ வகை அனைத்துடனும் சேர்த்து சமைத்து சாப்பிடலாம். கவனிக்க வேண்டியது சூடு/குளிர். அதிக சூட்டுத்தன்மை கொண்ட கம்புடன் குளிர்ச்சி தரும் காய்கறிகள் பயறு வகைகளைச் சேர்த்து சாப்பிட வேண்டும். உதாரணத்திற்கு கம்புடன் பச்சைப் பயறு சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.

