
பொதுவாக சிறுதானியங்களில் அளவுக்கு அதிகமான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அரிசியைவிட சிறுதானியங்கள் பலமடங்கு உயிர்ச்சத்தும் மாவுச்சத்தும் வைட்டமின் சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. சிறுதானிய உணவுகளைத் தொடர்ந்து நமது உணவு முறைகளில் சேர்த்து வருவதால், ஆரோக்கியம் காக்கப்படும் என்பது உறுதி.
நம் முன்னோர்களின் வாழ்வாதாரமாக இருந்தது சிறுதானியங்களே. வயலில் கடுமையாக வேலை செய்துவிட்டு வந்தாலும் கம்பங்களியையும், கேழ்வரகுக் கூழையுமே சமைத்து சாப்பிட்டு காலத்தை வென்று வாழ்ந்தவர்கள் அவர்கள். நோயும் அண்டாமல், சோர்வின்றி உச்சி வெயிலிலும் கதிரறுத்து மாலை தாழ்ந்து வீடு சேர்ந்தும் சோர்வில்லா வாழ்வு வாழ்ந்தவர்கள்.
தினை பாயாசம் செய்முறையைப் பார்ப்போம்..
தேவையானவை:
தினை மாவு & ஒரு கப்
வெல்லம் & அரை கப்
ஏலக்காய்த்தூள் & அரை டீஸ்பூன்
நெய் & 2 டீஸ்பூன்
முந்திரி திராட்சை & தலா ஒரு டீஸ்பூன்
பாசிப்பருப்பு & கால் கப்
செய்முறை:
வெல்லத்தைப் பொடித்து நீரில் கரைத்து அடுப்பில் வைக்கவும். முழுவதும் கரைந்தவுடன் வடிகட்டிக் கொள்ளவும். பாசிப்பருப்பை வேகவிடவும். பாதி வேகும்போது தினைமாவு சேர்த்துக் கலக்கி கிளறவும். தினைமாவு வெந்து வரும்போது, வெல்லத்தை கலந்து கொதி வந்தபிறகு ஏலக்காய்த்தூள் தூவி நெய்யில் வறுத்த முந்திரி திராட்சையை சேர்த்துக் கிளறி இறக்கி பரிமாறவும்.

