– டாக்டர் வ.செ.நடராஜன், முதியோர் நல மருத்துவர்

  •  60 முதல் 70 வயதிற்குள் உள்ள முதியவர்கள் ஆண்டிற்கு ஒருமுறை, 70 வயதைத்தாண்டிய முதியவர்கள் ஆறு மாதத்திற்கு ஒருமுறை என முழு உடல் பரிசோதனைகள் செய்து கொள்வதன் மூலம் திடீரென ஏற்படும் உடல் கோளாறில் இருந்து தப்பிக்கலாம்.
  •  சர்க்கரை வியாதி உள்ளவர்களின் ரத்தத்தில் திடீரென்று சர்க்கரையின் அளவு குறையும் நேரத்தில், மயக்கம் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாக முடியலாம். உடனே சாக்லெட், சர்க்கரை போன்றவற்றை உடனடியாக கொடுக்க வேண்டும் என்பதை, வீட்டில் உள்ளவர்களிடமோ அல்லது வேலைக்காரர்களிடமோ முன்கூட்டியே சொல்லி வைப்பது நல்லது.
  • நெஞ்சு வலி ஏற்பட்டால், ‘அய்சார்டில்’ 5 மி.கி. மாத்திரையை நாக்குக்கு அடியில் வைத்துக் கொண்டால் உடனே வலி குறைந்துவிடும். இது அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வரை உதவியாக இருக்கும்.
  • மருத்துவரை ஆலோசித்து இன்புளூயன்ஸா மற்றும் நிமோனியா நோய்களுக்கு தடுப்பு ஊசி போட்டுக் கொள்வது மிகவும் அவசியம்.
  • அவசர காலத்தில் உதவ பக்கத்து வீட்டுக்காரர், வேலைக்காரர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனரிடம் தங்கள் குடும்ப மருத்துவரின் கைப்பேசி எண் மற்றும் முகவரியைக் கொடுத்து வைப்பது நல்லது.
  • வீட்டிலேயே அவசர தொலைபேசி அழைப்புக்கான எண்கள் மற்றும் முதியோர்களுக்கான, ஹெல்ப் லைன் எண்ணான 1253 (சென்னைக்கு மட்டும்), 1800 180 1253 (மற்ற ஊர்களுக்கு), ஆம்புலன்ஸ் 108 போன்றவற்றை ஒரு பலகையில் எழுதி வைப்பது நல்லது.
  • தொடர்ந்து உடலை பரிசோதித்து வரும் மருத்துவரிடம் கலந்தாலோசித்து அவசர காலத்தில் தேவைப்படும் மருந்துகளை வாங்கி வைத்து, எந்த மருந்து எந்த நோய்க்கு பயன்படும் என தெளிவாக எழுதி வைத்தால் அவசர காலத்தில் உதவ முன்வருபவர்களுக்கு உதவியாக இருக்கும்.
  • அடிக்கடி ஏற்படும் சிறுசிறு தொல்லைகளுக்கு குடும்ப மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருந்துகளை வாங்கி கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும். உதாரணம்: தலைவலி, காய்ச்சல், சளி, வயிற்றுத் தொல்லைகள்.

வருமுன் காப்பதே புத்திசாலித்தனம். தனிமையில் வாழும் முதியவர்களுக்குரிய முன்னெச்சரிக்கையை கடைப்பிடித்து வருமுன் காப்பது புத்திசாலித்தனமாகும்.