டாக்டர் வி.எஸ்.நடராஜன், முதியோர் மருத்துவ சிறப்பு நிபுணர்
சக்திக்கு ஏற்ற உழைப்பும், உழைப்புக்கு ஏற்ற ஓய்வும் முதுமைக் காலத்தில் மிகவும் அவசியம். வேலை, வேலை என்று ஒரேயடியாக மூழ்கிவிட வேண்டாம். பின்னால், அது உடல் நலத்தையும் மனநலத்தையும் பாதிக்கும். முடிந்த அளவுக்கு சுற்றுலா செல்வதில் உங்கள் கவனத்தை திருப்புங்கள். காரணம், புதிய இடங்களையும், புதிய நபர்களையும் சந்திக்கும்போது மனதுக்குள் புத்துணர்ச்சி உண்டாகும்.

வயதான காலத்தில் நகை நட்டு மற்றும் ஆடைகளில் நாட்டமும் வேண்டாம், பணத்தையும் செலவழிக்க வேண்டாம். உங்களுக்கு அவசியமானவற்றையே அணியுங்கள்.
கைத்தடி: முதுமைக் காலத்தில் திடீரென்று மயக்கம் ஏற்பட்டோ அல்லது கால் தடுமாறியோ எந்நேரத்திலும் விழ வாய்ப்புண்டு. இதனால் எலும்பு முறிவும், தலையில் காயமும் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். இதை தவிர்க்க எளியமுறை, எப்போதும் முடிந்த அளவுக்கு கைத்தடியை உபயோகிப்பதே. மற்றவர்கள் கேலியாகப் பார்ப்பார்கள் என்ற எண்ணத்தை விட்டுவிடுங்கள். ஏனென்றால் கைத்தடி உங்களுக்கு உயிர் காக்கும் தோழன்.
காது கேட்கும் கருவி: முதுமையில் காது கேட்கும் திறன் பலருக்கு குறைய வாய்ப்புண்டு. அதனால் மற்றவர்களுடன் பேசிப் பழகுவதை தவிர்த்து தனிமையை நாடுகிறார்கள். தனிமை மனச்சோர்விற்கு வித்திடுகிறது. இவற்றை தவிர்க்க ஒரேவழி, காது கேட்கும் கருவியை எவ்வித கூச்சமும் இன்றி எப்போதும் அணிந்து கொண்டு மற்றவர்களுடன் தாராளமாக பழக வேண்டும்.
செயற்கைப் பல்: பற்களை இழக்கும்போது உண்ணும் உணவின் தரம் குறைகிறது. பேச்சு தெளிவாக இருக்காது. முகப்பொலிவும் குறைந்து விடும். இவற்றைத் தவிர்க்க ஒரே வழி செயற்கைப் பல்லைப் பொருத்திக் கொள்வதுதான். இதன்மூலம் உணவை ருசித்து உண்ணலாம். முகத்திலும் பொலிவு ஏற்படும்.
கண்ணாடி: வாழ்க்கையில் மற்றவரின் துணையின்றி வாழ கண் பார்வை மிக மிக அவசியம். தேவைப்பட்டால் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டு கண்ணாடியையும் அணிந்து கொண்டு வாழ்க்கையை அனுபவித்து மகிழுங்கள்.
குடும்பத்தோடு இணையுங்கள்
கூட்டுக்குடும்பம் சிதறுவதற்கு முதியோர்களின் நடைமுறைகளும் ஒரு காரணமாக இருக்கின்றன. இளைய தலைமுறையினரின் கஷ்டங்களை முதியோர் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். தன்னால் அந்தக் குடும்பத்துக்கு எவ்வாறு உதவ முடியும் என்று எண்ண வேண்டும். பேரப் பிள்ளையை பள்ளிக்கு அழைத்து செல்வது, அந்தக் குழந்தைக்கு கதை சொல்வது என்று தன்னால் முடிந்த அளவுக்கு குடும்பத்துக்கு உதவ வேண்டும். இவை குடும்பத்தில் நல்ல சூழ்நிலையை உருவாக்கும். மகன், மருமகள், பேரக் குழந்தைகளின் பிறந்த நாள் மற்றும் திருமண நாள்களில் சிறிய பரிசைக் கொடுத்து அவர்களின் அன்பை நிலைநாட்டலாம். குடும்ப பிரச்னைகளில் நீங்களாகவே தலையிட்டு அதை பெரிதுபடுத்த வேண்டாம். உங்களின் உதவி மற்றவர்களுக்கு எப்பொழுதும் கிடைக்கும் என்ற முறையில் குடும்பத்தில் நடந்து கொள்ளுங்கள்.
பணம் மிக அவசியம்
முதுமைக் காலத்தை நிம்மதியாக நகர்த்துவதற்கு பணம் மிக அவசியம். இன்றைய உலகில் உண்மையான அன்பிற்கோ, பாசத்திற்கோ மதிப்பு இல்லை. ஆனால், பணம் இருப்பவர்களைத்தான் இந்த உலகம் மதிக்கிறது. அன்பான உறவினர்களும் அக்கறையான நண்பர்களும் இல்லாதவர்கள் தனிமையில் தவிப்பார்கள் என சொல்லப்படுவதுண்டு. இந்த இரண்டும் முக்கியம்தான். ஆனால், முதுமையில் உறவினர்கள், நண்பர்களைவிட பணம் மிகவும் அவசியம். மற்ற எல்லாவற்றையும் விட அதை நம்பலாம். ஏனென்றால் பணம் பாதாளம் வரை பாயும்.
முதுமையில், மனிதர்கள் பக்கபலமாக இருப்பதைவிட, நாம் முதுமையை எதிர்நோக்கி இளமையில் சேமித்து வைக்கும் சேமிப்பே நமக்கு பக்கபலமாகும். நாம் சேமிக்கும் ஒரு பங்குத் தொகை, சம்பாதிக்கும் இருமடங்கு தொகைக்கு சமமாகும். சேமித்த பணம் கையில் இருந்தால், முதுமையில் நமக்கு உதவிட பணியாளர்களை நியமித்துக் கொள்ளலாம். அல்லது அந்தப் பணத்தை முதியோர் இல்லத்தில் கொடுத்து, ஓரளவு நிம்மதியாக வாழலாம். பணம் கையில் இருந்தால் உற்றார், உறவினர்கள் ஓரளவிற்கு முகம் சுழிக்காமல் நமக்கு உதவ முன் வருவார்கள்.
பாக்ஸ்
தனக்கு மிஞ்சித்தான் தானம்
சொல்வதற்கு கஷ்டமாக இருந்தாலும், இப்போது நிறையப் பேர் பணத்தை வைத்துதான் உறவுகளை அளவிடுகிறார்கள். முதியவர்கள் தங்கள் சொத்துக்களை முழுமையாகத் தம் வாரிசுகளுக்கு கொடுத்து விடக்கூடாது. சொத்துக்கள் கைமாறியவுடன் வாரிசுகளின் மனமும் மாறிய வாழ்க்கை உதாரணங்கள் இங்கே நிறைய உண்டு. பின்பு முதியவர்கள் இருப்பது நடுத்தெரு அல்லது முதியோர் இல்லம்தான். தனக்கு என்று போதுமான அளவு வைத்துக் கொண்டுதான் பிறருக்கு உதவி செய்ய வேண்டும்.

