குடும்பம் என்றால் சண்டை, சச்சரவு இருக்கத்தான் செய்யும். சண்டை நமக்கு புதிதல்ல. நினைவு தெரிந்த நாளில் இருந்து குடும்பத்தில் யாருடனாவது சண்டை போட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். நமக்குப் பிடிக்காத யாரேனும் நம்மை ஏதாவது சொன்னால் உடனே கொந்தளித்து, அவரைப் பழிக்குப்பழி பேசித் தீர்க்க சரியான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருப்போம்.

அப்படியொரு நேரம் வரும்போது கண்டபடி பேசி, பழியைத் தீர்த்துவிடுவோம். இந்த வழியை சிறுவயதில் இருந்தே கடைப்பிடித்து பழக்கப்பட்டுவிட்ட நம்மில் பலர் திருமணத்திற்கு பிறகும் அதே வழிமுறையைத்தான் தொடர்கிறோம். சண்டை போட்டே பழக்கப்பட்ட சிலர், நாளடைவில் சண்டைக்கே அடிமையாகி விடுகிறார்கள். தினமும் யாரிடமாவது சண்டை போடாமல் இருக்க முடியாது. வீண் வம்பிழுத்தாவது சண்டை போட்டு விடுவார்கள்.

குடும்ப வாழ்க்கையில் கணவனும்- மனைவியும் கருத்து வேறுபாடு, விவாதம், சண்டை இல்லாமல் வாழ முடியாது. மனமொத்த தம்பதி என்று யாரும் இருக்க முடியாது. அப்படி யாராவது சொன்னால், அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று அர்த்தம். இல்லையெனில் அவர்கள் இல்லறத்திலேயே துறவறம் மேற்கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம். சண்டை போடலாம். ஆனால், அது சந்தோஷத்திற்காக இருக்க வேண்டும். ஊடலுக்குப் பின் கூடல் என்பார்களே.. அது மாதிரி.

கணவன் & மனைவிக்குள் சண்டைபோடும்போது இருவருமே உணர்ச்சி வசப்பட்டு விடக்கூடாது. அப்படி உணர்ச்சிவசப்பட்டால் வார்த்தைகள் தடித்து வம்பில்தான் கொண்டு போய்விடும். சண்டையில் சிங்காரம் பார்க்க முடியுமா என்று கேட்கிறீர்களா? கணவன் & மனைவி சண்டையில் சிங்காரம் பார்த்துத்தான் ஆக வேண்டும். காலம் முழுக்க நீங்கள் இணைந்து வாழப் போகிறீர்கள் என்பதால். வெளியாள் என்ற கண்டபடி பேசிவிட்டு அவர் நட்பையோ அல்லது உறவையோ அத்தோடு முடித்துக் கொண்டு விடலாம். ஆனால், குடும்ப வாழ்க்கை அப்படியல்லவே. தரமான வார்த்தைகளால் சண்டைபோடும்போது ஒருவர் மீது இன்னொருவருக்கு இருக்கும் கோபதாபங்கள் எல்லாம் வார்த்தைகளில் வெளியேறி, மனம் இலகுவாகிவிடும். பின்பு கணவன் & மனைவி இருவருமே சமாதானமாகி விடுவீர்கள். ‘‘ உன் மூஞ்சிய பேத்துடுவேன்’’ & இதையே ‘‘உன் முகத்தை பெயர்த்து விடுவேன்’’ என்று சொல்லிப் பாருங்கள். சண்டைப் போடும் இருவருக்குமே சிரிப்பு வந்துவிடும்.

ஆனால், யதார்த்தத்தில் 98 சதவீத தம்பதிகளுக்கு சரியான முறையில் சண்டை போடத் தெரிவதில்லை. தன்னிலை மறந்து கண்டபடி வார்த்தைகளை பிரயோகித்து விடுகிறார்கள். அது ஆறாத ரணமாகி விடுகிறது. ‘தீயினால் சுட்ட புண் உள்ளாறும், ஆறாதே நாவினால் சுட்ட வடு’ என்று சும்மாவா சொன்னார் வள்ளுவர்.

சண்டையின்போது தம்பதிகள் உணர்ச்சிவசப்படக் கூடாது. நிதானமாக நீங்கள் சொல்ல நினைக்கிற விஷயங்களை துணையை குற்றம்சாட்டாமல் சொல்லுங்கள். சண்டையின் அனைத்து அம்சங்களுக்கும் துணைதான் காரணம் என்று முடிவு செய்துவிட்டு கோபங்களை கொட்டவேண்டாம். அப்படி யாராவது ஒருவரை முடிவு செய்துவிட்டு சண்டைபோட்டால், அந்த சண்டை இடியாப்ப சிக்கலையே ஏற்படுத்தம். எப்படிப்பட்ட நெருக்கடியான நேரத்திலும் அசிங்கமான, ஆபாசமான வார்த்தைகளைப் பிரயோகித்துவிடவேண்டாம்.

சண்டை தொடங்கும்போது அந்த சூழலை கருத்தில் கொள்ளுங்கள். நிதானமில்லாமல் உணர்ச்சி வசப்பட்டு விடுவோம் என்று நினைத்தால், அந்த இடத்தைவிட்டு நகர்ந்து விடுங்கள். உங்கள் உணர்ச்சிக் கொந்தளிப்பு அடங்கும்வரை காத்திருங்கள். அமைதியான பிறகு பிரச்னையைப் பற்றி பேசுங்கள். ஆனால், தம்பதியர் பலருக்கும் பிரச்சினையை ஆறப்போட மனதே வராது. உடனுக்குடன் உண்டு இல்லை என ஒரு கை பார்த்தால் தான் அடுத்த வேலையே ஓடும். இதனால் உங்கள் நிம்மதி, தூக்கம் என எல்லாம் பறிபோவதுடன், வாக்குவாதத்தில் உங்கள் உறவுகளும் நடத்தையும் கூட கொச்சைப்படுத்திப் பேசப்படலாம். இதுதான் சண்டையின் மிக மோசமான கட்டமாகும்.

எதற்கெடுத்தாலும் சண்டை போடுவது என்ற மன நிலையில் இருந்து மாறுங்கள். அது உங்களை மட்டுமல்ல, உங்கள் அடுத்த தலைமுறையையும் பாதிக்கும். பிரச்னை அதிகரித்து விவாகரத்து செய்து கொண்டவர்களை ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் ஒன்றாக வாழ்ந்த காலத்தில் பெரும்பகுதியை வாக்குவாதம் செய்தே கழித்திருப்பார்கள். சாதாரண விஷயத்தைக்கூட பூதாகரமாக்கி ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டியபடியே வாழ்ந்திருப்பார்கள்.

சண்டை ஆரம்பித்ததும் பதிலுக்கு பதில் என்ற மனோபாவத்தில் இருக்கவேண்டாம். அந்த மனோபாவத்தில் இருந்தால் வார்த்தைப்போர் வெடித்து தீர்க்க முடியாத நெருக்கடியில் கொண்டுபோய்விட்டுவிடும். சண்டையை மனைவி ஆரம்பித்தால், அவரது மனோநிலையில் இருந்து அதை பாருங்கள். அவர் தரப்பு நியாயம், கோபம் என எல்லாவற்றையும் அவரது இடத்தில் இருந்து யோசித்தால், சண்டைக்கான பின்னணி புரியும். சண்டை உடனே நின்று சமாதானமாகிவிடவும் வாய்ப்பு உண்டு.

நல்ல சண்டை என்பது எப்போதாவது தான் நடக்கும். அது உறவுகளைக் கொச்சைப்படுத்துவதோ, அவமானப்படுத்துவதோ செய்யாது. அது பிரச்சினைகளை தீர்க்கப் பயன்படும். நல்ல சண்டையில் பக்குவம் இருக்கும். அதில் உங்கள் உணர்வுகளை முன்னிறுத்திப் பேசுவீர்கள். அதுவே மோசமான சண்டை என்றால், ‘நடந்த எல்லாவற்றுக்கும் நீதானே காரணம். உன்னால்தான் எனக்கு இத்தனை பிரச்சினை…நீ மோசம்…உன் போக்கே சரியில்லை’ என துணையின் மீது குற்றங்களை அடுக்குவீர்கள். அது பிரச்சினையை கூடுதலாக்கிவிடும்.

நல்ல சண்டையில் சமாதானம் கிடைக்கும். அழுகை இருக்காது. நியாயம் இருக்கும். மோசமான சண்டை மோசமான விளைவுகளைத்தான் உருவாக்கும். கணவன்- மனைவி இருவரும் முடிந்த அளவுக்கு சண்டைகளில் இருந்து விலகி இருக்கப் பாருங்கள். அடிக்கடி எந்த விஷயங்களுக்குச் சண்டைகள் வருகின்றன என யோசியுங்கள். கோபமில்லாமல் அவைகளை பற்றி பேசி திருத்தப்பாருங்கள். சண்டை போட்டாலும், அதை மறந்துவிட்டு சமாதானம் பேச முன்வாருங்கள். ஒருவர் மீது ஒருவர் அன்பை போட்டிப்போட்டு வழங்க சண்டை போடுங்கள். அது நல்ல சண்டை. கோபம் வராத மனிதர்களே இல்லை. அப்படி கோபப்படாவிட்டால் அவர்கள் மனிதர்களே இல்லை. எந்த சண்டையாக இருந்தாலும், அது முடிவுக்கு வந்தவுடன், அதை அப்படியே தூக்கிப் போட்டுவிடுங்கள். அதை மனதில் தூக்கி சுமந்து கொண்டே இருந்தால் துக்கம்தான் மனதில் எப்போதும் மனதில் சூழ்ந்திருக்கும்.