இயற்கை நமக்கு தந்துள்ள கொடைகள் ஏராளம். அதில் ஒன்று தனது பெயரிலிலேயே இனிப்பைக் கொண்டிருக்கும் அதிமதுரம். பித்த, கப நோய்களுக்கான கசப்பில்லா இன்சுவை மருந்து.
அதிமதுரத்தை நீரிலிட்டுக் கொதிக்கவைத்து, கொஞ்சம் பனங்கற்கண்டு, மிளகுத் தூள் சேர்த்து காலையில் பானமாகப் பருக, குரல் இனிமையாகும். நன்னாரியைத் தண்ணீரில் ஊறவைத்து சர்பத் தயாரிக்கும்போது, அதிமதுர வேரையும் சேர்த்துக் கொள்ள பலன்கள் இரண்டு மடங்காகும்.
நீரிழிவு நோயாளிகள், செயற்கை இனிப்பூட்டிகளுக்குப் பதிலாக, இயற்கை இனிப்பூட்டியான அதிமதுரத்தைப் பயன்படுத்தலாம். சைனஸ் பிரச்சனை, ஒற்றைத் தலைவலி, தலைபாரம் ஏற்படும்போது சோம்பு கொதிக்க வைத்த நீரில், அதிமதுரத் தூளைக் கலந்து பருகலாம்.

அதிமதுரத்தின் சாரங்கள் வயிற்று மென்படலத்தின் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, வயிற்றுப் புண்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறதுவு. இரைப்பு நோயாளிகளின் சுருங்கியிருக்கும் மூச்சுக் குழாய்த் தசைகளை விரிவடையச் செய்யும் செய்கை இதன் வேதிப்பொருளுக்கு இருக்கிறது.
அதிமதுரம், அக்கரகாரம், சுக்கு, மிளகு, திப்பிலி, இலவங்கம் ஆகியவற்றைப் பொடித்து நாட்டுச் சர்க்கரை, தேன் கலந்து செய்யப்படும் பானம், உங்கள் தொண்டை ‘கிச் கிச்’ மற்றும் கரகரப்பை போக்கும்.

புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்கள், அந்த உணர்வை மறக்கடிக்க, சிறிது அதிமதுரத் துண்டை மெல்லலாம். வறட்டு இருமல் இடைவிடாமல் ஒலி எழுப்பிக் கொண்டிருக்கும்போது, அதிமதுரம், மிளகு, கடுக்காய்த் தோல் ஆகியவற்றைப் பொடி செய்து, சிறிதளவு எடுத்து வாயில் அடக்கிக்கொள்ள வறட்சி காணாமல் போகும்.

அதிமதுரப் பால், அதிமதுரச் சூரணம் ஆகியவை சித்த மருத்துவத்தில் முக்கியமான மருந்துகள். கசப்புச் சுவைமிக்கக் கூட்டு மருந்துகளில் இனிப்பைக் கொடுக்கவும், சுவை தத்துவ அடிப்படையிலும், அதிமதுரம் சேர்க்கப்படுகிறது. கொதிக்கும் நீரில் இதன் வேரை ஐந்து நிமிடம் ஊறவைத்து, அதில் எலுமிச்சைச் சாறு அல்லது தேன் கலந்து சுவைமிக்க பானத்தைப் பருகலாம். வேர் ஊறிய நீரில் வாய்க் கொப்பளிக்க, வாய்ப்புண் மறையும். அதிமதுரம் உடல் ஆரோக்கியம் தரும் இனிப்பு மருந்து.