வெயில் காலத்தில் உண்டாகும் நோய்களில் சில, வைரஸ் கிருமிகளால் எளிதாக பரவுகின்றன. உலகெங்கும் ஒரு காலத்தில் இருந்த பயங்கரமான பெரியம்மை நோய், தற்போது முழுவதுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. இதைவிட, சற்று வீரியம் குறைந்த வைசூரி என்னும் சின்னம்மை நோய், பொதுவாக வெயில் காலத்திலேயே அதிகம் காணப்படுகிறது.

பொதுவாக 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையே சின்னம்மை நோய் அதிகம் தாக்குகிறது. பெரியவர்களுக்கும் சிலநேரம் இந்நோய் வருவதற்கு வாய்ப்புண்டு. இந்நோய் காய்ச்சல், தலைவலி, உடம்பு வலி, அசதி போன்ற அறிகுறிகளுடன் துவங்கி உடலெங்கும் தோலில் சிறு சிறு கொப்புளங்கள் தோன்றி, நீர் கோத்துப் பிடித்துக் காய்ந்து விழுவதோடு முடிந்து விடும். இதற்கு 3 வாரங்கள் ஆகும். 14 முதல் 21 தினங்களில், இந்நோய் தானாகவே முழுவதும் குணமாகி விடும்.

சின்னம்மை நோய்க்கு ‘ஏசைக்ளோவிர்’ எனும் நுண்ணுயிர்க் கொல்லி மாத்திரை கொடுக்கப்படுகிறது. சின்னம்மை நோயைப் போலவே தட்டம்மை எனும் மணல்வாரி அம்மை நோயும், வெயில் காலத்தில் அதிகமாகப் பரவுகிறது. இது ‘பாரா மிக்ஸோ வைரஸ்’ என்னும் நுண்ணுயிர் தாக்குதலால் வருகிறது. சிலநேரம், மழைக்காலங்களில் கூட இந்நோய், குறிப்பிட்ட இடத்தில் மொத்தமாக தாக்குகின்றது.

பிறந்த ஆறு மாதங்கள் வரை, தாயிடம் உள்ள எதிர்ப்பு சக்தி, குழந்தையின் ரத்தத்தில் கலந்து இருப்பதால், இந்நோய் குழந்தைகளை தாக்குவதில்லை. ஆறு மாதங்களுக்குப் பிறகு 10 வயது வரை எல்லாக் குழந்தைகளையும், இந்நோய் தாக்க முயற்சிக்கிறது. தடுப்பூசி போட்டுக் கொண்டால் ஆபத்தில்லை.

தட்டம்மை நோயின் ஆரம்ப அறிகுறி, சாதாரண ஜலதோஷத்திற்கான அறிகுறி போலவே இருக்கும். காய்ச்சல், தும்மல், மூக்கில் நீர் ஒழுகல், கண்கள் சிவத்தல், இருமல், தொண்டை கட்டுதல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும். மூன்று நான்கு தினங்களில் வாய்க்குள் வெண்புள்ளிகள் தோன்றி மறைந்து, நெற்றி, காதின் பின்புறம் ஆகிய பகுதிகளில் தோலில் சிறு தடிப்புகள் தோன்றி, அவை பரவி, கடைசியில், உடம்பு முழுவதும் வேர்க்குரு போல தோற்றமளிக்கும். தோலில் தடிப்பும், அரிப்பும் மறையும்போது, காய்ச்சலும் குறைந்து விடும்.

தட்டம்மை நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தையைப் 10 நாட்களுக்கு பள்ளிக்கு அனுப்பக் கூடாது. நோய் பரவாமல் தடுக்க கூடுமானவரை, தனி அறையில் படுக்க வைத்துப் பிற குழந்தைகளிடம் இருந்து, பிரித்துவிட வேண்டும். சின்னம்மை, தட்டம்மை தவிர வெயில் காலத்தில் வரக்கூடிய மற்றொரு அம்மை, ‘பொன்னுக்கு வீங்கி’ என்று சொல்லப்படும் ‘அம்மைக்கட்டு’ நோய். இதுவும் ‘பாராமிக்ஸோ வைரஸ்’ எனும் நுண்ணுயிர்க் கிருமியால் வருகிறது. இந்நோய் பள்ளிக்கு செல்லும் வயதுடைய குழந்தைகளையே பெரிதும் பாதிக்கிறது.

முகத்தில் அம்மைக்கட்டு தென்படுவதற்கு முன்பாக காய்ச்சல், அசதி, உடம்பு வலி, தாடை வலி, வாய் நாற்றம் ஆகிய அறிகுறிகள் தோன்றும். முதலில் ஒருபக்கமும், அடுத்து மற்றொரு பக்கமும் கன்னத்திலுள்ள உமிழ்நீர் சுரப்பி வீங்கி விடும். வாலிபர்களுக்கு அம்மைக்கட்டு நோய் வந்தால், நான்கில் ஒருவருக்கு விரை அழற்சி உண்டாகலாம். இரண்டு விரைகளிலும் அழற்சி ஏற்பட்டால், மலட்டுத்தன்மை ஏற்படலாம்.

வயிற்று வலி, காய்ச்சல் உண்டாகி, உயிருக்கு ஆபத்து நேரிடலாம். அம்மைக் கட்டின் பாதிப்பு, மூளைக்குச் சென்று தலைவலி, வாந்தி, முகவாதம், ஆழ்ந்த மயக்கம் ஏற்படுத்தி, கடைசியில் உயிருக்கு ஆபத்தாக முடியலாம். எனவே கவனக்குறைவாக இருந்து விடாமல் சிகிச்சை பெற வேண்டும்.

அம்மைக்கட்டு நோய் தாக்கியிருக்கும்போது, உமிழ்நீர் சரிவர சுரக்காமல், வாய் உலர்ந்து இருக்கும். துர்நாற்றம் வீசும். ஆகவே, பற்களையும், வாயையும் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். ‘போவிடோன்’ வாய்க் கொப்பளிக்கும் மருந்தை, தண்ணீரில் கலந்து, அடிக்கடி வாயை கொப்பளிக்க வேண்டும் நிறைய திரவ உணவை உட்கொள்ள வேண்டும். பதினைந்து தினங்களுக்குள் வீக்கம் குறைந்து, முகம் பழைய நிலைக்கு மாறிவிடும்.

தட்டம்மை, ரூபெல்லா, அம்மைக்கட்டு ஆகிய மூன்று வைரஸ் நோய்களையும் ஒரே ஒரு தடுப்பூசி மூலம் வராமல் தடுத்து விடலாம். இந்த ஊசியை 9 மாதம் முதல் 15 மாதத்திற்குள் போடுவது அவசியம். சின்னம்மை தடுப்பூசி இரண்டுமுறை போடப்பட வேண்டும். முதல் ஊசிக்குப் பிறகு இரண்டு மாதத்திற்குப் பின் இரண்டாவது ஊசி போட வேண்டும். இதன்மூலம் வாழ்நாள் முழுவதும் சின்னம்மை நோய் வராமல் தடுத்து விடலாம்.