
சிறியவர் தொடங்கி பெரியவர் வரை அவரவருக்கு ஏற்றபடி உடற்பயிற்சி செய்வது ஆரோக்கிய வாழ்வுக்கு கட்டாயமாகும். உடலை கட்டுமஸ்தாக வைத்துக் கொள்ள இளைஞர்கள் ஜிம்முக்கு செல்கிறார்கள். சர்க்கரையாளர்கள் நடையாய் நடையாய் நடந்து நடைப்பயிற்சி மேற்கொள்கிறார்கள். உடற்பயிற்சி மட்டுமே ஒருவருக்கு போதுமா என்றால் இல்லை. உடற்பயிற்சி, உடல் தசைகளை மட்டுமே வலுப்படுத்தும். உடலின் உள்ளுறுப்புகளை வலுப்படுத்தவோ உறுப்புகளின் செயல் திறனைக் கூட்டவோ உடற்பயிற்சியால் முடியாது. உடற்பயிற்சியால் முடியாததை யோகாசனம் செய்யும். இன்னும் சொல்லப் போனால் உடல், உள்ளுறுப்புகளை மட்டுமல்ல.. மனதையும் யோகா வலிமைப்படுத்துகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப் படுகிறது. இதற்கு பிரதான காரணமாக இருந்தவர் பிரதமர் நரேந்திர மோடி.
சமூகம் சிறக்க தனிமனிதர்களின் நலன் முக்கியம். உடல் உழைப்பு குறைந்து வரும் இந்த காலகட்டத்தில், ஆரோக்கியம் பேண ஒவ்வொருவரும் அக்கறை செலுத்த வேண்டியது அவசியமாகிறது. உடல் பருமன், சர்க்கரை, ரத்த அழுத்தம், ஆஸ்துமா உள்ளிட்டவை மனிதர்களின் உடல் நலத்தை சீர்குலைத்து வருகின்றன. இவற்றையெல்லாம்விட மன அழுத்தம் சிறியவர் முதல் பெரியவர் வரை பாடாய்படுத்துகிறது. இவற்றில் இருந்து மீண்டு வர யோகா ஒரு வரப்பிரசாதம்.
நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என பஞ்சபூதங்களால் ஆனது இந்த உலகம். பஞ்சபூதங்களால் உருவானவர்கள்தான் நாம். இவற்றின் அளவு மிகுந்தோ, குறைந்தோ விடும்போது நோய் நம்மைத் தாக்குகிறது. இதைச் சீராக்கி கொள்ளும்போது உடல்நலன் மேம்படுகிறது.
யோகா என்றவுடன் கடினமான பயிற்சிகள் என்று பலர் கருதுகின்றனர். ஆனால், அப்படியில்லை. உடல் தளர்ந்தவர்கள்கூட, அவர்களுக்கு ஏற்ற வகையில் எளிதான பயிற்சிகளை மேற்கொள்ள முடியும்.
கண், காது, மூக்கு, தொடு உணர்வு, நாக்கு ஆகிய ஐம்புலன்களால் மனம் சிதறிப் போகாமல் ஒருநிலைப்படுத்துவதே யோகா. ஆசனம் என்பது உடல், உள்ளுறுப்புகள் நன்கு செயல் புரியவும் வலுவடையவும் மேற்கொள்ளப்படும் செய்முறை.
பொதுவாக உடலை நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் யோகாசனம் செய்யும்போதும், மருத்துவர் அறிவுரைப்படி குறிப்பிட்ட நோய் சார்ந்த யோகாசனம் செய்யும்போதும் என்ன நடக்கிறது என்று பார்த்தால், பிராண வாயு உடலின் அனைத்துப் பகுதிகளுக்கோ குறிப்பிட்ட பகுதிக்கோ நல்ல முறையில் செல்கிறது. அப்போது உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். அதன் காரணமாகத் திசுக்களுக்குச் சீரான ஊட்டம் கிடைக்கும். அதனால் உடல் சார்ந்த பிரச்சினைகளும் குறையும் அல்லது நீங்கும். அதேபோல திசுக்களில் உருவாகும், செல்களைப் பாதித்து நோயை ஏற்படுத்தும் ஃபிரீ ராடிக்கல்ஸ்சை பெருமளவில் குறைக்கிறது.
பலர், யோகாசனத்தைச் செய்ய விரும்பி ஆசனம் செய்ய வேண்டிய முறையைப் பற்றியோ அது சார்ந்த விழிப்புணர்வோ இல்லாமல், புத்தகங்களைப் படித்தோ இணையதளத்தைப் பார்த்தோ சுயமாகச் செய்கின்றனர். அவ்வாறு செய்வது மிக மிகத் தவறு. இது பல்வேறு பின்விளைவுகளை உருவாக்கக்கூடும். எனவே வணிக ரீதியாக யோகா சொல்லிக் கொடுப்பவரை விட்டுவிட்டு நல்ல யோகா ஆசிரியரைத் தேடிப் பிடியுங்கள். அவரின் மேற்பார்வையில் யோகாசனத்தை கற்றுக் கொள்ளுங்கள். உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும்.
யோகாவின் பலன்கள்:
- உடலின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கிறது.
- உடலில் உள்ள இறுக்கமானப் பகுதிகள் தளர்வடைகின்றன.
- இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
- ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
- மனதில் அமைதி ஏற்படுத்துகிறது.
- செரிமானத்தை சீர் செய்கிறது.
- ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.
- கவனம் கூடுதலாகிறது.
- உடலில் சக்தி அதிகரிக்கிறது.
- எடை குறைகிறது.
- நுரையீரல் நன்றாக செயல்படத் துவங்குகிறது.
- பயத்தை குறைக்கிறது. தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது.
- மூட்டுக்களை நல்ல முறையில் செயல்பட வைக்கிறது.
- உடலுக்கு நல்ல ஓய்வு கிடைக்கிறது.
- நல்ல எண்ணங்கள் அதிகமாகும். மகிழ்ச்சி ததும்பும்.
- நாளமில்லா சுரப்பிகளை சீராக செயல்பட வைக்கிறது.
- நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது.
- மன உடல் ஒருங்கிணைப்பை நன்றாகச் செய்கிறது.
- தேவையற்ற கழிவுகளை அகற்றுகிறது.
- உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
- நாடித்துடிப்பை சீராக்குகிறது.
- விழிப்புணர்வு கூடுதலாகிறது.
- புலன்களின் உணர்வுகள் நுட்பமாகின்றன.

