
அந்த ‘மூன்று’ நாட்களில் பெண்கள் விதவிதமான உபாதைகளுக்கு உள்ளாகின்றனர். சிலருக்கு அதிக உதிரப்போக்கு, சிலருக்கு அதி பயங்கர வயிற்று வலி, இன்னும் சிலருக்கு மாதவிடாயுடன் அலுவலகம் செல்லும் அவதி. இன்னும் சிலருக்கு நாப்கின்களால் ஏற்படும் அலர்ஜி என பிரச்னைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
நாம் பயன்படுத்தும் நாப்கின்கள் அவ்வளவு எளிதாக மக்கிவிடுவதில்லை. இதனால், நிலம் மாசுபடுகிறது. இதைவிட கொடுமை, நாம் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களை சக மனிதர்களாகிய துப்புரவுத் தொழிலாளர்கள் அப்புறப்படுத்துவது. மாதவிடாய் ஒவ்வொரு மாதமும் வரத்தான் போகிறது ஆனால் அதை சற்று எளிமையாகக் கடந்து செல்ல உதவும் ஒரு உபகரணம்தான் மாதவிடாய் கப் (மென்ஸ்சுரல் கப்). இதை பயன்படுத்துவதால் பெண்களுக்கு சில சவுகரியங்கள் இருக்கின்றன. அவர்கள் தங்களையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள முடியும். கடந்த ஆண்டு (1918) கேரளாவில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்ட போது, மீட்கப்பட்ட மக்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அப்போது, பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் நாப்கின்களுக்கு பதிலாக மென்ஸ்சுரல் கப்களை அம்மாநில அரசு வழங்கியது. அதை பயன்படுத்திய பெண்கள் பலரும் சுலபமாகவும் சவுகரியமாகவும் இருப்பதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், 5 ஆயிரம் மென்சுரல் கப்களை இலவசமாக வழங்கும் திட்டத்தை ஆலப்புழையில் அமைச்சர் தாமஸ் தொடங்கி வைத்தார். ஆலப்புழை திருமணப்பதிவாளர் அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் இந்த கப்கள் பெண்களுக்கு வழங்கப்படுகிறது. இதை பயன்படுத்தும் விதம் குறித்தும் விளக்கமாக சொல்லித் தரப்படுகிறது.
இது குறித்து ஆலப்புழை நகராட்சி செயலாளர் எஸ்.ஜஹாங்கீர் கூறியதாவது: இதனை சரியான முறையில் பொருத்திப் பழகிக் கொண்டால் எந்த பயமும் இல்லை. சாதாரண நீரில் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை சுத்தம் செய்து கொள்ளலாம். பிறகு சுடுநீரில் கழுவி அடுத்த முறை பயன்படுத்திக் கொள்ளலாம். பக்க விளைவுகள் இல்லாதது. மென்ஸ்சுரல் கப்களை 5 அல்லது 6 ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம். இதன் மூலம் 780 நாப்கின்களின் பயன்பாடு குறையும். இந்த 5 ஆயிரம் கப்களை ஆயிரம் பெண்கள் பயன்படுத்தும்போது, சுமார் ரூ.40 லட்சம் வரை சேமிக்கப்படும். கழிவுப் பொருட்களும் பெருமளவு குறையும்.
இந்துஸ்தான் லேட்டக்ஸ் நிறுவனம் இந்த கப்களை தயாரித்து கொடுத்தது. கோல் இந்தியா நிறுவனம் தன் சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் இதற்கான செலவை ஏற்றுக் கொண்டது. இந்த கப்கள் 1930&களில் அமெரிக்காவில் முதலில் பயன்பாட்டுக்கு வந்தது. சானிடரி நாப்கின் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் வியாபாரம் பாதிக்கப்படும் என்பதால் இந்த கப்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. இந்தியாவில் இதனை பயன்படுத்தும் பெண்கள் பெரும்பாலும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களையே சார்ந்துள்ளனர் என்றார்.
நாப்கின்கள்.. சில தகவல்கள்
இந்தியாவில் 12 சதவீதப் பெண்கள் மட்டுமே சானிடரி நாப்கின்களை பயன்படுத்துகின்றனர். பயன்படுத்தாத 88 சதவீதப் பெண்களில், 23 சதவீதம் பெண்களால் அதை வாங்க முடிவதில்லை. 65 சதவீதப் பெண்களுக்கு அதை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாததால் அவற்றை வாங்குவதில்லை என்கின்றன ஆய்வு முடிவுகள்.
நாப்கின்களை உபயோகப்படுத்தும் பெண்கள் கீழ்கண்ட தொந்தரவுகளுக்கு ஆளாக நேரிடுகிறது. மாதவிடாய் காலங்களில் அதிகப்படியான உதிரப்போக்கு. உதிரப்போக்கு அதிக நாட்கள் நீடித்திருத்தல். ஒரே மாதத்தில் 2,3 முறை உதிரப்போக்கு. உடலுறவுக்குப் பின் உதிரப்போக்கு. மாதவிடாய் கால வயிற்று வலி. பிறப்புறுப்புகளில் அரிப்பு மற்றும் புண் உருவாதல். மஞ்சள் மற்றும் துர்நாற்றத்துடன் வெள்ளைப்படுதல். ஒழுங்கற்ற மாதவிடாய் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். விளம்பரங்கள் உங்களை வாங்கச் சொல்லி உசுப்பேத்தலாம். நீங்கள்தான் உஷாராக இருந்து நல்ல சானிடரி நாப்கின்களை வாங்க வேண்டும்.

