இயற்கை அன்னையின் கொடையான மோருக்கு ஈடுகொடுக்க எந்த பானங்களாலும் முடியாது. பசுவின் உயிர்ச் சத்துகளுள் ஒன்றான மோர், வெப்பத்தைக் குறைப்பதோடு ஆரோக்கியப் பலன்களை அள்ளித் தருகிறது.
சாம்பார், ரசம், மோர் என்று உணவில் வரிசைப் பட்டியலே உண்டு. உணவருந்தும்போது இறுதியில் மோர் சாதம் சாப்பிட வேண்டும் என்று முன்னோர் வலியுறுத்தியதற்குக் பல காரணங்கள் உண்டு. செரிமானப் பாதையில் உள்ள சிறு சிராய்ப்புகளையும் புண்களையும் ஆற்றும் தன்மை மோருக்கு உண்டு. உடலுக்கு நலம் தரக்கூடிய `புரோ-பயாடிக்’ நுண்ணுயிரிகளைத் தன்னகத்தே கொண்டு, வெயில் காலத்தில் ஏற்படக்கூடிய வயிறு – குடல் சார்ந்த உபாதைகளை மோர் சீராக்குகிறது. செரிமானத்துக்கு உதவும் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கிறது.
கலோரிகள் நிறைந்த செயற்கை பானங்களுக்கு நடுவில், கலோரிகள் குறைந்த மோரானது உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது. கரிசாலை, கீழாநெல்லியை மோரில் கலந்து அருந்துவது காமாலை நோய்க்கான இயற்கை மருந்து. மாதவிடாய்க் காலங்களில் பனை வெல்லம் கலந்த மோரைப் பெண்கள் அருந்திவருவதால், மாதவிடாய்த் தொந்தரவுகள் குறையும். கால்சியம், பாஸ்பரஸ், ரிபோஃபுளோவின் போன்ற சத்துகள் மோரில் அதிக அளவில் இருப்பதால் எலும்பு, தசைகளின் வலிமைக்கும், நரம்புகளின் செயல்பாட்டுக்கும் உதவுகிறது. அடிக்கடி தசைப்பிடிப்பால் அவதிப்படுபவர்களுக்கு மோர் சிறந்தது. தோல் நோய் உள்ளவர்கள் அதிக அளவில் நீர்மோர் அருந்துவதால், நோய் விரைவில் குணமடையும். வாய்ப் புண், வயிற்றுப் புண் உள்ளவர்கள், மணத்தக்காளி பழம் கலந்த மோரைக் குடித்துவரப் புண்கள் விரைவில் ஆறும்.
உடலில் உண்டாகும் வீக்கம், ரத்தக் குறைவு, பேதி, பசியின்மை, தாகம், உடல் வெப்பம் போன்றவற்றுக்குப் பசுவின் மோர் சிறந்தது. கறிவேப்பிலைப் பொடியை மோரில் கலந்து பருக, பசி அதிகரிப்பதோடு ரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். மூலம் மற்றும் கருப்பை நோய்களுக்கு, கற்றாழைக் கூழை மோரோடு கலந்து குடிப்பது மிகச் சிறந்தது.
வெயில் காலத்தில் உண்டாகும் சிறுநீர் எரிச்சல், நீர் சுருக்கு போன்ற உபாதைகள் வராமல் தடுக்க மோர் குடிப்பது அவசியம். மோர் அருந்துவதால் குடற்புண், கண்ணெரிச்சல், கைகால் எரிச்சல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம். குளிர்ச்சிக்காக ஐஸ் கட்டிகளை மோரில் கலந்து குடிப்பதைத் தவிர்த்து, மண் பானைகளில் குளிரூட்டப்பட்ட மோரைப் பயன்படுத்தலாம். மோரின் குளுமையோடு பானையின் குளுமையும் சேர்வதால் வெப்பத்தைக் குறைக்கும் அற்புதமான பானமாகும். அலுவலகத்துக்குச் செல்வோர், பள்ளிக் குழந்தைகள், நீண்ட தூரப் பயணம் மேற்கொள்வோர், புட்டிகளில் நீருக்குப் பதிலாக நீர்மோரையே தாகம் தணிக்க எடுத்துச் செல்லலாம். வெயில் காலங்களில் உண்டாகும் நீரிழப்பை ஈடுசெய்வதில் மோருக்கு முக்கியப் பங்குண்டு. தாகத்தை நிவர்த்தி செய்து, சிறுநீர் பெருக்கியாக மோர் செயல்படுகிறது.
மது, புகையிலையால் உடலில் சேர்ந்திருக்கும் நஞ்சை வெளியேற்ற, தினமும் புதினா கலந்த மோர் குடிப்பது நல்ல பலனைக் கொடுக்கும். உடலில் சேர்ந்த கழிவைச் சிறுநீரின் மூலம் வெளியேற்றும் குணம் மோருக்கு உண்டு.

